இந்த வாரக் கேள்விக்குப் பதில் அளிப்பவர் செங்கல்பட்டைச் சேர்ந்த சித்த மருத்துவர் க. சங்கர்:
என்னுடைய ஆணுறுப்பு அடியில் லேசாகச் சிவந்தும் அரிப்புடனும் பத்து ஆண்டுகளாக உள்ளது. இது அக்கியா அல்லது வேறு நோயா? இதற்கான சிகிச்சை முறையைப் பரிந்துரை செய்யுங்கள்.
- அண்ணாதுரை, ஊர் குறிப்பிடவில்லை.
உங்களுக்குக் கடந்த பத்து ஆண்டுகளாக அக்கி நோய் (genital herpes) இருப்பதற்கு வாய்ப்பில்லை. பொதுவாக ஓரிரு மாதங்களே அக்கி இருக்கும். அக்கி என்றால் சிவந்த குரு, வலி, வெம்மை, காந்தலுடன் காணப்படும். நரம்பு வலி இருக்கும். எனவே, நீங்கள் குறிப்பிடுவது
அக்கியாக இருக்க வாய்ப்பில்லை.
Human pappiloma virus (HPV) என்ற நோய்த்தொற்று ஆண்களிடம் அதிகம் காணப்படும். அதிலும் தோலின் மேல் பருக்கள் (Wart like eruptions) போலக் காணப்படும். நீங்கள் கூறுவதைப் பார்த்தால் சிவத்தல், அரிப்பு பெரும்பாலும்ஒவ்வாமையால் (Allergy) வரக்கூடிய தோல் தடிப்பு (Dermatitis), கரப்பான் (Eczema), பூஞ்சை நோய் (Fungal infection) மற்றும் செதில் உதிர் நோயாக (psoriasis) இருக்கலாம்.
தோல் நோய் நிபுணரிடம் காண்பித்து நோயைக் கணித்த பின்பு சிகிச்சையைத் தொடங்க வேண்டும். சுயமாகக் கடைகளில்
ஆயின்ட்மென்ட், தைலங்கள் வாங்கித் தடவ வேண்டாம்.
ஹெச்.பி.வி. தவிர்த்த மற்ற நோய்கள் குறுகிய காலத்தில் குணமடைய, குறைந்த விலையில், எளிய சித்த மருந்துகள் நிறைய உண்டு. உரிய சித்த மருத்துவரிடம் பரிசோதித்து ஆலோசனை பெறவும்.
நோய்த் தடுப்பு முறைகள்
சுயச் சுத்தம் அவசியம்; இறுக்கமான ஆடைகளைத் தவிருங்கள்; தளர்ச்சியான பருத்தி உள்ளாடைகள் அணியுங்கள்; அரைகுறையாய் உலர்ந்த, ஈரப்பதத்துடன் கூடிய ஆடைகளைத் தவிர்க்கவும்; உள்ளாடைகளை வெந்நீரில் துவைத்து, வெயிலில் உலர வைத்துப் பயன்படுத்தவும்; ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிக்கவும்; நிரந்தரத் தீர்வுக்கு மருத்துவரின் பரிந்துரைகளை ஒழுங்காகப் பின்பற்றவும்.
வாசனை, விளம்பரத்தை நம்பிச் சோப்பு, பூச்சுகளைப் பயன்படுத்தாமல் சித்த மருத்துவம் அறிவுறுத்தும் நலங்கு மாவுப் பூச்சு, பஞ்சக் கற்பக் குளியல் சூரணம் போன்றவை நல்ல பலன் தரும். தோல் நோய்கள் வராமல் பாதுகாக்கும்.
நலங்கு மாவு
சந்தனம், வெட்டி வேர், விலாமிச்சை வேர், கிச்சிலிக் கிழங்கு, கோரைக் கிழங்கு, பாசிப் பயறு, கார்போகி அரிசி. இவை அனைத்தையும் இடித்துப் பொடியாக்கிக் குளியல் பொடியாகத் தேய்த்துக் குளிக்கவும்.
பஞ்சக் கற்ப விதி
கஸ்தூரி மஞ்சள், மிளகு, வேப்பம் பருப்பு, கடுக்காய் தோல், நெல்லிப் பருப்பு. இவற்றைப் பசும்பால் விட்டு அரைத்து லேசாகக் கொதிக்க வைத்துத் தலையில் தேய்த்து, பின் உடலிலும் தேய்த்து இளஞ்சூடான வெந்நீரில் தலை முழுகவும்.