நலம் வாழ

நலம், நலம் அறிய ஆவல்: இரட்டை பிரச்சினைக்கு வழி சொல்லுங்கள்

கு.கணேசன்

டந்த இரண்டு மாதங்களாக அல்சரால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். அல்சரோடு சேர்ந்து சுவாச அலர்ஜியும் எனக்கு இருந்துவந்தது. சுவாசப் பிரச்சினை ஏற்படும்போதெல்லாம்... மூச்சு பெரிதாக இழுத்து இழுத்து உடல் மிக சோர்வாகி கை கால்கள் மரத்துப் போவது போல் ஆகிவிடுகிறது. திடீரென்று ஒருநாள் காலையில் ஒருகால் மரத்துப் போய்விட்டது. மருத்துவமனைக்குச் சென்று விசாரித்ததில் சத்து மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார்கள். அதைச் சாப்பிட்டதும் ஒரு வாரத்துக்கு நன்றாக இருந்தது. பிறகு மீண்டும் அதே பாதிப்பு கொஞ்சமாகத் தொடர்கிறது. இதற்கிடையில் எனக்குக் கிறுகிறுப்பு... நெற்றி, தாடை, முகங்களில் நரம்புகள் இறுக்கம் போன்ற உணர்வு... தலையில் நீர்கோத்தாற்போல ஆங்காங்கே வலி... கைகளில் நடுக்கம் போன்றவை காணப்படுகின்றன. நான் அல்சருக்கு சிகிச்சை எடுத்த மருத்துவமனையில் கேட்டால், உங்களுக்கு ஒன்றுமில்லை என்று சொல்கிறார்கள். எனக்கு என்ன செய்வது என்று குழப்பமாக இருக்கிறது...

சுதன் கார்த்திக், மின்னஞ்சல்

முதலில் அல்சருக்குச் சரியான சிகிச்சையை எடுத்துக்கொள்ளுங்கள். உணவு முறையை சீராக்குங்கள். புகைப்பழக்கம், மதுப்பழக்கம் என ஏதாவது இருந்தால் விட்டொழியுங்கள். அப்போதுதான் அல்சர் எனும் இரைப்பைப் புண் முழுமையாகச் சரியாகும்.

உங்கள் சுவாச ஒவ்வாமைக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெறுங்கள். உங்களுக்கான ஒவ்வாமையைத் தூண்டும் காரணியை அகற்றவோ, தவிர்க்கவோ முயலுங்கள். சுவாசப் பயிற்சிகளை முறையாக மேற்கொள்ளுங்கள். இதில் யோகாவும் உதவும். சுவாச ஒவ்வாமைக்கு ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துவருவதாக இருந்தால், அதை குறைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், அந்த மாத்திரைகள் நோய் எதிர்ப்பு ஆற்றலைக் குறைத்து, உடலை பலவீனப்படுத்தக்கூடியவை.
Dr Ganesan 

அடுத்து, அல்சர் காரணமாக சத்துள்ள உணவை எடுத்துக்கொள்ளத் தவறி இருக்கலாம். அதன் விளைவாக, உங்களுக்குச் சத்துக்குறைவு ஏற்பட்டிருக்கலாம். எனவேதான், சத்து மாத்திரைகளை உங்கள் மருத்துவர் பரிந்துரைத்திருக்கிறார். அவற்றைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றில் குணமாவதுபோல் தெரியவில்லை என்றால், உளவியல் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.

SCROLL FOR NEXT