நலம் வாழ

நோயெதிர்ப்பாற்றலை மேம்படுத்தும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள்

செய்திப்பிரிவு

நமது உடலில் குறைபாடுகளைத் தவிர்க்க, அனைத்து ஊட்டச்சத்துக்களும் செறிவாக அடங்கியிருக்கும் நல்ல சமநிலையிலான உணவை உட்கொள்வது மிகவும் இன்றியமையாதது. மேம்பட்ட நலத்துடன் திறம்பட வாழ்க்கையை நடத்துவதற்கு வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள், ஊட்டச்சத்துக்கள் உள்ளிட்டவை தேவை. அதற்குக் கொழுப்புகள், புரதங்கள், மாவுச்சத்துக்கள் ஆகியவற்றின் சரியான கலவையைக் கொண்டிருக்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டும். அதுவே நோயெதிர்ப்பாற்றலை உயர்த்தி, தொற்றுகளை எதிர்த்துப்போராடுவதற்கு உடலுக்குத் தேவைப்படும் திறனை வழங்கும். நம்முடைய தினசரி உணவு முறையில் சேர்த்துக்கொள்ள வேண்டிய சில ஊட்டச்சத்து மிக்க உணவுகள் கீழே தரப்பட்டுள்ளன.

சிக்கன் (கோழி இறைச்சி)

சிறந்த சுவையோடு இருப்பது மட்டுமன்றி, கோழி இறைச்சி ஏராளமான உடல்நல பலன்களையும் தருகிறது. புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் போன்ற நாமுடைய உடலுக்குத் தேவையாக இருக்கிற இன்றியமையா ஊட்டச்சத்துக்கள் கோழி இறைச்சியில் அதிகமாக இருப்பது தெளிவாக அறியப்பட்டுள்ளது. நமது உடலின் செல்கள், எலும்புகள் போன்ற உடல் கட்டமைப்புகளின் உருவாக்கத்துக்கு, பராமரிப்புக்கும் அவசியமாக இருக்கிற புரதங்கள் மிக அதிக அளவில் கோழி இறைச்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

முத்துலட்சுமி, ஊட்டச்சத்து நிபுணர்


முட்டை

உணவு சார்ந்த கொலஸ்ட்ராலின் ஒரு முக்கிய ஆதாரமாக முட்டைகள் திகழ்கின்றன. பிற அனைத்து உணவுப்பொருட்கள் மத்தியிலும் அதிக ஊட்டச்சத்து மிக்க பொருளாக முட்டைகள் கருதப்படுகின்றன. முட்டையின் வெள்ளை, மஞ்சள் கரு ஆகிய இரண்டுமே உடலுக்குத் தேவைப்படுகிற அமினோ அமிலங்கள், பிற ஊட்டச்சத்துக்கள் உட்பட அதிக புரத உள்ளடக்கத்தைச் செறிவாகக் கொண்டிருக்கின்றன. பல்வேறு உணவுத் திட்டங்களின் முட்டைகள் எப்போதும் கண்டிப்பாக இடம்பெறும் ஒன்றாக மிக நீண்டகாலமாகவே இருந்துவருகிறது.

பழங்கள்

ஆரோக்கியமான உணவுப்பொருட்களில் பழங்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. பொட்டாசியம், ஃபோலிக் அமிலம், பாலிபெனால்ஸ், பிற தாதுச்சத்துக்கள் உள்ளிட்டவை பழங்களில் அதிகளவு இருக்கின்றன. புளுபெர்ரிஸ், கிரான்பெர்ரிஸ், ஸ்ட்ராபெர்ரிஸ், ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை ஆகிய பழங்களில் ஊட்டச்சத்துகள் அதிகமாக இருக்கின்றன. விரும்பி சாப்பிடப்படுபவையாக இருக்கும் இந்தப் பழங்கள் நம்முடைய பொது ஆரோக்கியத்திற்கும், உடலமைப்பின் சிறப்பான செயல்பாட்டுக்கும் அத்தியாவசியமானவை.


காய்கறிகள்

காய்கறிகளை உட்கொள்வது நம் அனைவரின் உடல்நலத்துக்கும் அதிக பயனளிக்கும். சமச்சீரான உணவின் ஒரு பகுதியாக அதிகளவு காய்கறிகளையும், பழங்களையும் உண்பவர்களுக்கு நாட்பட்ட தீவிர நோய்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் குறைவானதாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்திற்கும், பராமரிப்புக்கும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களைக் காய்கறிகள் தாராளமாக வழங்குகின்றன. ஒரு மாற்றத்திற்காக ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய காய்கறியைச் சமைத்துச் சாப்பிட முயற்சியுங்கள். வேகவைக்கப்பட்ட அல்லது வதக்கப்பட்ட காய்கறிகளோடு சில மூலிகைகளைச் சேர்த்து அதன் பயனை மேலும் அதிகரிக்கலாம்.

முழு தானியங்கள்

முழுமையான தானியங்களை உட்கொள்வதற்கும், நீரிழிவு, இதயநோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றிற்கான குறைவான இடருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தானியங்களை உடைத்து நசுக்கி மாவாக்கி உட்கொள்வது, அவற்றைச் சாப்பிடுவதற்கான பிற மாற்று வழிமுறைகளாக இருக்கின்றன. முழு கோதுமை, முழு சோளம், ஓட்ஸ், பழுப்பு அரிசி போன்றவை முழு தானியங்களுள் சில.


மீன்

அதிக புரதச்சத்தும், குறைவான கொழுப்பும் கொண்டு பல்வேறு ஆரோக்கிய அம்சங்களைக் கொண்டதாக மீன்கள் அறியப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மீன்களே, வேறு எந்த விலங்குப் புரத ஆதாரங்களுள் மிகக்குறைவான கொழுப்பைக் கொண்டதாக இருக்கின்றன. எண்ணெய் சத்துமிக்க மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அல்லது ஆரோக்கியமான கொழுப்புகள் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. இந்த முக்கியமான ஊட்டச்சத்துக்களைக் கணிசமான அளவு மனித உடலால் உற்பத்தி செய்ய முடியாது என்பதால் நமது உணவு முறையில் ஒரு முக்கியமான பங்காக மீன்கள் இருக்க வேண்டும்.

சமநிலைப்படுத்துதல்

நல்ல உணவை உட்கொள்வது என்ற விஷயத்தில் முக்கியமானது சரியான சமநிலையைக் கண்டறிவதாகும். உங்களுக்கு மிகவும் பிடித்தமான உணவுகள் அதிக கலோரிகள், கொழுப்பு அல்லது சேர்க்கப்பட்ட இனிப்புகளைக் கொண்டவையாக இருப்பினும், அவைகளை நாம் இரசித்து மகிழ்ந்து உண்ணலாம். ஆனால், அவைகளை மிதமான அளவுக்கும் சாப்பிடுவதே விவேகமானது. ஆரோக்கிய அம்சங்கள் அதிகமாக அடங்கியுள்ள உணவுகளைக் கூடுதலாகச் சேர்த்துச் சமநிலைப்படுத்துவதும், உடல்சார்ந்த செயல் நடவடிக்கைகளை அதிகமாக மேற்கொள்வதும் முக்கியமானது.

SCROLL FOR NEXT