உங்கள் நிதிச் சிக்கலை எளிமையாக்க நிதித் திட்டமிடல் அவசியம். முதலீடுகளில் பல வகை உண்டு. வங்கி, தபால் துறை வைப்புத்தொகை, ஓய்வூதிய வைப்புத்தொகை, ஆயுள் காப்பீடுகள் ஆகியவை மிகவும் பாதுகாப்பான முதலீடுகள். ஆனால் இவை எல்லாம் மிகக் குறைவான வட்டி வருவாயைக் கொடுக்கும்.
எனவே, அடுத்த நிலையில் உள்ள மியூச்சுவல் ஃபண்டு மற்றும் கார்ப்பரேட் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.
தங்கம், பங்குகள் இவையும் சிறந்த முதலீட்டு சாதனங்களே. மேற்கண்டவை தவிர, உங்களுக்கு ஒரு நேர்மையான, உங்கள் முதலீடுகளைத் தொடர்ந்து கண்காணிக்கும், வழிநடத்தும் சிறந்த முதலீட்டு ஆலோசகர் தேவை. அவர் கிடைத்தாலே உங்களது பாதி வேலை முடிந்த மாதிரி. பழகப் பழக நீங்களே நிதி நிர்வாகத்தில் தேறிவிடுவீர்கள்.
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டால் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதையும் மறக்கக் கூடாது. பொதுவாக, முதல் நிலையில் முதலீடுகளைத் தேர்ந்தெடுப்பதில் பெரிய சிக்கல்கள் இல்லை. ஏனெனில், பாதுகாப்பான முதலீடுகளை மட்டுமே முதலில் தேர்ந்தெடுப்போம். அவற்றை சில ஆண்டுகளுக்குப் பிறகு மறு முதலீடு செய்யும்போதுதான் சிக்கலே ஏற்படுகிறது. என்ன சிக்கல்?
முதல் நிலையில் நாம் தேர்வு செய்த முதலீடுகளில் சில எதிர்பார்த்ததைவிட அதிக வருவாய் ஈட்டியிருக்கலாம். எனவே மறு முதலீடு செய்யும்போது அந்த முதலீடுகளில் எல்லா பணத்தையும்போட முற்படுவது தவறு. இதுவரை அதிக வருவாய் கொடுத்த முதலீடுகள் எதிர்காலத்திலும் அவ்வாறே கொடுக்கும் என்பது நிச்சயம் இல்லை. இங்குதான் ஒரு சிறந்த முதலீட்டு ஆலோசகர் உங்களுக்கு உதவ முடியும்.
நிலத்தில், தங்கத்தில் அதிக முதலீடு செய்யலாம். இந்த வகை முதலீடுகள் நீண்ட காலத்தில் அதிக வருவாயைக் கொடுத்தாலும், அவற்றை தேவைப்படும்போது விற்பனை செய்வது கடினம். நிலத்தைப் பொறுத்தவரை உடனடியாக சரியான விலை அறிந்து விற்பது கடினம். தங்கத்தைப் பொறுத்தவரை தரம், சேதாரம் போன்ற சிக்கல்கள் உண்டு.
குறிப்பாக, நமக்கு பிள்ளைகள் வந்தபிறகு இந்த வகை சொத்துகளை விற்பதற்கு நமக்கு மனம் வராது. பல நேரங்களில் நம் பிள்ளைகளேகூட அந்த சொத்துகளை விற்பதற்கு விடமாட்டார்கள். எனவே, பரவலாக எல்லா வகைகளிலும் முதலீடு செய்வதுதான் நல்லது. பணத்தை முதலீடு செய்யும்போது புத்திசாலித்தனமாக செயல்படுங்கள். முதுமையை வசதியாக எதிர்கொள்ளத் தயாராகுங்கள்.
(மீண்டும் நாளை சந்திப்போம்)