நலம் வாழ

பிரிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி!

செய்திப்பிரிவு

இஸ்ரேலில் பிறந்த யூதக் குழந்தை களுக்கு, இங்கிலாந்தில் வாழும் இந்திய முஸ்லிம் மருத்துவர் ஒருவர் மேற்கொண்ட அறுவைச் சிகிச்சைதான், சென்ற வாரத்தில் இணையத்தில் அதிகம் பேசப்பட்டது. ஆனால், காரணம் நீங்கள் நினைப்பது அல்ல!

ஒரு வருடத்துக்கு முன்பு இஸ்ரேலில் தலைப்பகுதி ஒட்டி, முகம் எதிரெதிராகப் பிறந்த இரட்டையர்களான அந்தச் சகோதரிகள், பிறந்த ஒரு வருடத்திற்குப் பின் ஒருவரை ஒருவர் முதன்முறையாக முகத்தைப் பார்த்துக்கொள்வதைப் போன்ற அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய ஒளிப்படம் ஒன்றை இஸ்ரேல் அரசு வெளியிட, சமூக வலைத்தளங்களில் அதுவே வைரலா னது. உலகிலேயே இதுவரை 20 முறைதான் இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகள் நடந்திருக்கின்றன. இஸ்ரேலில் நடப்பது இதுவே முதல்முறை. உலகின் புகழ்பெற்ற 12 மருத்துவர்கள் பங்கேற்று, 12 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த அறுவைச் சிகிச்சை என்பதே அது பேசுபொருளானதற்குக் காரணம்.

இந்த அறுவைச் சிகிச்சையைச் செய்த தலைமை மருத்துவரான, டாக்டர் நூருல் ஓவாசி ஜிலானி, “மொழி, இன, மத பேதங்களைத் தாண்டியது மருத்துவம். ஒரு வருட காலம் ஒட்டியே இருந்த அந்த இரண்டு குழந்தைகளின் பெற்றோரது முகத்திலிருந்த தவிப்பும், அதைத் தாண்டி எங்கள் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கையும்தான் இதுபோன்ற சிக்கல் நிறைந்த சிகிச்சையை மேற்கொள்ள வைத்தன. இதுவே நான் மேற்கொண்ட மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை” என்று கூறியுள்ளார்.

ஏன் இந்த அறுவை சிகிச்சை மட்டும் இவ்வளவு சிக்கலானது என்பதைத் தெரிந்துகொள்ளும் முன், ஒட்டிப் பிறக்கும் இரட்டையர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.

பன்மைக் கருத்தரிப்பு

ஆணின் ஒரு விந்தணுவும், பெண்ணின் ஒரு சினை முட்டையும் சேர்ந்து உருவாகும் செல்தான், கருப்பையில் கருவாக வளர்கிறது. இதுவே கருத்தரிப்பு. ஒரே கருத்தரிப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறப்பதை ‘பன்மைக் கருத்தரிப்பு’ என்றும், அதில் இரண்டு குழந்தைகள் உருவாவதை ‘இரட்டையர்கள்’ என்றும் குறிக்கிறோம்.

பன்மைக் கருத்தரிப்பில் உருவாகும் இரட்டையர்களில் இரண்டு வகை உண்டு. ஒருவகை ‘ஒன்றுபோல் தோன்றும் இரட்டையர் கள்’ (monozygous twins). இதில் ஒரு கரு முட்டை, ஒரு விந்தணுவால் உருவாகும் ஒற்றைக் கருவானது, இயல்புக்கு மாறாகத் தானே இரண்டாகப் பிரிந்து இரட்டையர்களாக வளர்கிறது. பார்க்க ஒன்றுபோல் இருப்பார்கள். இன்னொரு வகை, ‘வேறுபாடுள்ள இரட்டை யர்கள்’ (dizygous twins). இரண்டு கரு முட்டைகள் இரண்டு விந்தணுக்களுடன் தனித்தனியே சேர்ந்து உருவாகும் வேறு பாடுள்ள இரட்டையர்கள், பார்ப்பதற்கு ஒன்றுபோல் இருக்க மாட்டார்கள்.

