நலம் வாழ

சந்தேகம் சரியா? 05 - ஸ்டீராய்டு மாத்திரைகள் என்ன பக்கவிளைவைத் தரும்?

கு.கணேசன்

ஸ்டீராய்டு மாத்திரைகளைச் சாப்பிட்டால் பக்க விளைவுகள் ஏற்படும் என்று சொல்கிறார்களே. இது சரியா?

இப்படிப் பொதுவாகச் சொல்வது சரியில்லை.

அலோபதி மருத்துவத்தில் ஸ்டீராய்டு மருந்துகளின் கண்டுபிடிப்பு ஒரு முக்கியமான திருப்புமுனை. அலர்ஜி, ஆஸ்துமா, மூட்டு வலி பாதிப்புள்ளவர்களுக்கும், பல நரம்புப் பிரச்சினைகளுக்கும், விபத்தில் அடிபட்டவர்களுக்கும், தன்தடுப்பாற்றல் நோயுள்ளவர்களுக்கும் (Auto immune diseases). இவை உடனடி நிவாரணம் தருகின்றன.

ஸ்டீராய்டு மருந்துகளில் பல வகை உண்டு. ஊசி, மாத்திரை, களிம்பு, இன்-ஹேலர், ஸ்பிரே மருந்து, திரவ மருந்து என இதன் பயன்பாட்டிலும் வித்தியாசம் உண்டு. ஸ்டீராய்டு மருந்துகளில் பக்க விளைவு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதேநேரம் ஒருவர் எந்த மருந்தைப் பயன்படுத்துகிறார், எந்த அளவில், எவ்வளவு காலம் எடுத்துக்கொள்கிறார் என்பதைப் பொறுத்துதான் பக்க விளைவு ஏற்படுவதும், ஏற்படாததும் இருக்கிறது.

பெரும்பாலும் வாய்வழி உட்கொள்ளப்படும் ஸ்டீராய்டு மாத்திரைகளால்தான் பக்க விளைவு ஏற்படும். இந்த மருந்துகளை எந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும், எத்தனை நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு முறை இருக்கிறது. டாக்டர்கள் மட்டுமே அறிந்த ரகசியம் இது. எனவே, மருத்துவர் பரிந்துரைப்படி ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்வதாக இருந்தால், எந்தப் பக்க விளைவும் ஏற்படாது.

ஆனால், சிலர் தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தாங்களாகவே ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். உதாரணத்துக்கு, ஆஸ்துமாவுக்கும் மூட்டு வலிக்கும் ‘செட்’ மாத்திரை என்ற பெயரில் ஸ்டீராய்டு கலந்த மாத்திரைகளை மருந்துக் கடைகளில் டாக்டரின் பரிந்துரை இல்லாமலேயே வாங்கி உட்கொள்கிறார்கள். இதுதான் ஆபத்தானது. எந்த ஒரு அவசரத்திலும் டாக்டரின் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.

பொதுவாக, ஸ்டீராய்டு மாத்திரைகளைக் குறைந்த அளவில், குறைந்த நாட்களுக்கு எடுத்துக்கொண்டால் பக்க விளைவு ஏற்படுவதில்லை. இன்னொன்று, அதிக அளவில் இந்த மாத்திரை களை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருந்தால், அந்த அதிக அளவைச் சிறிது சிறிதாகக் குறைத்துக்கொண்டே வந்து, ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டாலும் பக்க விளைவு உண்டாவதில்லை. இவற்றைத் தொடர்ந்து உட்கொள்ளும்போதுதான் பக்க விளைவு ஏற்பட வாய்ப்புண்டு.

ஆஸ்துமா உள்ளவர் களுக்கு ஸ்டீராய்டு கலந்த மாத்திரைகளுக்கு மாற்றாக, ஸ்டீராய்டு இன்ஹேலர், மூக்கில் அலர்ஜி உள்ளவர்களுக்கு மூக்கில் உறிஞ்சக்கூடிய ஸ்டீராய்டு ஸ்பிரே போன்ற மருந்துகளைப் பயன்படுத்தலாம். இவற்றைத் தொடர்ந்து பயன் படுத்தினாலும் பக்கவிளைவு ஏற்படுவதில்லை.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

தொடர்புக்கு: gganesan95@gmail.com

(அடுத்த வாரம்: சைவ உணவு சாப்பிட்டால் இதய நோய் வராதா?)

SCROLL FOR NEXT