உடல் பருமனால் கருப்பைப் புற்றுநோய்ப் பாதிப்பு வருவதற்கான சாத்தியம் அதிகமாக இருப்பதாக ஒரு புதிய ஆய்வு அறிக்கை சொல்கிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த பிரிஸ்டல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. உடல் பருமனால் மூட்டு வலி, சர்க்கரை நோய், உடல் சோர்வு உள்ளிட்ட பல நோய்கள் வரும் என்ற எச்சரிக்கை நாம் அறிந்ததுதான். ஆனால், இந்த ஆய்வின் மூலம் வெளியாகியுள்ள இத்தகவல் உண்மையில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
உடல் பருமன் குறியீட்டு (Body Mass Index) எண்ணை அடிப்படையகாக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஒவ்வோரு அதிக உடல் பருமக் குறியீட்டுக்கும் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் 88 சதவீதம் வரை அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளில் வெளிப்படுத்திய சதவீதத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். உடல் பருமன் குறியீட்டு எண் 18.5லிருந்து 24.9 வரை இருந்தால் அது ஆரோக்கியமானது எனச் சொல்லப்படுகிறது. அதே வேளை 25லிருந்து 29.9 வரை இருந்தால் அது அதிகப் பருமன். 30லிருந்து 39.9 வரை இருந்தால் மிக அதிக எடை என வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த உடல் பருமன் 13 விதமான புற்றுநோய்களுக்குக் காரணமாக ஆகின்றன என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பெல்ஜியம், போலந்து, சுவீடன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் 120, 000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களின் உடல் பருமனுக்கும் கருப்பைக்கும் இடையேயான தொடர்பு வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.