இவர்கள் கருவில் வளர்வதிலும் சில வித்தியாசங்கள் உள்ளன. வேறுபாடுள்ள இரட்டையர்கள் கருவறைக்குள்ளேயே தனக்கான இடம், உணவு, ரத்த ஓட்டத்தைத் தனித் தனியாகப் பிரித்துக்கொண்டு, ஒரே கருவறைக்குள் தனித்தனி அறைகளில் சுதந்திரமாக வளர்வார்கள். ஆனால், ஒன்று போலிருக்கும் இரட்டையர்களோ அன்னை யிடம் தனக்கான இடம், உணவு, ரத்த ஓட்டத்தைத் தனித்தனியாகப் பிரித்துக் கொள்ளாமல் பகிர்ந்து கொண்டு வளர்வார்கள். தம் தேவைகளைப் போராடிப் பெற்றுக்கொள்வதால், ஒத்த உருவ முள்ள இரட்டையர்களில் பொது வாக வளர்ச்சி குறைதல், எடை குறைவு, ரத்த ஓட்டம் தடைபடுதல் போன்ற பல சிக்கல்களும் காணப்படும்.

ஈருயிர் ஓர் உடல்

இவர்களில் மிகமிக அரிதாக, அதாவது லட்சம் குழந்தைகளில் ஒன்றாகக் காணப்படுவதுதான், ‘ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்’ எனப்படும் conjoined twins.

ஒரு கரு முட்டை ஒரு விந்தணு வால் உருவாகும் கரு, இயல்புக்கு மாறாக இரண்டாகப் பிரிவது சிறிது தாமதமடையும்போதும் முழுமை யாகப் பிரியாமல் இருக்கும்போதும், ‘மாற்றான்' பட சூர்யா போல ஒட்டிப் பிறக்கும் இரட்டையர்கள் பிறக்கின்ற னர். தனக்கான இடம், உணவு, ரத்த ஓட்டத்தை, தாயின் கருவறைக்குள்ளேயே பகிர்ந்து கொள்ளும் இந்த இரட்டையர்கள், உடலளவிலும் ஈருயிர் ஓர் உடலாகவே வளர்கின்றனர்.

இப்படி ஒட்டிப் பிறப்பதிலும் சில வகைகள் உள்ளன. நெஞ்சுக்கூடு ஒட்டிப் பிறப்பது தொரக்கோ-ஃபேகஸ், வயிற்றுப் பகுதி ஒட்டிப் பிறப்பது ஆம்ஃபலோ-ஃபேகஸ், இடுப்பு எலும்பு - கால்கள் ஒட்டிப் பிறப்பது இஸ்கியோ-ஃபேகஸ், மிக மிக அரிதாக இரு தலைகள் ஒட்டிப் பிறப்பது க்ரேனியோ-ஃபேகஸ் என்று அழைக்கப்படுகின்றன.

பொதுவாக, இதயங்கள் ஒட்டிப் பிறக்கும் குழந்தைகள் வயிற்றுக்குள்ளேயே அல்லது பிறந்தவுடனேயே இறந்துவிடுகின்றன என்றாலும், மற்ற வகைகளில் பிறக்கும் ஒட்டிய இரட்டையர்கள், பல வகை சிக்கல்களுடன் வாழவே செய்கின்றனர். உதாரணமாக, பல வருட காலம் ஒன்றாகவே வாழ்ந்த சாங்க் பங்கர், யங்க் பங்கர் என்கிற சயாமிய இரட்டையர்கள், ஒட்டிப் பிறந்த இரட்டையர்களில் உலகப் பிரசித்திபெற்றவர்கள்.

சிக்கலும் முன்னேற்பாடும்

ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை உலக மக்கள் அதிசயமாகப் பார்த்தாலும், மருத்துவ உலகம் அவர்களை அப்படிப் பார்ப்பதில்லை. சிக்கல்கள் நிறைந்த ஒட்டிப் பிறந்தவர்களையும், மற்ற மனிதர்களைப் போல இயல்பாக வாழ வைப்பதில்தான் மருத்துவ அறிவியல் முழுமையடைகிறது. வகைகளுக்கேற்ப, தகுந்த அறுவைச் சிகிச்சை மூலம் அவர்களைப் பிரித்து, சாதாரண மனிதர்களாக்க முயன்று கொண்டேதான் இருக்கிறது.

