பெண் இன்று

பயணங்கள் முடிவதில்லை: சாலைக்கு நடுவே ஓடும் ரயில்

செய்திப்பிரிவு

பயணங்கள் இனிமையானவை. அதனினும் இனிமை பயண அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழ்வது. மலேசியா, இலங்கை, கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம், அந்தமான் என்று பல இனிய பயணங்கள் என் இலக்கியப் பயணங்களாக அமைந்தன. மார்ச் 2023இல் மேற்கு வங்க மாநிலத்தில் டார்ஜிலிங் நகரத்திற்குச் சுற்றுலாப் பயணமாகச் சென்றது வேறுபட்ட மகிழ்வினைத் தந்தது.

பனி போர்த்திய சூழலில் மலை மீது குறுகிய பாதையில் வாகனத்தில் அமர்ந்து, ஏறும்போது வானுலகில் பயணிப்பது போன்ற உணர்வுதான் எனக்கு ஏற்பட்டது.

நடுங்கும் குளிரில் பள்ளிக் குழந்தைகள் சீருடைக்கு மேல் கம்பளி உடைகளை அணிந்துகொண்டு, பூக்களுக்குக் கால்கள் முளைத்தது போல் சாலையில் நடந்துசென்ற காட்சி இன்னும் என் கண்களை விட்டு அகலவேயில்லை.

டார்ஜிலிங் என்றாலே தேயிலைத் தோட்டங்கள்தான். தேயிலைத் தோட்டப் பெண்கள் அழகாகத் தலைவாரி உடை உடுத்தி உற்சாகமாகப் பணிக்குச் சென்றாலும் அவர்களின் உழைப்பின் பின்னுள்ள வலி எனக்குப் புரிந்தது. நானும் அத்தோட்டத்தில் தேயிலையைப் பறிப்பதுபோல் ஒளிப்படம் எடுத்துக்கொண்டு அவர்களுடன் உரையாடி அவர்களின் வாழ்க்கை முறை குறித்துத் தெரிந்துகொண்டேன். அட்டைப் பூச்சி கடித்து ரத்தம் உறிஞ்சும் போதிலும் அப்பூச்சியைப் பிடுங்கி எறிந்துவிட்டுத் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று அவர்கள் தங்கள் மொழியில் சைகையுடன் கூறியதும் என் மனம் கனத்தது.

டார்ஜிலிங்கின் புகழ்பெற்ற உணவு மோமோ. சைவம், அசைவம் இரண்டும் உண்டு. சாலைகளின் நடுவே ரயில் பாதை செல்கிறது. ரயில் செல்லும் நேரம் தவிர மற்ற நேரத்தில் தெருவோரக் கடைகளை ரயில் பாதையின் மேலேயே அமைக்கின்றனர். பொம்மைத் தொடர் வண்டி சிறியோர், பெரியோர் அனைவரையும் மகிழ்விக்கிறது.

சில்லென்ற குளிரைச் சிலிர்ப்புடன் அனுபவித்துக்கொண்டே மலையிலிருந்து வண்டியில் இறங்கி வந்தோம். வழியில் மிர்கி ஏரி, நேபாளம் எல்லை ஆகியவற்றைப் பார்த்து ரசித்தோம். பின் ஜல்பாய்குரி ரயில் நிலையத்தை அடைந்து ஊர் திரும்பினோம். இன்றும் என் உணர்வில் அக்குளிர்ச்சியை அனுபவித்துக் கொண்டேயிருக்கிறேன்.

- மணிமேகலை, ஓசூர்.

போவோமா ஊர்கோலம்...

தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் பயண அனுபவங்களைப் பகிரலாம். வியந்த இடங்கள், மலைக்க வைத்த மனிதர்கள்,‌‌ கற்றுக்கொண்ட பாடங்கள் என உங்கள் பயணத்தை இனிதாக்கியவை குறித்து எழுதி அனுப்புங்கள். சுற்றுலாவில் நீங்கள் எடுத்துக்கொண்ட படங்களையும் அனுப்புங்கள்.

முகவரி: பெண் இன்று, இந்து தமிழ்திசை,
கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.
மின்னஞ்சல் முகவரி: penindru@hindutamil.co.in

SCROLL FOR NEXT