சு
ரேஷின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பெற்றோர் வேலைக்குச் செல்பவர்கள். இருவரும் சம்பாதித்தால்தான் குடும்பத்தை நடத்த முடியும். சுரேஷ் பள்ளிக்குக் கிளம்பும்போதே அவனுடைய பெற்றோரும் வேலைக்குக் கிளம்பிவிடுவார்கள். போகும்போது வீட்டின் சாவியை எதிர்வீட்டு பிரேமா அத்தையிடம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கொடுத்துவிட்டுச் செல்வார்கள்.
ஒரு நாள் சுரேஷ் வீட்டுக்கு வந்ததும், “டேய் சுரேஷ் இன்னைக்கு எங்க வீட்டில் சூடா வடை, பஜ்ஜி எல்லாம் செய்திருக்கிறேன். கை, கால் முகம் கழுவிக்கிட்டு வாடா” என்று பிரேமா அத்தை கூறினார். பள்ளியிலிருந்து சோர்வாக வந்த சுரேஷுக்கு அவர் சொன்ன விஷயம் மகிழ்ச்சியாக இருந்தது. வடையையும் பஜ்ஜியையும் ஒரு பிடி பிடித்தான். எப்போதும் ஆறிப்போன உணவைச் சாப்பிட்ட சுரேஷுக்குச் சூடான பலகாரங்கள் புத்துணர்ச்சியைத் தந்தன. தினமும் மாலை வேளைகளில் அங்கேயே சிற்றுண்டி சாப்பிடும்படி சுரேஷிடம் அவர் சொன்னார்.
அதன்படி தினமும் மாலையில் எதிர் வீட்டில் சிற்றுண்டியைச் சாப்பிடத் தொடங்கினான் சுரேஷ். ஒரு நாள் கடைக்குச் சென்று மளிகைப் பொருட்களை வாங்கி வரும்படி சுரேஷிடம் பிரேமா கூறினார். முதலில் தயங்கிய சுரேஷ், பின்னர் கடைக்குச் சென்றான். இன்னொரு நாள் படிக்கட்டில் இருக்கும் தண்ணீர் கேனை எடுத்துவரும்படி சொன்னார். ஏற்கெனவே சோர்வாக இருந்த சுரேஷுக்கு அத்தை சொன்ன வேலையை நிராகரிக்க முடியவில்லை. கனமான புத்தகப் பையைத் தோளில் சுமந்துகொண்டு ஒவ்வொரு படிக்கட்டாகத் தண்ணீர் கேனை நகர்த்தி எடுத்துக்கொண்டு அவர்கள் வீட்டு வாசலில் வைத்தான்.
சுரேஷிடம் அடிக்கடி இப்படி சின்னச் சின்ன வீட்டு வேலைகளைச் செய்யச் சொன்னார் பிரேமா. அது அவனுக்கு அலுப்பைத் தந்தது. இதிலிருந்து தப்பிக்க ஒருவழி வீட்டுச் சாவியைத் தன்னிடமே கொடுக்கும்படி பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என நினைத்தான். பெற்றோர் வீட்டுக்கு வந்ததும் அவர்களிடம் அதைச் சொன்னான். பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வராமல் நண்பர்களுடன் சேர்ந்து வெளியே சுற்றிவிட்டுத் தாமதமாக வருவதற்காகத்தான் சுரேஷ் சாவியைக் கேட்கிறான் என்று அவனுடைய பெற்றோர் நினைத்தார்கள். அவர்கள் எதிர் வீட்டில் சாவி கொடுப்பது, சுரேஷ் எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருகிறான், என்னவெல்லாம் செய்துகொண்டிருந்தான் என்பதைக் கண்காணிக்கத்தான்.
இன்றைக்குக் கூட்டுக் குடும்ப அமைப்பு காணாமல் போய்விட்டது. இதனால் வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் குழந்தைகளைப் பெரும்பாலும் எதிர்வீட்டுகாரர், நெருங்கிய உறவினர்களின் கண்காணிப்பில்தான் விட வேண்டியுள்ளது. எதிர்வீட்டுக்காரர், பக்கத்து வீட்டுக்காரர்கள் தங்களுடைய குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். ஒருவருக்கு உதவுவது தவறில்லை. ஒரு குழந்தைக்கு என்ன தேவையாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு அதைச் செய்து கொடுத்து, தங்கள் சொந்த வேலைக்காகப் பயன்படுத்தினால் அது தவறு. இதுபோன்ற செயலால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள். நம் குழந்தைகளை வேறொருவரின் கண்காணிப்பில் விட்டுவிட்டு வரும்போது யாரிடம் விடுகிறோமோ அவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அண்டை வீட்டார் அல்லது நெருங்கிய உறவினர் குறித்து குழந்தைகள் ஏதாவது புகார் செய்தால் அதைப் பெற்றோர்கள் காது கொடுத்துக் கேட்க வேண்டும். குழந்தைகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். எல்லா விஷயங்களையும் குழந்தைகள் பெற்றோர்களிடம் சகஜமாகப் பகிர்ந்துகொள்ளும் வகையில் சூழ்நிலையை உருவாக்குவது பெற்றோரின் கடமை.
-கட்டுரையாளர், குழந்தைகள் நல மற்றும் வளரிளம் பருவ சிறப்பு மருத்துவர்,
தொடர்புக்கு: dryamunapaed@yahoo.com