எ
ல்லா படங்களும் தோல்வியடைந்துவந்த கட்டத்தில், ‘திருமலை’ படத்தின் மூலமாக விஜய்க்குக் கைகொடுத்தவர் இயக்குநர் ரமணா.
2011 நவம்பரில் வார இதழ் ஒன்றில் ‘நண்டு’ என்கிற சிறுகதையை எழுதியிருந்தார். அவருக்குச் சிறுவயதில் நண்டுகள் மீது ஆர்வம். அவற்றோடு விளையாடவும் அவற்றை உண்ணவும். கடற்கரை நண்டுகள், கழனி நண்டுகள் என எல்லா நண்டுகளின் மீதும் அவருக்குப் பிரியம். இப்படித் தன் நண்டு குறித்த அனுபவங்களை எழுதியவர், அந்தக் கதையின் இறுதி வரிகளை இப்படி முடித்திருந்தார்:
“என்னைச் சுற்றி எனக்குப் பிடித்த நண்டுகள். இப்போது எனக்குள்ளும் நண்டு!”
அவருக்குத் தொண்டையில் புற்றுநோய் என்று தெரியவந்த சமயத்தில் வெளியான கதை இது!
சரி அது ஏன் புற்றுநோயை நண்டுடன் ஒப்பிடுகிறார்கள்? இதற்கு, ‘தி எம்பரர் ஆஃப் ஆல் மலாடீஸ்: எ பயோகிராஃபி ஆஃப் கேன்சர்’ என்ற உலகப் புகழ்பெற்ற புத்தகத்தை எழுதிய சித்தார்த்த முகர்ஜி பதில் தருகிறார். புற்றுநோய் பாதித்த ஒரு பகுதியில் ஏராளமான நரம்புகள் தோன்றி, அந்தப் பகுதியே நண்டைப் போலத் தோற்றமளிக்கும். இதைக் கண்ட அன்றைய கிரேக்க மருத்துவர் காலென், முதன்முதலாகப் புற்றுநோயை நண்டுடன் ஒப்பிட்டார். இன்றைக்கு அதுவே புற்றுநோயின் அறிவிக்கப்படாத சின்னமாகிவிட்டது.
நமக்குப் பிரியமானவர்களின் உடலுக்குள் இந்த ‘நண்டு’கள் தோன்றினால், அதை எப்படி எதிர்கொள்வது? அதற்கான பதிலைத் தருகிறது, ‘நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா’ (நண்டுகளின் நிலத்தில் ஓர் இடைவேளை) எனும் மலையாளத் திரைப்படம். ‘பிரேமம்’ படத்தில் கலக்கிய நிவின் பாலிதான் இந்தப் படத்தின் நாயகன். தயாரிப்பாளரும் அவரே. இந்தப் படத்தை இயக்கியிருப்பது ‘பிரேமம்’ படத்தில் ‘மேரி’யாக நடித்த அனுபமா பரமேஸ்வரனுடன் பள்ளி நண்பராக வரும் அல்தாஃப் சலீம். தவிர இந்தப் படத்தில் லால், ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் இயக்குநரான திலீஷ் போத்தன் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது.
சினிமாவின் கடமை என்று ஏதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால், உலகம் முழுக்கவும் உள்ள ஒரு நோயைப் பற்றி, அது ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி, பார்வையாளர்களிடையே பயத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்தாமல், அந்த நோய் பாதிக்கப்பட்டவர்களை பரிதாபத்துக்கு உரியவர்களாகச் சித்தரிக்காமல், தன்னம்பிக்கையுடன் காட்டுவது நல்ல சினிமா. அப்படிப் பார்த்தால், இந்தப் படமும் ஒரு பொறுப்புள்ள சினிமாதான்.
ஒரு சந்தோஷமான குடும்பம். அந்தக் குடும்பத் தலைவி, ஒரு நாள் குளித்துக்கொண்டிருக்கும்போது திடீர் அதிர்ச்சியடைகிறார். தன் மார்பில் ஒரு சிறு கட்டி இருப்பதை அவர் உணர்கிறார். தனக்குப் புற்றுநோயாக இருக்குமோ என்று சந்தேகப்படுகிறார். தன் சந்தேகத்தைத் தன் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளவும் செய்கிறார்.
பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு அவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது உறுதியாகிறது. அந்தக் கசப்பான உண்மையை, அந்தக் குடும்பத் தலைவி எப்படி எடுத்துக்கொள்கிறார், அந்தக் குடும்பம் எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதுதான் படம்.
குடும்பத் தலைவி கதாபாத்திரத்தில் சாந்தி கிருஷ்ணா நடித்திருக்கிறார். தனக்குப் புற்றுநோய் இருப்பது தெரிந்ததும், கண்ணீர் விட்டுக் கதறாமல் ‘நீங்க எல்லாம் என்கூட ஆதரவா, சந்தோஷமா இருந்தாத்தான் என்னால இதிலிருந்து வெளியே வர முடியும்’ என்று தன் குடும்பத்தினருக்குப் பொறுமையாக எடுத்துச் சொல்வதும், கீமோதெரபியால் முடி உதிர்வதைக் கண்டு வருத்தப்படாமல், தன் சிகையை முழுமையாக மழித்துக்கொண்டு ‘ஸ்கார்ஃப்’ கட்டி வலம் வருவதுமாக, தன்னையும் தன் குடும்பத்தையும் ‘பாசிட்டிவ்’ ஆக வைத்துக்கொள்கிறார்.
இன்னொரு பக்கம், நிவின் பாலி, லால் உள்ளிட்ட குடும்பத்தினர் உள்ளுக்குள் வேதனைப்பட்டாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வழக்கம்போல சிரிப்பும் கேலியுமாகத் தங்களின் அன்றாட வாழ்க்கையைக் கவனிக்கிறார்கள்.
கீமோதெரபி என்றதும் அதிர்ச்சிகரமான பின்னணி இசை, அழுது வடியும் முகங்கள் போன்றவற்றைக் காட்டி பேராபத்தாகச் சித்தரிக்காமல், ‘காலையில போனீங்கன்னா ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு, சாயந்தரம் வீட்டுக்குத் திரும்பிடலாம்’ என்று அந்தக் காட்சிகள் எதார்த்தமாகக் காட்டப்பட்டுள்ளன.
பொதுவாக, நம் வீடுகளில் ஒருவருக்கு நோய் ஏற்பட்டால், அவர் குணமாகிறவரை எந்த ஒரு நல்ல காரியமும் மேற்கொள்ளப்படாது. ஆனால், அப்படி சோகத்தில் மூழ்கிப் போகத் தேவையில்லை என்கிறது இந்தப் படம். குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அந்த வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. திருமண வைபவங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சுற்றுலாவுக்குச் செல்கிறார்கள். இப்படிப்பட்ட சந்தோஷ கணங்களின்போது, நோயால் பாதிக்கப்பட்டவர் தன் கவலைகளை மறந்து மேலும் நம்பிக்கையும் பலமும் பெறுவார் என்பதே உண்மை.
இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் சொல்ல வருவது இதுதான்: “நோயால பாதிக்கப்பட்டவங்களுக்கு நாம புன்னகையுடன் ஆதரவாக இருப்போம். அவங்களை நாம சந்தோஷமா பார்த்துக்குவோம். நாமும் சந்தோஷமா இருப்போம். நம்மகிட்ட அவங்க எதிர்பார்க்குறதும் அதைத்தானே!”