சிக்மண்ட் ஃபிராய்ட் நினைவு நாள்: செப். 23
தற்பாதுகாப்பு என்பது உயிரினங்களுக்கு உடன்பிறந்த ஓர் இயல்பு. தக்கன பிழைக்கும், காயப்பட்ட மண்புழுகூட உடலைச் சுருக்கிச் சுருண்டு தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே பார்க்கும். மனித இனத்துக்கோ இந்த உணர்வு சற்று அதிகமாகவே உள்ளது.
அருகில் உள்ள ஒருவர் கையைத் தூக்கினால் நம்மை அறியாமலேயே நமது கை நம் முகத்தை மறைக்க உயர்ந்துவிடுகிறது. உடலுக்குள் கிருமிகள் ஊடுருவும்போது அவற்றை எதிர்க்க நம்மை அறியாமலே நம் உடல் எதிர்ப்பொருட்களைச் சுரக்கிறது. ‘தக்கன பிழைக்கும், தகாதவை அழியும்’ என்ற டார்வினின் கொள்கை முழுமையாகச் செயல்படுவதை இதில் காணலாம்.
இதேபோல நம் அகஉலகிலும் நம் மனதால் ஏற்றுக்கொள்ள முடியாத, நம்மைப் பற்றி நாம் கொண்டிருக்கும் நல்லுணர்வுக்குப் பங்கம் விளைவிக்கும் எண்ணங்கள், நிகழ்வுகள், உணர்வுகள் போன்றவை ஏற்படும்போது, இதனால் மனதில் ஏற்படும் சலனத்தைப் போக்க மனம் தன்னை அறியாமலேயே தற்பாதுகாப்பு முறைகளிடம் தஞ்சமடைகிறது. இதை முதன்முதலிலும் முறைப்படியும் விவரித்தவர் உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃபிராய்ட்.
நூறு ஆண்டுகளுக்கு முன் அவர் கூறிய மனத் தற்பாதுகாப்பு முறைகள் பற்றிய கருத்துகள், மனித நடத்தைகளுக்கு அர்த்தம் காண்பதற்கு இன்றும்கூட பேருதவியாக இருக்கின்றன. ஃபிராய்ட் கூறிய பல்வேறு கருத்துகளில் நீடித்து நிலைப்பவற்றில் இதுவும் ஒன்று.
மனத் தற்பாதுகாப்பு முறைகள் என்பவை, மனதில் எழும் முரண்பாடுகளைத் தணிக்க ‘அகம்’ (ஈகோ) மேற்கொள்ளும் உத்தி என்னும் விளக்கத்தை ஃபிராய்ட் அளிக்கிறார். ஃபிராய்ட் பல மனத் தற்காப்பு முறைகளை தன் காலத்தில் விவரித்தார். உள்ளத்தின் ஆழத்தில் உணர்வுகளைப் புதைத்துவிடும் அமுக்கம் (Repression), அவற்றை மறுக்கும் போக்கு (Denial), தான் தகாதவை என்று கருதும் உந்துதல்களுக்கு ஈடாக உருவாகும் உயர்வழிப்படுத்துதல் (Reaction Formation) போன்றவை அவற்றில் சில. அவற்றில் சிலவற்றை நாம் ஏற்கெனவே அறிந்திருப்போம். பழமொழிகளிலும், நீதிக் கதைகளிலும், தேவதைக் கதைகளிலும் அவற்றைப் பரவலாகக் காணலாம். ஆனால், இதை ஆழமாகவும் விளக்கமாகவும் பொதுமைப்படுத்தியும் கூறியவர் ஃபிராய்ட்.
ஃபிராய்ட் கூறியதில் முக்கியமானது, மனத் தற்பாதுகாப்பு முறை இடப்பெயர்வு (Displacement). ஒருவர் மேல் நாம் கொண்டுள்ள உணர்ச்சிகளை இன்னொருவர் மீது காட்டுவதே, ஃபிராய்டிய உளவியலில் இடப்பெயர்வு எனப்படுகிறது. கூட்டுக் குடும்பங்களில் மாமியார் மேல் கொண்ட கோபத்தால் மருமகள் பாத்திரங்களைப் போட்டு உடைப்பதும், பணி முடிந்து களைத்துப்போய் வீட்டுக்குத் திரும்பும் மனைவி, டிவியில் தன்னை மறந்து கணவன் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு குழந்தைகள் மேல் எரிந்து விழுவதையும் இதற்கு உதாரணங்களாகக் கூறலாம். அதாவது ஒருவர் மேல் தான் கொண்டுள்ள உணர்ச்சிகளை, இன்னொருவர் மேல் சுமத்துவதை இது சுட்டுகிறது.
