பெண் இன்று

வாசகர் வாசல்: ஆண்களுக்காகப் போராடும் பெண்கள்

Guest Author

பெண்கள் யாரும் ஆண்களை எதிர்க்கவில்லை; ஆணாதிக்கத்தைதான் எதிர்க்கிறார்கள். பெண் என்பதாலேயே அவள் தனக்கு அடிமை என்னும் ஆணின் முட்டாள்தனத்தை எதிர்க்கிறார்கள். வீட்டில் அவள் எவ்வளவுதான் பார்த்துப் பார்த்துச் சமைத்துப் போட்டாலும் வெந்நீர்கூடப் போடத் தெரியாதவன் அவளைக் குறைகூறும்போது அவனது தகுதியற்றத்தனத்தை எதிர்க்கிறார்கள். குழந்தை வளர்ப்பில் தங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதைப் போல நடந்துகொள்ளும் பொறுப்பற்றத்தனத்தை எதிர்க்கிறார்கள். அவளுடைய சின்ன சின்ன ஆசைகளைக்கூடக் காலடியில் நசுக்கிப் போட்டு அதை ஒரு சாதனையாக எண்ணும் கொடூரத்தனத்தை எதிர்க்கிறார்கள்.

தன் சம்பளம் எவ்வளவு என்பதுகூட மனைவிக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டு அவளது சம்பளத்தில் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்குக் கேட்கும் வஞ்சகத்தை எதிர்க்கிறார்கள். உடுத்துகிற உடையில் இருந்து ஒவ்வொன்றும் தன் விருப்பப்படியே நடக்க வேண்டும்; அவளுக்கும் சுய விருப்பங்கள் உண்டு என்பதை மறக்கிற அந்த ’மறதி’யை எதிர்க்கிறார்கள். மனைவியை வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவளது அத்தியாவசியத் தேவைக்குக்கூடக் காசு கொடுக்க மறுக்கும் ஆணின் அடாவடித்தனத்தை எதிர்க்கிறார்கள்.

இளமைக் காலத்தில் தாறுமாறாக அதிகாரம் பண்ணிவிட்டு வயதான காலத்தில் மனைவியைச் சரணாகதி அடையும் கணவனை அவள் துச்சமாக மதிப்பதில்லை என்பது எத்தனை கணவன்களுக்குப் புரியும்? இந்தப் புரிதல்கூட இல்லாமல்தானே அவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். இன்றும்கூடப் பல பெண்கள் தங்கள் சுயமரியாதையைக் காக்க தினம் தினம் போராடிவருகிறார்கள். இத்தகைய இழிநிலையை ஏற்படுத்தும் ஆணின் சுபாவத்தை எதிர்த்துத்தான் பெண்கள் போராடுகிறார்கள். ஒரு பெண் எவ்வளவுதான் திறமைசாலியாக இருந்தாலும் அநியாயத்துக்கு அவளை மட்டம் தட்டி, தான் எதற்குமே லாயக்கு இல்லாதவள் என்று அந்தப் பெண்ணே நினைக்கும் அளவுக்கு அவளை வதைக்கிற ராஜதந்திரத்தை என்னவென்று சொல்வது.

பெண் என்பவள் பூவிலும் மெல்லிய பூங்கொடி, தியாகத்தின் சின்னம், பொறுமையின் சிகரம் என்று காலம் காலமாகக் கூறப்பட்டுவரும் கட்டுக்கதைகளை நம்பும் அவர்களின் மூடத்தனத்தை விவரிக்கத் தமிழில் வார்த்தைகள் உண்டா என்ன? இன்னும் இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். தாத்தா, அப்பா, அண்ணன், தம்பி, மகன் என்று ஆண் உறவுகளை நேசிக்கும் பெண்கள் எப்படி ஆண்களை எதிர்ப்பவர்களாவார்கள்?

பெரும்பாலான ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் அவர்கள் வளர்க்கப்படும் முறைதான். பெண் என்பவள் உண்மையிலேயே எப்படிப்பட்டவள் என்பது சொல்லித் தரப்படாமலேயே அவன் வளர்கிறான். ஒரு பெண் என்ன நினைப்பாள், என்ன எதிர்பார்ப்பாள், எதற்குத் தலை வணங்குவாள், அவளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், இவையெல்லாம் எத்தனை பேருக்குத் தெரியும்? இவற்றில் எல்லாம் நம் நாட்டு ஆண்கள் பெரும்பாலும் பூஜ்ஜியம்தான். இவை எல்லாம் தெரியாமல் இருப்பதால்தான் ஆண் அறியாமையில் கிடக்கிறான். அவனை அந்த அறியாமையில் இருந்து மீட்டெடுக்கத்தான் பெண்கள் யுகம் யுகமாகப் போராடிவருகிறார்கள். உண்மையில் இது பெண்களுக்கான போராட்டம் அல்ல. அறியாமை இருளில் மூழ்கிக் கிடக்கும் ஆண்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் போராட்டம். இது ஆண்களுக்கான போராட்டம். அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது எனக்கு.

- ஜே. லூர்து, மதுரை.

நீங்களும் சொல்லுங்களேன்...

தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவத்தில் இருந்து கடைசியாகப் படித்த புத்தகம் வரை பிறருக்குப் பாடமாக அமையும் அனுபவம்
எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள்.

SCROLL FOR NEXT