இல்லத்தரசிகளைக் குறிவைத்து நடத்தப்படும் மோசடிகளில் முதன்மையானது ‘வீட்டிலிருந்தபடியே வேலை செய்து சம்பாதிக்கலாம்’ என்பதுதான். நொய்டாவைச் சேர்ந்த கார்த்திகா என்பவர், இப்படியான விளம்பர அறிவிப்பைப் பார்த்து 13 லட்சம் ரூபாய்க்கு மேல் ஏமாந்திருக்கிறார்.
‘நாங்கள் குறிப்பிடும் வீடியோவைப் பார்த்து லைக், சப்ஸ்கிரைப் செய்தால் மட்டும் போதும், வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம்’ என்ற குறுஞ்செய்தி கார்த்திகாவுக்கு வாட்ஸ் அப் மூலம் வந்திருக்கிறது. அதை நம்பியவர், அவர்கள் குறிப்பிட்டிருந்த இணைப்புக்குச் சென்று தகவல்களைக் கேட்டிருக்கிறார். சொன்னதைப் போலவே ரூ.50, ரூ.150 என்று ஒவ்வொரு காணொளிக்கும் பணம் வர, மூன்று வயது மகனைப் பார்த்துக்கொண்டே இந்த வேலையைச் செய்யலாம் என கார்த்திகா நினைத்தார். பிறகு தங்களது நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் பல மடங்கு திரும்பக் கிடைக்கும் என்று அவருக்குச் சொல்லப்பட்டுள்ளது.
முதல்கட்டமாகச் சில ஆயிரங்களையும் திரும்பப் பெற்றிருக்கிறார் கார்த்திகா. அது தந்த நம்பிக்கையில் அடுத்தடுத்து லட்சக்கணக்கில் பணத்தைச் செலுத்தியிருக்கிறார். ஒரு கட்டத்தில் ஆறு லட்சம் ரூபாய் கடன் பெற்றுப் பணத்தைச் செலுத்திய பிறகு வரித்தொகையே ஐந்து லட்சத்தைத் தாண்டிவிடும் என மோசடி நிறுவனத் தரப்பிலிருந்து கார்த்திகாவுக்குச் சொல்லப்பட்டது. அப்போதுதான் அவர் விழித்துக்கொண்டார். ரூ.13 லட்சத்துக்கும் மேல் இழந்த நிலையில் இந்த மோசடி குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் கார்த்திகா. மோசடி விளம்பரங்களை நம்பக் கூடாது என்பதற்கு இந்தச் சம்பவமே உதாரணம்.
பதில் அளிக்காத அரசு
இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரங்கள் உலகையே உலுக்கியுள்ளன. குறிப்பாக, மே 4 அன்று இரண்டு பெண்கள் ஆடையின்றி ஆண்கள் சூழ அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஜூன் 12 அன்றே தேசிய மகளிர் ஆணையத்துக்குப் புகார் அளிக்கப்பட்டதாகவும் அது தொடர்பாக ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டது. ஜூலை 19 அன்று அந்தச் சம்பவம் தொடர்பான காணொளி வெளியான பிறகே தேசிய மகளிர் ஆணையம் இது தொடர்பாகப் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி ரேகா சர்மா, “இரண்டு பெண்கள் ஆடையின்றித் துன்புறுத்தப்பட்டது தொடர்பான புகார் எதுவும் அப்போது வரவில்லை. பெண்கள் மீதான வன்முறை குறித்து வேறு சில புகார்கள் வந்தன. அது தொடர்பாக விசாரிப்பதற்காக மணிப்பூர் அரசை மூன்று முறை தொடர்புகொண்டோம். எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. இரண்டு பெண்களைச் சித்திரவதைக்குள்ளாக்கிய காணொளி வெளியானததைத் தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணையில் இறங்கியுள்ளது” என்றார்.