பிழைப்பதற்குப் பல வழி எனச் சொல்வதைத் தவறாகப் புரிந்துகொண்ட கும்பல் ஒன்று காவலர்களிடம் சிக்கியுள்ளது. உணவங்களைத் தேடி நன்றாகச் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் கெட்டுப் போன உணவைக் கொடுத்துவிட்டதாகச் சொல்லி பணமும் பறித்துவந்துள்ளனர்.
கேரளத்தில் மலப்புரம் அருகே வேங்கரையில் ஒரு பேக்கரியுடன் இணைந்த உணவகத்தில் 5பேர் கொண்ட கும்பல் சாப்பிடச் சென்றுள்ளது. அங்கு அவர்கள் கோழி வறுவல் தருவித்துள்ளார்கள். கடைசித் துண்டு வரை வறுவலை நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, ஒரே ஒரு துண்டைக் காட்டி இது கெட்டுப் போனது எனப் புகார் அளித்துள்ளனர். உணவக உரிமையாளர் எண்ணை வாங்கிக் கொண்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளனர்.
பிறகு தொலைபேசியில் உரிமையாளரைத் தொடர்புகொண்டு இது தொடர்பாகப் புகார் கொடுக்காமல் இருக்க ரூ.40,000 கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளனர். இல்லையெனில் சமூக ஊடகங்களில் பொய்ப் பிரச்சாரமும் செய்வோம் என எச்சரித்துள்ளனர். இறுதியாக ரூ. 25,000 கொடுக்க உரிமையாளர் ஒத்துக்கொண்டுள்ளார். அந்த உரையாடலில் தாங்கள் இதற்கு முன்பு அதே ஊரில் வேறொரு உணவகத்தைப் பொய்ப் புகார் அளித்துப் பூட்டிய கதையையும் சொல்லியிருக்கிறார்கள். இந்த உரையாடலை மலையாளத்தின் செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தியது.
இதைத் தொடர்ந்து அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களைத் தேடும் நடவடிக்கையைக் காவல் துறை முடுக்கியது. மண்ணுல் வீட்டில் சுதீஷ், இப்ரஹிம், அப்துல் ரஹ்மான், ருமீஸ், நஸ்லிம் என்ற 5பேர் கொண்ட அந்தக் கும்பலை வேங்கரைக் காவல் துறை கைதுசெய்துள்ளது. இவர்கள் இதே போல் பல உணவகங்களில் பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.