இதுவரை நின்ற நிலையில் செய்யும் ஆசனங்கள் சிலவற்றைப் பார்த்தோம். இப்போது உட்கார்ந்த நிலையில் செய்யும் சில ஆசனங்களைப் பார்ப்போம். உட்கார்ந்து செய்யும் ஆசனங்களின் அடிப்படை தண்டாசனம் எனப்படும் நிலை.
நிமிர்ந்து உட்கார்ந்து கால்களை நீட்டுவதுதான் இந்த ஆசனம்.
# உடல் நேராக இருக்க வேண்டும். இரண்டு கைகளும் இடுப்புக்குப் பின்னால் இருக்க வேண்டும். கைகளும் வளையாமல் நேராக இருக்க வேண்டும்.
# நீட்டியிருக்கும் கால்களின் அடிப்பகுதி, கீழே அழுத்தியிருக்க வேண்டும்.
# இடுப்பு எலும்புகள் கீழே அழுத்தியிருக்க வேண்டும்.
# கைகளை அழுத்தி மார்பை நன்கு விரிவடையச் செய்யுங்கள். முதுகெலும்பை நேராக வைத்திருங்கள்.
# தோள்பட்டைகளும் விரிந்திருக்க வேண்டும்.
# தொடைகள், முழங்கால்கள் தளர்வாக இருக்கக் கூடாது.
# குதிகால்களை முடிந்தவரை வெளிப்புறமாகத் தள்ளுங்கள். நுனிக் கால்களை முன்னோக்கி இழுங்கள். கால் விரல்கள் உங்களை நோக்கியபடி இருக்கட்டும்.
# மூச்சை ஆழமாக இழுத்து விடுங்கள். மூன்று அல்லது ஐந்து மூச்சு வரை இதே நிலையில் இருக்கலாம்.
பலன்கள்
# முதுகெலும்பை வலுப்படுத்த உதவுகிறது.
# மார்பை விரியச் செய்து மூச்சைச் சீராக்க உதவுகிறது.
# பின்புறத் தசைகளை வலுப்படுத்துகிறது.
# தோள்பட்டைகள் வலுவாகும்.
# உடலின் தோற்றம் மெருகேறும். சிலருக்குத் தோள்பட்டை சற்றே வளைந்து கூன் விழுந்ததுபோல் இருக்கும். இந்த ஆசனத்தைத் தொடர்ந்து செய்து வந்தால், கம்பீரமான நிமிர்ந்த தோற்றம் கிடைக்கும்.
# ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
# உட்கார்ந்து செய்யும் ஆசனங்களுக்கான அடிப்படைப் பயிற்சியை இது கொடுக்கும்.
முதலில் கால்களை நன்கு நீட்டிய நிலையில் முதுகை நிமிர்த்த முடியாது. அத்தகைய நிலையில் சுவரில் சற்றே சாய்ந்தபடி இதைப் பயிற்சி செய்யலாம். அப்படிச் செய்யும்போது இரண்டு தோள்பட்டைகளும் சுவரில் பட்டுக்கொண்டிருக்க வேண்டும். முதுகு நேராக இருக்க வேண்டும்.