நலம் வாழ

கண்கள்தான் வாழ்க்கை

மு.வீராசாமி

அக்டோபர் 13: உலகப் பார்வை நாள்

கண் பாதுகாப்பு பற்றிய போதிய அறிவில்லாதது, கண்ணில் ஏற்படும் பிரச்சினைகள் / நோய்களை அலட்சியப்படுத்துவது, உரிய நேரத்தில் முறையான சிகிச்சை செய்துகொள்ளாதது போன்றவை காரணமாக உலக அளவில் முற்றிலுமாகப் பார்வையிழந்தவர்கள் 3 கோடி பேர். குழந்தைகளில் 2 கோடி பேர் பார்வைப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஓரளவோ அல்லது குறிப்பிடத்தக்க அளவோ பார்வை பாதிக்கப்பட்டவர்கள் 24 கோடி பேர். இதில் 80 சதவீதப் பிரச்சினைகள் தவிர்க்கக்கூடியவை மட்டுமல்ல; முறையான சிகிச்சைமூலம் சரிப்படுத்தியும் விடலாம்.

பாதுகாப்பு விழிப்புணர்வு

உலகச் சுகாதார நிறுவனம், பார்வையிழப்பைக் கட்டுப் படுத்துவதற்கான உலகளாவிய நிறுவனம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணைந்து 2020-ம் ஆண்டுக்குள் பார்வையிழப்பைக் கட்டுப்படுத்த வேண்டி ‘பார்வை 2020: பார்வைக்கு உரிமை’ என்ற திட்டத்தைச் செயல் படுத்திவருகின்றன. இதன் ஒரு பகுதியாகப் பார்வைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை (இந்த ஆண்டு அக்டோபர் 13) உலகப் பார்வை நாளாக (World Sight Day) கடைப்பிடிக்கப்படுகிறது.

விளையாட்டில் கவனம்

குழந்தைகள் விளையாடும்போது அதிகக் கவனம் தேவை. குச்சி, காம்பஸ், பேனா, பென்சில் போன்ற கூர்மையான பொருட்களை வைத்து விளையாடக் கூடாது. குழந்தைகள் ஒருவர் மேல் மற்றொருவர் மண்ணை வாரி எறிவதோ, குச்சியை எறிவதோ கூடாது. இது பார்வையை முழுமையாகவோ, பகுதியாகவோ பறித்துவிடலாம்.

கட்டியை அலட்சியப்படுத்தாதீர்

குழந்தைகளுக்கு, குறிப்பாகப் பள்ளி செல்லும் வயதில் கண்கட்டி அடிக்கடி ஏற்பட்டால் உடல் சூட்டினால் ஏற்பட்டது என்று நினைத்து நாமக்கட்டி போட்டால் சரியாகிவிடும் என்று அலட்சியமாக இருக்கக்கூடாது. பார்வைக் குறைபாடும் இதற்குக் காரணமாக இருக்கக்கூடும். கண் மருத்துவரிடம் சென்று ஆய்வு செய்து, கண்ணாடி அணியும்படி இருந்தால் கட்டாயம் கண்ணாடி அணியவேண்டும். 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடிக்கடி கண்கட்டி ஏற்பட்டால் நீரிழிவு நோய் காரணமாக இருக்கலாம். நீரிழிவு நோய்க்கு உரிய ஆய்வைச் செய்துகொண்டாக வேண்டும்.

கட்டுரையாளர், மதுரை தேசியக் கண் மருத்துவச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com

SCROLL FOR NEXT