நலம் வாழ

நலம் நலமறிய ஆவல்: அலோபதி, சித்த மருந்துகளை சேர்த்து சாப்பிடலாமா?

செய்திப்பிரிவு

என் மனைவிக்கு வயது 51. ஆஸ்துமா நோய் இருக்கிறது. ஆங்கில மருந்து உட்கொண்டுவருகிறார். இந்நிலையில் சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் திரிகடுகு சூரணத்தையும், கரிசலாங்கண்ணி பொடியையும் சேர்த்து எடுத்துக்கொள்ளலாமா? இதன் மூலம் ஆஸ்துமா குணமாகுமா?

- சொர்ணம் மாரியப்பன், மின்னஞ்சல்

இந்தக் கேள்விக்குத் திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் சிறப்புநிலை சித்த மருத்துவர் எஸ். காமராஜ் பதிலளிக்கிறார்:

ஆஸ்துமா நோயைச் சித்த மருத்துவத்தின் மூலம் குணப்படுத்த முடியும். பல்வேறு வகை ஒவ்வாமைகளாலும், தொற்றுநோய் கிருமிகளின் தாக்கத்தாலும், உடல் வலிமை குறைந்து எதிர்ப்புசக்தி குறைவதாலும், செல்லப் பிராணிகளுடன் நெருங்கிப் பழகுவதாலும், உணவு முறை மாற்றங்களாலும், உணவு ஒவ்வாமையாலும், பருவகால மாற்றங்களால் ஏற்படும் ஒவ்வாமையாலும், மனதுக்கு ஒவ்வாத வாசனைகளை நுகர்வதாலும், பல்வேறு ரசாயனங்கள் கலந்த தலைமுடிச் சாயம், கூந்தல் தைலம், பாடி ஸ்பிரே, சென்ட் ஆகியவற்றின் ஒவ்வாமையாலும், நாள்பட்ட மலக்கட்டு, மன உளைச்சலாலும், காசநோயின் தீவிரத்திலும், நாள்பட எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்கவிளைவாகவும் ஆஸ்துமா நோய் வரலாம்.

திரிகடுகு என்று சொல்லக் கூடிய சுக்கு, மிளகு, திப்பிலி, கரிசலாங்கண்ணி பொடி, தாளிசபத்திரி, லவங்கபத்திரி, ஏலக்காய், சுக்கு, அதிமதுரம், பெருங்காயம், நெல்லிமுள்ளி, கோஷ்டம், திப்பிலி, சீரகம், சதகுப்பை, கருஞ்சீரகம், தேசாவரம், லவங்கம், ஜாதிக்காய், மிளகு, சடாமாஞ்சில், சிறுநாகப்பூ, செண்பகமொக்கு, வாய்விடங்கம், ஓமம், கொத்தமல்லி சேர்த்த தாளிசாதி சூரணம், திப்பிலி ரசாயனம் போன்றவற்றை மருத்துவர் ஆலோசனை பெற்றுத் தனித்தோ அல்லது ஆங்கில மருந்து களுடன் சேர்த்தோ சாப்பிடுவதால் ஆஸ்துமா படிப்படியாகக் குறையும். எந்தவித பயமும் இன்றி சித்த மருந்துகளுடன் ஆங்கில மருந்துகளைச் சேர்த்து உட்கொள்ளலாம்.

‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதி தொடர்ந்து வெளிவரும். பல்வேறு மருத்துவ முறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பதில் அளிப்பார்கள். வாசகர்கள் முக்கியமான மருத்துவ சந்தேகங்களை தொடர்ந்து அனுப்பலாம். மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in

SCROLL FOR NEXT