கரோனாவிலிருந்து மெல்ல மீண்டு வரும் சூழலில், மனித இனத்தைப் பாதிக்கும் பெரும் பிரச்சினையாக உடல் பருமன் உருவெடுத்துவருகிறது. இதற்காகப் பலரும் ‘டயட்‘டில் இருப்பதாகக் கேள்விப்பட்டிருப்போம். பருமனைக் குறைக்க டயட் கைகொடுக்குமா அல்லது டயட் ஆபத்தில் கொண்டுபோய்விடுமா?
உடல் எடை குறைப்பு முயற்சிகளும் சமச்சீர் உணவு (Diet) முறைகளும் இன்று நேற்று தொடங்கியவை அல்ல. பண்டைய கிரேக்கத்திலேயே அவை இருந்துள்ளன. உலகின் முதல் திரவச் சீருணவு முறையை பொ.ஆ. 1066இல் இங்கிலாந்து அரசர் வில்லியம் கடைப்பிடித்திருக்கிறார்.
1500-களில் ஏற்பட்ட மறுமலர்ச்சிக்குப் பின்னர் மேற்கத்திய உலகில், ஒல்லியான தேகத்தின் மீதான மோகமும் அதற்கான முயற்சிகளும் அதிகரித்தன. அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் பஞ்சத்தில் சிக்கி மடிந்ததால், அதிக உடல் எடையுடன் இருப்பது சமூகக் குற்றம் என்று கருதும் போக்கும் இருந்துள்ளது. ஒல்லியான தேகத்தை விரும்பிய பெண்கள் சமச்சீர் உணவு முறைக்குப் பதிலாக இறுக்கமான கச்சைகளை மார்பிலிருந்து இடுப்புவரை அணிந்துள்ளனர். சிலர் தங்களின் கச்சைகளைச் சருமத்துடன் இணைத்துத் தைத்தும் உள்ளனர். இதனால் ஏற்பட்ட தொற்றால் பல உயிரிழப்புகளும் நிகழ்ந் துள்ளன. இறுக்கமான உள்ளாடைகளை அணியும் போக்கு இன்றும் தொடர்கிறது.
முதல் சீருணவு புத்தகம்
உலகின் முதல் சீருணவுப் புத்தகம் 1558இல் வெளிவந்தது. இன்றும் அது விற்பனையில் உள்ளது. லூய்கி கார்னாரோ எனும் இத்தாலியர் எழுதிய ‘நீண்ட காலம் வாழும் கலை’ எனும் அந்தப் புத்தகம், உடல் எடை குறைப்புக்கு 12 அவுன்ஸ் உணவையும் 14 அவுன்ஸ் மதுவையும் பரிந்துரைக்கிறது. அந்தச் சீருணவுத் திட்டத்தைக் கடைப்பிடித்த கார்னாரோ கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் வாழ்ந்தி ருக்கிறார்.அவருடைய வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில், முட்டையின் மஞ்சள் கருவை மட்டுமே சாப்பிட்டிருக்கிறார்.
1614இல் ஜியாகோமோ காஸ்டெல் வெட்ரோ இன்றும் விற்பனையில் உள்ள ‘இத்தாலியின் பழங்கள், மூலிகைகள், காய்கறிகள்’ எனும் புத்தகத்தை வெளி யிட்டார். அதில் ஆங்கிலேயர்களைப் போன்று அதிக இறைச்சி, சர்க்கரை ஆகியவற்றைத் தவிர்த்து, நிறையக் காய்கறி களை உண்ணும் இத்தாலிய முறைக்குத் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். இன்று பிரபலமாக இருக்கும் ‘மத்திய தரைக்கடல் சீருணவு’ திட்டத்துக்கு இந்தப் புத்தகமே முன்னோடி.
பேலியோவின் முன்னோடி
1730ஆம் ஆண்டில் டாக்டர் ஜார்ஜ் செயின் எழுதிய ‘உடல் நோய்களைக் குணப்படுத்தும் இயற்கை முறை’ எனும் சீருணவுப் புத்தகம் வெளியானது. டாக்டர் செயின், உடல் பருமனுடன் இருந்தார். பால், காய்கறிகள் ஆகியவற்றை மட்டும் உட்கொண்டு உடல் எடையை அவர் குறைத்தார். இந்த வகை சீருணவு இன்றும் பின்பற்றப்படுகிறது.
சீருணவு குறித்த முக்கியமான புத்தகமாகக் கருதப்படும் ‘லெட்டர் ஆஃப் கார்புலென்ஸ் (உடல்நலக் கடிதம்)’ 1864ஆம் ஆண்டில் வெளியானது. ‘மனிதக் குலத்தைப் பாதிக்கும் அபாயகரமான ஒட்டுண்ணிகளையும் கிருமிகளையும்விட அதிக துயரமானது உடல் பருமன்’ என்று அதன் ஆசிரியர் வில்லியம் பேண்டிங் அந்தப் புத்தகத்தைத் தொடங்கும் அளவுக்கு அன்று உடல் பருமன் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக இருந்துள்ளது.
அதிக எடைகொண்ட பேண்டிங், தன் உணவுப் பட்டியலிலிருந்து ரொட்டி, சர்க்கரை, உருளைக்கிழங்கு ஆகியவற்றை நீக்கி இறைச்சி, மீன், காய்கறிகள் ஆகியவற்றைச் சேர்த்ததன் காரணமாகத் தன்னுடைய எடைகுறைப்பு வெற்றிகரமானதை அந்தப் புத்தகத்தில் பதிவுசெய்திருந்தார். இன்று பிரபலமாக இருக்கும் பேலியோ, கீட்டோ போன்ற சீருணவுத் திட்டங்களுக்கு இந்தப் புத்தகமே அடிப்படை.