உலகம் முழுவதும், ஒட்டிப் பிறந்த இரட்டையர்களுக்கான அறுவைச் சிகிச்சைகள் 20-க்கும் மேல் வெற்றிகரமாக மேற்கொள்ளப் பட்டுள்ளன. என்றாலும், தலை ஒட்டிப் பிறக்கும் இரட்டையர்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை மிகவும் சிக்கலானது என்று டாக்டர் ஜிலானி கூறுவதற்கான காரணம், நடைமுறைச் சிக்கல்களே.

இஸ்ரேலின் பெர்ஷெவா நகரைச் சேர்ந்த சொரொக்கா மருத்துவ மையத்தில் மேற் கொள்ளப்பட்ட இந்த அறுவைச் சிகிச்சைக்கு, மருத்துவக் குழுவினர் மாதக் கணக்காக ஆயத்தப்படுத்தப்பட்டனர். Tissue expanders என அழைக்கப்படும் காற்று நிரப்பத்தக்க சிலிகான் பைகளைக் குழந்தைகளின் தலைப் பகுதியில் வைத்து, படிப்படியாகக் காற்றை நிரப்பி, அதன் மூலம் வளர்ந்த தோலை அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்தியது, மண்டையோட்டு அமைப்பைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள 3 டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது, mixed reality goggles எனும் சிறப்புக் கண்ணாடிகளைப் பயன்படுத்தியது எனப் பல வியக்கவைக்கும் மருத்துவ அறிவியல் முயற்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

அறுவைச் சிகிச்சைக்கு முன்பே குழந்தை களைப் போன்றே ஒட்டிப்பிறந்த 3 டி மெய்நிகர் மாதிரியை உருவாக்கித் தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டது டாக்டர் ஜிலானி, டாக்டர் மிக்கி கிடியான் தலைமையிலான மருத்துவக் குழு.

இரட்டை மகிழ்ச்சி

அறுவைச் சிகிச்சை நாளன்று மட்டும், குழந்தை அறுவைச் சிகிச்சை நிபுணர், நரம்பியல் சிகிச்சை நிபுணர், இதய நோய் சிகிச்சை நிபுணர், பிளாஸ்டிக் சர்ஜன், மயக்கவியல் நிபுணர் உள்பட இஸ்ரேலுக்கு உள்ளேயும் வெளியேயும் ஐம்பதுக்கும் அதிகமான மருத்துவர்கள் அடங்கிய குழுவுடன், 12 அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் 12 மணிநேரத்திற்கும் மேலாக அறுவைச் சிகிச்சை மேற்கொண்டனர். இன்னும் பெயர்கூட வைக்காத ஒரு வயது நிரம்பிய இரு குழந்தைகளுக்கும் மூளைக்கான ரத்த நாளங்கள், நரம்புகள், வெளிப்புற மண்டையோடு, தோல் ஆகியவற்றை ஆபத்தில்லாமல் பிரித்து வழங்கியிருக்கின்றனர்.

அதனால்தான், மேற்கொண்ட அறுவைச் சிகிச்சைகளிலேயே மிகவும் சிக்கலானது என்று ஜிலானி உள்பட அனைத்து மருத்துவர்களும் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். போராட்டங்கள் நிறைந்த இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர், “முதன்முதலாய் இரண்டு குழந்தைகளையும் தனித்தனியாய் கைகளில் ஏந்திய பெற்றோர் மகிழ்ச்சி, கண்ணீருடன் நன்றி சொல்லும்போது, மருத்துவம் பயின்றதன் இலக்கை அடைந்ததாக உணர்கிறோம்” என்கிறார் டாக்டர் கிடியான் மிக்கி.

‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்று சிலேடையாகச் சொல்லப்படும் இரட்டைக் குழந்தைகள் என்றாலே இரட்டை சந்தோஷம் தான் என்றாலும், ஒட்டிப் பிறக்கும் இரட்டை யர்களால் சிக்கல்களே அதிகம். எதையுமே புதுமையாகச் சேர்த்து உருவாக்கும் அறிவிய லும் மருத்துவமும், இங்கு மட்டும் பிரித்தளித்து இரட்டைச் சந்தோஷத்தைப் பரிசளிக்கிறது!

கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்.

தொடர்புக்கு: sasithra71@gmail.com

SCROLL FOR NEXT