பெண் இன்று

முகம் நூறு: சைக்கிளில் சுற்றும் ஆச்சரியக் காவலர்

என்.சன்னாசி

ரு காலத்தில் சைக்கிள் வைத்திருந்தாலே கிராமப்புறத்தில் மதிப்பு அதிகம். சைக்கிள் மெல்ல மெல்லத் தேய்ந்து, தற்போது பள்ளி மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வாகனமாக மாறிப்போனது. பைக், கார் போன்ற மோட்டார் வாகனங்களில் பறக்கவே பலரும் ஆசைப்படும் இந்தக் காலத்திலும், மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் கே.வளர்மதி சைக்கிளிலேயே மதுரை வீதிகளில் உலா வருகிறார். சிறுவயதில் ஆசைப்பட்ட சைக்கிளை வாங்க முடியாத வறுமையே, வசதி வந்த பின்னும் அவரை எளிமையான வாழ்க்கைக்குப் பழக்கியது என்கிறார்.

“மதுரை வடக்கு வெளி வீதியில் பிறந்து வளர்ந்தேன். மாநகராட்சிப் பள்ளியில் படித்தேன். 10-ம் வகுப்பு முடித்து, ஒரு ஓட்டலில் வேலை செய்தேன். என் தோழி மலர்விழி போலீஸ் வேலையில் இருந்தார். அவரே நானும் போலீஸ் வேலையில் சேர முடியும் என்று நம்பிக்கை ஊட்டினார். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு 2000-ல் தேர்வானேன். 1996-ல் அப்பாவை இழந்திருந்தேன். காவலர் பணிக்குத் தேர்வான தகவலைத் தாயிடம் சொன்னேன். பணியில் சேரும் முன்பே, அவரும் இறந்துவிட்டார்.

malar (1)

இந்தப் பணியை நான்கு பேருக்கு உதவக் கிடைத்த வாய்ப்பாகப் பார்க்கிறேன். அரசு வேலை, நல்ல சம்பளம் என்று வசதி வந்தாலும் எளிமையாக வாழ முடிவெடுத்தேன். அதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு என்னால் இயன்ற சிறு பங்களிப்பாகப் புகை மாசுவை வெளியிடும் இருசக்கர வாகனத்தைத் தவிர்த்தேன். பணிக்குச் சேர்ந்ததற்கு முன்பிருந்து கடந்த 20 ஆண்டுகளாக எங்கு சென்றாலும், சைக்கிளில்தான் செல்கிறேன். சைக்கிள் இல்லை என்றால் பஸ் அல்லது ஆட்டோவில் செல்வேன். நினைத்தால் மானிய விலையில் கார் வாங்கலாம். ஆனாலும், அதில் விருப்பம் இல்லை. திருமண வாழ்கையை நம்பவில்லை. எளிமையாக ஆன்மிக வழியில் வாழ்கிறேன்.” என்கிறார் வளர்மதி.

அத்துடன் சைக்கிள் ஓட்டுவதால் தனக்குக் கிடைத்துள்ள நன்மைகளை விவரிக்கிறார் வளர்மதி. “தொடர்ந்து சைக்கிள் ஓட்டுவதால் தலைமுதல் பாதம்வரை ரத்த ஓட்டம் சீராக இருக்கிறது. உடலில் கெட்ட நீர் வியர்வையாக வெளியேறிவிடுகிறது. இரவில் தாமதமாகத் தூங்கினாலும், காலையில் சுறுசுறுப்புடன் எழ முடிகிறது. காவல் துறையில் 24 மணி நேரமும் பணிக்குத் தயாராக இருக்க வேண்டும், சைக்கிள் ஓட்டுவதால் எப்போதும் சோர்வின்றி இருக்க முடிகிறது” என்கிறார்.

SCROLL FOR NEXT