கோப்புப்படம் 
நலம் வாழ

மூன்றாவது அலையைத் தடுக்க…

நிஷா

கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தமிழகத்தில் சற்றே மட்டுப்பட்டுவருகிறது. அதேநேரம், மூன்றாம் அலை இன்னும் சில மாதங்களில் தாக்கக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். முதல் அலையின் தீவிரம் குறைந்த பிறகு அலட்சியமாக இருந்ததே, இரண்டாம் அலையில் ஏற்பட்ட பேரிழப்புகளுக்குக் காரணம். எனவே, அடுத்துவரும் மூன்றாம் அலையில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு எவற்றில் கவனம் செலுத்த வேண்டும் எனப் பார்க்கலாம்.

அரசு என்ன செய்ய வேண்டும்?

1. வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஐ.சி.யூ. படுக்கைகளின் எண்ணிக்கையையும், ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும்.

2. மருத்துவ ஆக்ஸிஜனின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

3. இரண்டாம் அலையில் பற்றாக்குறையாக இருந்த உயிர்காக்கும் மருந்துகளைப் போதுமான அளவில் இருப்பு வைக்க வேண்டும்.

4. இரண்டாம் அலையின்போது உருவாக்கப்பட்ட தற்காலிக சுகாதார வசதிகளை அகற்றிவிடாமல், தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

5. தற்போது நடைமுறையில் இருக்கும் அதிக பரிசோதனை, தொற்று உறுதியானவுடன் தனிமைப்படுத்துதல், கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

6. புதிய வேற்றுருவை அடையாளம் காண வைரஸ் மரபணுவில் ஏற்படும் மாற்றங்களுக்கான பரிசோதனைகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும்.

7. மக்கள் அதிகம் கூடும் கூட்டங்களுக்கு எதிராகத் தெளிவான கொள்கை முடிவை எடுத்து அரசு அறிவிக்க வேண்டும்.

8. கரோனா குறித்த கற்பிதங்களை அகற்றவும், தனிநபர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வையும் மக்களிடம் பரவலாக்க அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

9. COVID-19 சிகிச்சையின் சமீபத்திய போக்கு, சிகிச்சைமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், சமீபத்திய மருத்துவ அறிவு உள்ளிட்டவற்றை நாட்டின் அனைத்து மருத்துவமனைகளுக்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.

10. தடுப்பூசி போடும் நடைமுறையை எளிதாக்கி, தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு மக்களை ஊக்குவிக்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.

மக்கள் என்ன செய்ய வேண்டும்?

1. தடுப்பூசிகள் குறித்த வதந்திகளை நம்பாமல், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

2. அரசு அறிவித்திருக்கும் கட்டுப்பாடுகளும் வழிகாட்டல்களும் மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கே என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

3. தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணுவதில் அலட்சியமாக இருக்கக் கூடாது. கைகளை அடிக்கடி கழுவுதல், வெளியில் சென்றுவிட்டு வந்தவுடன் குளிப்பது, காய்கறிகளையும் பழங்களையும் கழுவுதல் போன்ற எளிய செயல்களின் மூலம் கரோனாவை விரட்ட முடியும்.

4. வீட்டுக்கு அருகிலிருக்கும் கடைகளிலும், திறந்தவெளிச் சந்தைகளிலும் மளிகைப் பொருள்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை வாங்குவது கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும்.

5. அலுவலகங்களின் குளிரூட்டப்பட்ட அறைகளைத் தவிர்த்து, காற்றோட்டம் உள்ள அறைகளில் வேலைசெய்வது உடல்நலனுக்கும் சுற்றச்சூழல் நலனுக்கும் உகந்தது.

6. நம் வீடே அலுவலகமாகவும் பள்ளியாகவும் மாறிவிட்டது என்பதால், நேரத்தைத் திட்டமிட்டுச் செலவிடுவது மன அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும்.

7. சமையல், வீட்டு வேலை, தோட்ட வேலை போன்றவற்றை நாமே செய்து பழக வேண்டும். பெருந்தொற்றுக் காலத்தில் பணியாள்களை வேலைக்கு வரச் சொல்வது இருதரப்பினருக்கும் ஆபத்து.

8. உறவினர்களையும் நண்பர்களையும் நேரில் சந்திப்பதைத் தவிர்க்க வேண்டும்.

9. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களை மரியாதையுடனும் கனிவுடனும் நடத்த வேண்டும்.

10. கரோனாவுக்கான சிறு அறிகுறி தென்பட்டாலும் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

SCROLL FOR NEXT