வினிகரும் தண்ணீரும்
1820-களில் உலகின் கவர்ச்சியான மனித ராகக் கருதப்பட்ட கவிஞர் பைரன், உடல் எடை குறைக்கும் நோக்கில் வினிகர் சீருணவுத் திட்டத்தைக் கண்டுபிடித்தார். உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பைக் கரைக்க ஒரு நாளில் பல முறை வினிகரைத் தண்ணீரில் கலந்து குடித்தார். வினிகரில் ஊறவைத்த உருளைக்கிழங்கையும் சாப்பிட்டார். பெண்கள் பலர் தங்கள் நாயகனான பைரனைப் பின்பற்றி வினிகர் குடித்து இறந்ததாகப் பதிவுகள் இருக்கின்றன. இன்று நடைமுறையில் இருக்கும் ஆப்பிள் சிடார் வினிகர் சீருணவுத் திட்டத்துக்கு பைரனின் சீருணவுத் திட்டமே முன்னோடி.
ஆபத்தான நம்பிக்கைகள்
முதல் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில், ஒல்லியான தேகத்துடன் இருப்பதே சிறந்த உடல் வடிவம் என்று கருதப்பட்டதால், அனைவரும் ஒல்லியாக இருப்பதை விரும்பத் தொடங்கினர். கொழுப்பைக் கரைக்கும் மசாஜ், வியர்வைக் குளியல், எடை குறைப்பு மாத்திரைகள், எடை குறைப்புக்கு உதவும் சூயிங்கம் போன்றவற்றை நோக்கி மக்கள் படையெடுத்தனர். அப்போது விற்கப்பட்ட சில மாத்திரைகளும் மிட்டாய்களும் ஆபத்தான அயோடின், ஆர்சனிக் உள்ளிட்ட நஞ்சு களைக் கொண்டிருந்தன.
இது போதாது என்று, புகைப்பது உடல் எடையைக் குறைக்கும் என்று 1920-களில் விளம்பரப்படுத்தப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் நாடாப்புழு சீருணவு முறையும் பிரபலமாக இருந்தது. வயிற்றில் வாழும் அந்தப் புழு மனிதர்கள் உண்ணும் உணவை உட்கொள்ளும், அதன் காரணமாக உடல் எடை குறையும் என்பது அந்த முறையின் நம்பிக்கை.
சமூக எள்ளல்
இன்று பல சீருணவு முறைகள் பயன்பாட்டில் உள்ளன. உடல் எடை குறைப்பும் சீருணவு முறைகளும் (டயட்) இன்று பெரும் வணிகமாக வளர்ந்து நிற்கின்றன. உலகெங்கும் இதற்காகப் பல்லாயிரம் கோடி ரூபாயை மக்கள் செலவிடுகிறார்கள். உடல் எடை குறைப்பு நிலையங்கள் இல்லாத கிராமங்கள்கூட இல்லை என்பதே தற்போதைய யதார்த்த நிலை. இன்றைய சமூகத்தின் பொதுப்புத்தியும் எண்ண ஓட்டமும், உடல் பருமனை அவலமாகவும் எள்ளலுக்கு உரியதாகவும் மாற்றியுள்ளதால், அதிக எடைகொண்டவர்கள் குற்ற உணர்வுக்கும் அவமானத்துக்கும் உள்ளாகித் தங்கள் உடலை வெறுக்கத் தொடங்கு கிறார்கள். இந்தச் சுய வெறுப்பே உடல் எடை குறைப்பு வணிகத்தின் மூலதனம். அறிவியல் அடிப்படையில் அல்லாமல், இந்த மூலதனத்தின் மேல் கட்டியெழுப்பட்ட இந்த வணிகம், தங்கள் பொருட்களைப் பயன்படுத்தினால், தங்கள் சீருணவு முறைகளைப் பின்பற்றினால் ஒல்லியான தேகத்தைப் பெற முடியும் என்று ஆசை வலை விரிக்கிறது. உடல் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டோர் இந்த வலையில் எளிதில் சிக்கிக்கொள்கின்றனர்.
உடற்பயிற்சியும் ஆரோக்கியமான உணவும்
உடல் எடை குறைப்பு உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இருப்பினும், பயன்பாட்டில் இருக்கும் அனைத்து சீருணவு முறைகளும் உடல் எடை குறைப்புக்கு உதவுகின்றன என்று கூற முடியாது. சீருணவு முறைகளால் உடல் எடை குறைந்தவர்களில் 97 சதவீதத்தினர் அடுத்த மூன்றாண்டுகளில் தாங்கள் இழந்த எடையை மீண்டும் பெற்றுவிடுகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சீருணவுகள் எடை குறைப்புக்கோ எடையைப் பராமரிக்கவோ உதவக்கூடும். நன்மை பயக்கும் ஆரோக்கிய விளைவுகள் சிலவற்றையும் அவை கொண்டிருக்கக்கூடும்.
இருப்பினும், சீருணவுகளின் நீண்டகாலப் பயன்பாட்டினால் நேரும் சீர்கேடுகளின் ஆபத்துகளை நாம் புறந்தள்ளிவிட முடியாது. சீருணவு முறைகள் குறித்தும் அவற்றின் பாதிப்புகள் குறித்தும் வலுத்து ஒலிக்கும் அபாயக் குரல்கள் உணர்த்தும் சேதி இது. போதுமான உடற்பயிற்சியுடன், நிறையப் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை உள்ள டக்கிய சீரான, ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலம், ஆரோக்கிய நன்மைகளை ஒருவர் பெற முடியும். சீருணவுக்குப் பதிலாக நம் முன்னோர் பின்பற்றிய வழியும் அதுவே.
கட்டுரையாளர், தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in