பெண் இன்று

அழகிய கண்ணே 05: கண்டிப்பால் விளைந்த தீவினை

டாக்டர் எஸ்.யமுனா

ன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் குழந்தைகளிடம் பெற்றோர்கள் உரையாடுவதே குறைந்துவிட்டது. எப்போதும் அவர்களை அதட்டுவதும், மிரட்டுவதும், ஆணையிடுவதும் என நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இதனால், குழந்தைகள் தங்களுக்கு என்ன நேர்ந்தாலும் அதைப் பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ளாமல் போகும் சூழ்நிலை உருவாகிறது.

சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சிறுமியாக இருந்தபோதே அவளுடைய அப்பா இறந்துவிட்டார். அம்மா, வீட்டின் அருகில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். அவளும் தன் அம்மாவின் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு நன்றாகப் படித்துவந்தாள். அப்பா இல்லாத பெண் என்பதால் சித்ராவை மிகவும் கண்டிப்புடன் வளர்த்தார் அவருடைய அம்மா. சித்ரா 12-ம் வகுப்பு படித்தபோது தினமும் வெள்ளிக்கிழமை கோயிலுக்குச் சென்று நல்ல மதிப்பெண் கிடைக்க வேண்டும் என வேண்டிக்கொள்வாள். அம்மா வேலையிலிருந்து சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிட்டால் அம்மாவுடன் செல்வாள். அம்மாவுக்கு வேலையிருந்தால் தனியாகவே கோயிலுக்குச் சென்றுவிட்டு வருவாள்.

ஒருநாள் கோயிலுக்குச் சென்றபோது நேர்த்தியாக உடையணிந்துகொண்டு, கழுத்தில் தனியார் நிறுவனத்தின் அடையாள அட்டையோடு ஒருவர் நின்றிருந்தார். சித்ரா அவரைக் கவனிக்காமல் பிரகாரத்தைச் சுற்றிவந்தாள். ஆனால், அந்த நபர் சித்ராவைப் பார்த்துக்கொண்டே இருந்தார். அடுத்த முறை சித்ரா கோயிலுக்கு வந்தபோது அந்த நபரும் வந்திருந்தார். சித்ரா எப்போதும்போல் சாமி கும்பிட்டுவிட்டு கோயிலில் உட்கார்ந்துகொண்டிருந்தாள். அப்போது அந்த நபர் சித்ராவிடம் வந்து, “நான் தனியார் கம்பெனியில் வேலை செய்கிறேன். உங்களைப் பார்த்தால் நன்றாகப் படிக்கும் மாணவி போல் தெரிகிறது. ஏதாவது உதவலாம் என நினைக்கிறேன்” எனப் பேச்சு கொடுத்துள்ளார். அந்த நபர் பார்ப்பதற்கு நல்லவர்போலத் தெரிந்ததால் சித்ரா தனக்கு அப்பா இல்லை என்றும் குடும்ப நிலையையும் சொல்லியிருக்கிறாள்.

சித்ராவின் குடும்ப நிலையைத் தெரிந்துகொண்ட அந்த நபர், அவள் அடுத்த முறை கோயிலுக்குச் சென்றபோது, “இங்கு பக்கத்தில்தான் எனக்குத் தெரிந்த ஒருவர் டியூஷன் எடுக்கிறார். நீங்கள் விரும்பினால் உங்களை அங்கு சேர்த்து, படிக்கவைக்கிறேன்” எனக் கூறியுள்ளார். சித்ரா அதை மறுத்துவிட்டாள். சில நாட்கள் கழித்து சித்ரா மீண்டும் கோயிலுக்குச் சென்றபோது அந்த நபர் தன்னுடன் ஒரு டியூஷன் டீச்சரை அழைத்து வந்திருக்கிறார். சித்ராவிடம், “இவங்கதான் நான் சொன்ன டியூஷன் டீச்சர். இவங்க உங்களுக்காக கோயிலிலேயே டியூஷன் எடுப்பாங்க. அதற்கான கட்டணத்தையும் நானே தந்துவிடுகிறேன், என் விருப்பம் எல்லாம் நீங்கள் நன்றாகப் படிக்க வேண்டும், உங்கள் அம்மாவுக்கு நல்ல பெயர் வாங்கித்தர வேண்டும் என்பதுதான்” எனச் சொல்லியிருக்கிறார். சித்ராவும் நமக்கு இவ்வளவு நல்லது செய்கிறாரே என அந்த நபரை நம்பத் தொடங்கினாள். இது எதுவும் சித்ராவின் அம்மாவுக்குத் தெரியாது. சிறுவயதிலிருந்தே ‘வெளியாட்களிடம் பேசக் கூடாது, மீறினால் அடி விழும்’ என சித்ராவின் அம்மா மிரட்டிவைத்திருந்ததால் அவரிடம் எதையும் சொல்லவில்லை. “கோயிலில் இலவசமாக டியூஷன் எடுக்கிறார்கள், அதனால்தான் அங்கே போகிறேன் ” என்று மட்டும் சொல்லி இருக்கிறாள்.

