நலம் வாழ

பார்க்கின்ஸன் நோய்க்கு கொடுக்கப்படும் மருந்தினால் தோன்றும் மனக்காட்சி பிரமைகள்

சிந்த்யா ஆனந்த்

பார்க்கின்ஸன் நோய் ஒரு சிக்கல் நிரம்பிய பலவிளைவு நோயாகும். நரம்புச் சிதைவு நோயான பார்க்கின்சன் நோய் உருவாவதற்கு மூளையில் உள்ள நரம்பு செல்கள் டோபாமைன் என்பதைக் குறைவாகச் சுரப்பதே காரணம். மனிதர்களின் நடமாட்டத்தை, இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது டோபாமைன் என்ற இந்த ரசாயனமே.

பலபேர் தங்கள் உடலில், கை, கால்களில் நடுக்கம் ஏற்படும் போதோ, நடப்பதற்கு கடினமாக இருக்கும் போதோ மருத்துவர்களை அணுகுகின்றனர். பார்க்கின்சன் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை இல்லாவிட்டாலும் நோயின் தாக்கத்தைக் குறைக்க மருந்துகள், சிகிச்சைகள் உள்ளன. இதன் மூலம் நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மீட்க முடிந்துள்ளது.

ஆனால் இதே வேளையில் இந்த மருந்துகள், சிகிச்சைகள் நோயாளிகளிடத்தில் பித்துப் பிடிக்கும் அளவுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. உதாரணமாக கண்டதும், கடயதும் நோயாளிகள் மனக்காட்சியில் பிரமைகளாகத் தோன்றுவதுண்டு.

பெங்களூருவில் உள்ள நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் வரதராஜுலு கூறும்போது, “பார்க்கின்சன் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கமாக ‘லெவடோபா’, ‘கார்பிடோபா’ ஆகிய மருந்துகளை கொடுப்போம். இவைதான் நோயாளிகளுக்கு இத்தகைய மனக்காட்சி பிரமைகளை உருவாக்குகின்றன” என்றார்.

65 வயதான ஸ்ரீநிவாஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் மன அழுத்தம் ஏற்படுத்தும் மனப்பிரமைகளை எதிர்கொண்டு வருகிறார். சில வேளைகளில் தன் காலி அறையில் ஏகப்பட்ட ஆட்கள் இருப்பதான காட்சி அவர் கண் முன் விரிகிறது. மேலும் சில வேளைகளில் தன் அறையில் பாம்புகளையும், மழைத்துளிகளையும் காண்பதாக அவர் கூறுகிறார். ஜன்னல் வழியாக பார்க்கும் போது வெளியே மழை கொட்டுவது போல் தெரிகிறது, உடனே வெளியே வந்து பார்க்கிறார். ஆனால் மழையில்லை.

வெறும் காட்சிப் பிரமைகள் மட்டுமல்ல, ஒலி மற்றும் தொடு உணர்வு ஆகியவற்றிலும் பிரமை நிரம்பிய அனுபவங்கள் ஏற்படுவதுண்டு. பார்க்கின்சனுடன் பிற நோயும் உடையவர்கள் குறிப்பாக மனச்சோர்வு, அழுத்தம் ஆகியவற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு மருந்துகள் இல்லாமலேயே இத்தகைய பிரமைகள் தோன்றுவதுண்டு.

பிரமைகள் நோயாளிக்கு நோயாளி மாறுபடும் இயல்பு கொண்டது. ஒருவருக்கு ஒவ்வொரு இரவும் பாம்பு கடிப்பது போன்று தோன்றும் மற்றவர்களுக்கு அறை முழுதும் எலிகள் நிரம்பி வழிவது போன்ற பிரமை ஏற்படும். மேலும் சிலருக்கு தங்கள் வீட்டுக்குள் யாரோ ஏறிக்குதிப்பது போன்ற காட்சி தோன்றும்.

இதில் 82 வயதான பார்க்கின்சன் நோயாளி ஒருவர், நினைவில் பின்னோக்கிச் சென்று தன்னுடைய இளமைக்காலத்திற்குச் சென்று விடுகிறார். அவரது மகள் கூறும்போது, ‘சீருடை அணியும் பள்ளி மாணவியாக என்னை என் தந்தை சில சமயம் பார்த்து என்ன ஸ்கூலுக்கு கிளம்பலயா? என்கிறார். இத்தருணங்களில் அவரே கூட தனது இளமைக்கால நடை, பாவனைகளை மேற்கொள்கிறார். மேலும் அதிசயமாக உடல் நடுக்கத்திலும் அவர் நேராக திட்பமாக நடக்க முடிகிறது. அப்போது அவரைப் பார்க்க அழகாக இருக்கும், ஆனால் அவரது மனம் வேறு எங்கோ சஞ்சாரிக்கும்” என்கிறார் மகள் கீதா குஹா.

மற்றொருவருக்கு தன் அறைக்கு யார் யாரோ வந்து செல்வது போன்ற காட்சிகள் தோன்றுகின்றன. தான் பார்ப்பது உண்மையல்ல, தான் பார்ப்பதை தானே நம்ப முடியவில்லை எனும்போது தங்கள் மன ஆரோக்கியம் பற்றிய கேள்விகள் அவர்களுக்குப் பிறக்கின்றன.

இந்தமாதிரி தருணங்களில் நோயாளிகளின் அச்சத்தைப் போக்கும் விதமாக அருகில் இருப்பவர்கள் நடந்து கொள்ள வேண்டும். அவருக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மெதுவே விளக்க வேண்டும்.

சில வேளைகளில் பிரமைகள் கட்டுக்கடங்காமல் போகும் போது மனநிலை பிறழந்தவர்களுக்கு கொடுக்கும் க்ளோசாபைன் என்ற மருந்து பார்க்கின்சன் பக்க விளைவுகளைத் தடுக்கவும் கொடுக்கப்படுவதாக பெங்களூரைச் சேர்ந்த நியூராலஜிஸ்ட் என்.எஸ். சந்தோஷ் தெரிவிக்கிறார்.

ஆனால் பொதுவாக பார்கின்சன் நோய் பாதிக்கப்பட்டால் அதற்காக துவண்டு போய் செயலற்று விடாமல் தொடர்ந்து விடாப்பிடியாக செயல்பட்டுக் கொண்டே இருந்தால் பாதிப்பு, பக்க விளைவுகள் ஏற்படாது என்பதே மருத்துவர்களின் கணிப்பாக இருக்கிறது.

ஆங்கிலம் வழி தமிழில்: ஆர்.முத்துக்குமார்

SCROLL FOR NEXT