எனக்குத் திருமணமாகி ஓராண்டில் முதல் பெண் குழந்தை பிறந்ததும் குடும்பத்தில் அனைவரும் மகிழ்ந்தனர். உறவினர்கள் அனைவரும் நான் புண்ணியம் செய்திருப்பதால்தான் பெண் குழந்தை பிறந்திருப்பதாக வாழ்த்தினார்கள்.
திருமணமானதும் தனிக்குடித்தனம் இருக்கும் சூழ்நிலை. அதனால், நானும் என் மனைவியும் மட்டுமே குழந்தையைப் பார்த்துக்கொள்வோம். சில நேரம் இரவில் அவள் அழுவாள். எங்களுக்குத் தூக்கம் இருக்காது. கஷ்டமாக இருக்கும். எனக்குக் கோபம்கூட வந்ததுண்டு. அப்போதுதான் என் தாய், தந்தை என் நினைவு வாசலில் வந்து நின்றனர். என்னை எப்படி வளர்த்திருப்பார்கள் என்று யோசித்தபோது கண்ணீர் வந்தது.
நாம் நம் பிள்ளையை வளர்க்கும் போதுதான் நம்மை வளர்த்த பெற்றோர் மீது மரியாதை அதிகரிக்கிறது. மகளது முதல் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண் டாடினோம். எங்களுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தபோது, மருத்துவமனையில் என் மனைவியின் அம்மா அழுது விட்டார். “ஆண் பிள்ளை என்று நினைத்தேன்”என்று என் அம்மாவும் சொல்லிவிட்டு வாயளவில், “எந்தப் பிள்ளையானால் என்ன” என்று சொன்னது, அவர்கள் மனதிலும் ஆண் பிள்ளைதான் வேண்டும் என்கிற எண்ணம் வேரூன்றி இருந்ததைக் காட்டியது.
மகள் பிறந்த தகவலை அம்மா போனில் யாருக்கோ சொன்னபோது, “மறுபடியும் பெண் பிள்ளையா? அடடா” என்று அவர்கள் பேசியது என் காதில் விழுந்தது. பார்க்க வந்த உறவினர்கள் எல்லாரும் மறுபடியும் பெண் பிள்ளையா என்று கேட்டபோது என் மனதிலும் ஆண் பிள்ளையாக இருந்திருக்கலாமோ என்று தோன்றியது. அப்படிக் கேட்டவர்களில் அத்தை, அக்கா, சித்தி, பெரியம்மா, தங்கை என்று பலரும் பெண்ணாகத்தான் இருந்தார்கள். என்னுடைய மாமா, அண்ணன், நண்பர்கள் என்னிடம், “உன் கடைசிக் காலத்தில் உனக்குக் கவலை இல்லை. உன்னைப் பார்த்துக்கொள்ள பெண் குழந்தைகள் இருக்கின்றனர்” என்றனர். அது ஆறுதல் கூறுவது போல்தான் இருந்தது. நாளடைவில் அதை மறந்துவிட்டார்கள்.
மகள்கள் வளர வளரப் பெண் பிள்ளைகள் நமக்கு மகள்கள் மட்டுமல்ல, என் தாய் தந்தை இருவரும் ஒன்று சேர்ந்து வந்ததைப் போல் உணர்ந்தேன். என் தாய்க்கு ஆற்ற மறந்த அத்தனையையும் மகள்களுக்குச் செய்வதாக உணர்ந்து சாப்பாடு ஊட்டுவது, குளிக்க வைப்பது என்று சந்தோஷத்தில் தத்தளிக்கிறேன். பெண் பிள்ளை இருந்தால் மட்டுமே தாயின் பேரன்பை ஒவ்வொரு நாளும் உணர முடியும். குழந்தையில் ஆண் என்ன, பெண் என்ன? ‘ஆண் வாரிசு’ தொடர்பாக மக்கள் மனங்களில் ஊறிக்கிடக்கும் பெண்ணுக்கு எதிரான சிந்தனை மறைந்தால்தான் மகள்களையும் பல குடும்பங்களில் மகிழ்வுடன் வரவேற்பார்கள்.
- பாலா, திருச்சி.