தமிழ்ச் சிறுகதை உலகில் முடிசூடா மன்னனாகத் திகழும் புதுமைப்பித்தன், ‘பால்வண்ணம் பிள்ளை’ என்ற அவரது சிறுகதையில் இதைக் கலைநயத்துடனும் சொற் சிக்கனத்துடனும் சிறப்பாகச் சித்தரித்துள்ளார். கதையில் வரும் பால்வண்ணம் பிள்ளை கதாபாத்திரத்தை புதுமைப்பித்தன் தன் பாணியில் பின்வருமாறு அறிமுகப்படுத்துகிறார்:
“பால்வண்ணம் பிள்ளை கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தா. வாழ்க்கையே தாஸ்தாவேஜி கட்டுகளாகவும், அதன் இயக்கமே அதட்டலும், பயமுமாகவும், அதன் முற்றுப்புள்ளியே 35 ரூபாயாகவும் அவருக்கு இருந்துவந்தது. அவருக்குப் பயமும், அதனால் ஏற்படும் பணிவும் வாழ்க்கையின் சாரம். அதட்டல் அதன் விதிவிலக்கு.... பால்வண்ணம் பிள்ளை ஆபீசில் பசு, வீட்டிலோ ஹிட்லர்....”
கதையின்படி ஒரு நாள், குழந்தைகளின் பால் பிரச்சினையைத் தீர்க்கும் எண்ணத்தில் அவரைக் கேட்காமலே தன் வளையல்களை விற்று அவர் மனைவி ஒரு பசுமாட்டை வாங்கிவிடுகிறார். பால்வண்ணம் பிள்ளைக்குக் கடுங்கோபம் வருகிறது. ஆனால் அவர் வாய் திறப்பதில்லை. இதை புதுமைப்பித்தன் இப்படி விவரிக்கிறார்: “அன்று புதுப் பால்காப்பி கொண்டுவந்து வைத்துக்கொண்டு கணவரைத் தேடினாள். அவர் இல்லை. அதிலிருந்து பிள்ளையவர்கள் காப்பியும் மோரும் சாப்பிடுவதில்லை. அவர் மனைவிக்கு மிகுந்த வருத்தம்”.
சில நாட்களுக்குப்பின் மாட்டை வாங்கிய விலையைவிட குறைந்த விலைக்கே பால்வண்ணம் பிள்ளை விற்றுவிடுகிறார். பின் என்ன நடந்தது என்பதை புதுமைப்பித்தன் இப்படிக் கூறுகிறார்: “மனைவி, ‘மாடு எழுபது ரூபாயில்லே. குழந்தைகளுக்குப் பாலாயிற்றே’ என்று தடுத்தாள். … ‘என் புள்ளைகள் நீத்தண்ணி குடிச்சி வளந்துக்கிடும்’ என்றார் பால்வண்ணம் பிள்ளை”.
பால்வண்ணம் பிள்ளை ஏன் இவ்வாறு அறிவுக்குப் பொருந்தாத விதமாக நடந்துகொண்டார்?
கதையைப் படிக்கும் ஒரு வாசகன் இக்கதைக்குப் பல விளக்கங்கள் அளிக்கலாம். ஆனால், இதில் பொதிந்துள்ள உளவியல் அர்த்தம் என்ன? பால்வண்ணம் பிள்ளைக்குப் பணியிடத்தில் அடங்கி ஒடுங்கி நடக்க வேண்டிய நிர்ப்பந்தம்; தன் அதிகாரத்தை வீட்டில் மட்டுமே காட்ட முடியும் என்கிற நிலைமை. எனவே, பணியிட அதிகாரிகள் மேலுள்ள கோபத்தைப் பசுவை விற்றுத் தன் மனைவியின் மீது காட்டுகிறார். அலுவலகத்தில் இழந்த அதிகாரத்தை மீட்பதாக நினைத்துக்கொண்டு மாட்டை விற்று, ‘நான்தான் குடும்பத் தலைவன்’ என்பதை நிலைநாட்டுகிறார். இதுதான் ஃபிராய்ட் கூறும் உணர்ச்சிகளின் இடப்பெயர்வு.
இவ்வாறாக, மனதின் பல தற்பாதுகாப்பு முறைகளை அன்றாட வாழ்க்கையில் நாம் காணலாம். இதை முறையாக நமக்கு எடுத்துச் சொன்னவர் சிக்மண்ட் ஃபிராய்ட். அவர் நமக்கு அளித்த கொடைகளில் இதுவும் ஒன்று.
கட்டுரையாளர், மனநல மருத்துவர் மற்றும் முன்னாள் பேராசிரியர்
தொடர்புக்கு: ibmaht@hotmail.com