பள்ளிப் பருவத்தில் அப்பா வாங்கி வரும் ‘ஆன்மிக மலர்’, ‘அவள் விகடன்’ தொடங்கி, பழைய புத்தகக் கடைகளில் அம்மா வாங்கி வரும் ‘ராணி முத்து’, ‘கண்மணி’, ராஜேஷ்குமார் க்ரைம் நாவல்கள் எனத் தொடர்ந்து இஞ்சி வாங்கும் இம்மியளவு காகிதத்தைக்கூட இன்று வரை நான் விட்டுவைப்பதில்லை.
நாளிதழ்களோடு வரும் இணைப்பிதழ்களின் வாயிலாக எண்ணற்ற பொது அறிவுத் தகவல்களைப் படித்துத் தெரிந்துகொண்டிருக்கிறேன். நூலகங்களில் உறுப்பினராகச் சேர்ந்து பல வகையான புத்தகங்களையும் வாசித்து வருகிறேன். இன்னும் இன்னும் வாசிப்பேன்.
நூல்களைப் படிக்க, படிக்க என்னுடைய வாசிப்பு அவாவும் விரிந்துகொண்டேதான் போகிறது. அந்த வாசிப்பு என்னை எழுத்து வரை இழுத்துச் சென்றுள்ளது. வாசிப்பை என்னளவில் நிறுத்திவிடாமல் என் பிள்ளை, என்னிடம் படிக்க வரும் பிள்ளைகள் என அனைவருக்கும் புத்தகம் வாசிப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறேன்.
இணைய வாசிப்பு எளிதாகிவிட்ட இன்றைய சூழலில் புத்தக வாசிப்பு குறைந்துவிட்டது. பல மலிவு விலை கையடக்கப் புத்தகங்கள் தரமானதாகக் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிக் கொடுத்துப் பிள்ளைகளின் வாசிப்பை மேம்படுத்தலாம். தரமான புத்தங்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமானது.
புத்தக வாசிப்பு என்பது நம்மை அறியாமலே நமக்குள் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். பழுத்த அனுபவம் உடைய மனிதனுக்குக்கூடப் புத்தகத்திடமிருந்து பெற வேண்டிய அனுபவம் ஏதோ ஒன்று மிச்சம் இருக்கும். எல்லா வகையான புத்தகங்களையும் வாசியுங்கள். அவை உங்கள் வாழ்க்கையில் ஒளிகூட்டும்.
- பவித்ரா சுந்தரம், பொன்னமராவதி, புதுக்கோட்டை.
புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக் கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். நினைத்துப் பார்கக முடியாத பேரதிசயங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் உங்கள் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்களது ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள்.