இ
ன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் பல பெற்றோர்கள், பிள்ளைகளுக்குச் சிறந்த வழிகாட்டியாக இருப்பதற்கான நேரத்தை ஒதுக்குவதில்லை. இதனால் பிள்ளைகள் ஆசிரியர், பயிற்சியாளர் அல்லது தங்களுடன் பழகும் வெளியாட்களை வழிகாட்டிகளாகத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். அல்லது பெற்றோரே தங்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு நபரை தங்கள் பிள்ளைகளுக்கான வழிகாட்டியாகத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களைத் தவிர்த்து வெளியிலிருந்து வரும் வழிகாட்டிகள் உண்மையாகவே நம் பிள்ளைகளுக்கு நல்லவற்றை மட்டும்தான் கற்றுத் தருவார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
கோவையில் ஒரு தொழிலதிபரின் மகன் விஷால் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வீட்டுக்கு ஒரே பையன் என்பதால் சிறுவயதிலிருந்தே அவன் என்ன கேட்டாலும் அவனுடைய பெற்றோர் வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். அவன் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே கைபேசி, கணினி, வீடியோ கேம் என எல்லாத் தொழில்நுட்ப சாதனங்களையும் வாங்கிக் கொடுத்துவிட்டார்கள். விஷாலின் அப்பா புதிதாக கார் ஒன்றை வாங்கினார். அந்த காரில் வாரத்துக்கு ஒருமுறையாவது கேரளாவுக்குச் செல்வது வழக்கம். நெடுஞ்சாலை வழியாகச் செல்லும்போது விஷாலுக்கு கார் ஓட்டக் கற்றுக் கொடுத்திருந்தார் அவனுடைய அப்பா. விஷால் நல்ல உயரத்துடன் இருந்ததால் அவனுக்கு கார் ஓட்டுவதில் எந்தச் சிரமமும் ஏற்படவில்லை.
காரை நன்றாக ஓட்டப் பழகிய பின் ஒவ்வொரு முறையும் அவர்கள் கேரளா செல்லும்போது விஷால்தான் காரை ஓட்டுவான். மகன் இளம் வயதிலேயே இப்படிக் கைதேர்ந்த ஓட்டுநரைப் போல் கார் ஓட்டுவது விஷாலின் பெற்றோருக்குப் பெருமையாக இருந்தது. இதை உறவினர்களிடமும் நண்பர்களிடமும் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்டார்கள்.
பாலக்காட்டில் உள்ள திரைப்பட இயக்குநர் ஒருவர் விஷாலின் தந்தைக்கு நல்ல நண்பர். அதனால் அவர்கள் எப்போது பாலக்காடு சென்றாலும் அந்த இயக்குநருடன் சுற்றுலா செல்வது வழக்கம். விஷாலுக்கும் திரைப்படத் துறையில் சேர வேண்டும் என்ற ஆர்வம் இருந்த காரணத்தால் அவன் அந்த இயக்குநரிடம் நெருங்கிப் பழகுவதை அவனுடைய பெற்றோர் அனுமதித்திருந்தனர். பின்னர், ஒவ்வொரு வார விடுமுறையின்போதும் விஷால் தனியாக காரை எடுத்துக்கொண்டு பாலக்காடு சென்று வரத் தொடங்கினான்.
வெள்ளிக்கிழமை மாலை சென்றால் ஞாயிற்றுக்கிழமை மாலைதான் வீடு திரும்புவான். அவனுடைய பெற்றோருக்கும் அவன் எதிர்காலத்தில் சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. எனவே, விஷால் வார விடுமுறை நாட்களை அந்த இயக்குநருடன் கழிப்பதை அவனுக்கான பகுதிநேரத் தொழிற்பயிற்சியாகக் கருதினார்கள்.
இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் திரைப்பட இயக்குநரைப் பார்க்கச் செல்லும் விஷால் அங்கு என்ன செய்வான் என அவனுடைய அம்மா யோசிக்கத் தொடங்கினார். அப்போதிலிருந்து விஷாலின் நடவடிக்கையைக் கவனிக்க ஆரம்பித்தார். முன்பைவிட விஷாலின் பேச்சிலும் நடவடிக்கையிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டு இருப்பதைக் கவனித்திருக்கிறார். அதேபோல் விஷால் முன்புபோல் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை என பள்ளியிலிருந்து புகார்கள் வரத் தொடங்கியிருந்தன. இதனால் கலக்கமடைந்த விஷாலின் அம்மா, விஷாலைக் கண்காணிக்கத் தொடங்கினார்.
வெள்ளிக்கிழமை மாலை விஷால் பாலக்காட்டுக்குக் கிளம்பியபோது அவனுடைய அம்மா வேறு ஒரு காரில் விஷாலுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து சென்றார். திரைப்பட இயக்குநர் இருக்கும் ஹோட்டலுக்கு விஷால் சென்றான். அங்கு அந்த இயக்குநருடனும் அவருடைய நண்பர்களுடனும் சேர்ந்து விஷால் மது அருந்துவதையும், புகைப் பிடிப்பதையும், தன்னுடைய வயதுக்கு மீறிய தகாத பேச்சுகளைப் பேசி அரட்டையடிப்பதையும் பார்த்து அதிர்ந்தார்.
தங்கள் மகன் திரைப்படத் துறை குறித்து ஏதாவது கற்றுக்கொள்வான் என நினைத்த பெற்றோருக்கு விஷாலின் நிலை கலக்கத்தைத் தந்தது. விஷாலை மதுப் பழக்கத்திலிருந்து மீட்டு பழைய நிலைக்குக் கொண்டுவருவது அவனுடைய பெற்றொருக்குப் பெரிய போராட்டமாக இருந்தது. 15 வயது நிரம்பிய மகன் வெளியே செல்கிறான் அதுவும் தனியாக என்கிறபோது அவன் போகும் இடத்தில் என்ன செய்வான், யாருடன் பழகுவான் என்பதை அவனுடைய பெற்றோர் கொஞ்சம்கூடச் சிந்தித்துப் பார்க்கவில்லை. மற்றொரு தவறு 15 வயது பையனுக்கு லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டக் கற்றுக் கொடுத்தது. காரை எடுத்துக்கொண்டு வெளியே செல்லும் மகனுக்கு ஏதாவது நடந்துவிடும் என்கிற அச்சம்கூட அவர்களிடம் இல்லாமல் இருந்திருக்கிறது.
பிள்ளைகள் யாருடன் பழகுகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பது பெற்றோரின் கடமை. வளரிளம் பருவக் குழந்தைகளுக்கு ஒரு வழிகாட்டி (மென்டர்) இருப்பது தவறில்லை. அதேசமயம் அந்த வழிகாட்டி காட்டும் பரிவும் அக்கறையும் குழந்தைகளை அடிமையாக்கிவிடக் கூடாது. அந்த நபர் இல்லையென்றால் தன்னால் சுயமாக ஒரு விஷயத்தைச் செய்யவோ யோசிக்கவோ முடியாது என்கிற நிலையைக் குழந்தைகளிடம் உருவாக்கக் கூடாது. குழந்தைகளுக்கான வழிகாட்டிகள் நல்லவர்களா, அவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதற்குத் தகுதியானவர்களா என்பதைப் பெற்றோர் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
கட்டுரையாளர்,குழந்தைகள் நல மற்றும் வளரிளம் பருவ சிறப்பு மருத்துவர்
தொடர்புக்கு: dryamunapaed@yahoo.com