இப்படியே மூன்று மாதங்கள் சென்றன. இடைப்பட்ட நாளில் அந்த நபர் மாதம் ஒரு முறை மட்டும் வந்து டியூஷன் தொகையைக் கொடுத்துவிட்டுச் செல்வார். பின்னர், ஒருநாள் கோயிலுக்கு வந்த அவர் சித்ராவிடம், “வேறு ஒரு இடத்தில் இதேபோல் டியூஷன் எடுக்கிறார்கள். நீ என்னுடன் வந்தால் நாம் இருவரும் சென்று விசாரித்துவிட்டு வரலாம்” என்று கூறியிருக்கிறார். சிறு தயக்கத்துக்குப் பிறகு சித்ராவும் அந்த நபரை நம்பி அவருடன் சென்றிருக்கிறார். சித்ராவைத் தனியாக அழைத்துச் சென்ற அவர், அவளைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளார்.

இன்றைக்குப் பல வளரிளம் பருவப் பெண்களையும் ஆண்களையும் சிலர் நலவிரும்பிகள்போல் நடித்து அவர்களைத் தங்களுடைய சுய தேவைக்காகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இப்படிச் செய்வதை ஆங்கிலத்தில் sugar daddy concept என்கிறார்கள். சித்ரா விவகாரத்தைப் பொறுத்தவரை அந்த நபர்தான் குற்றவாளி என்பதை மறுக்க முடியாது. அம்மாவிடம் உண்மையை மறைத்ததில் சித்ராவின் பங்கும் இருக்கிறது. ஆனால், சித்ராவின் அம்மா அளவுக்கு அதிகமாகக் கண்டிப்பு காட்டாமல் இருந்திருந்தால், ஒருவேளை இந்தச் சம்பவம் தடுக்கப்பட்டிருக்கலாம். ஆண்களிடம் பேசுவதே தவறு எனச் சிறு வயதிலிருந்து கண்டிப்புடன் வளர்க்கப்பட்ட சித்ரா, திடீரெனக் கோயிலில் சந்தித்த நபரைப் பற்றிச் சொன்னால் எங்கே அம்மா தன்னைப் பற்றித் தவறாக நினைப்பாரோ திட்டுவாரோ என்ற பயத்திலேயே அதை மறைத்துவிட்டாள்.

சிறு வயதில் குழந்தைகள் பேசுவதை ரசித்துக் கேட்கும் சில பெற்றோர், அவர்கள் வளர்ந்தவுடன் ஒரு இயந்திரம்போல் நடத்தத் தொடங்கிவிடுகிறார்கள். வளரும் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்கி, உட்கார்ந்து பேச வேண்டும் என்றுகூடப் பெரும்பாலான பெற்றோர்கள் நினைப்பதில்லை. இதனால் வளரிளம் பருவத்தில் உள்ள குழந்தைகள், சில தவறான நபர்களை நம்பி அவர்களிடம் சிக்கிக்கொள்ளும் ஆபத்தான சூழ்நிலை உருவாகிவிடுகிறது. இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தடுக்க, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அவர்கள் சிறுவர்களாக இருந்தபோது பேசியதுபோல் அனைத்து விஷயங்களையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகள் அனைத்தையும் பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ளும் சூழலை உருவாக்கித் தர வேண்டும். குழந்தைகள் பெரியவர்களாகிவிட்டாலும் பெற்றோரிடம் கிடைக்கும் அரவணைப்பை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்பதைப் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

(வளர்ப்போம்,வளர்வோம்)
கட்டுரையாளர், குழந்தைகள் நல மற்றும் வளரிளம் பருவ சிறப்பு மருத்துவர்.
தொடர்புக்கு : dryamunapaed@yahoo.com

SCROLL FOR NEXT