முகக்கவசம் இல்லாமல்தான் அவரை எங்கள் கிராம சுகாதார நிலையத்தில் சிலமுறை பார்த்திருக்கிறேன். நான்கூட அவரிடம் முகக்கவசத்தின் அவசியத்தைக் கூறி அவசியம் அதை அணியும்படி சொன்னது நினைவில் இருந்தது. இந்த நிலையில் முகக்கவசம் அணிந்து மரத்தடியில் உட்கார்ந்திருந்த அவர், என்னைப் பார்த்ததும் கண்ணீருடன் எழுந்தார்.
நடந்தது இதுதான். வெளியே செல்லும்போதெல்லாம் எந்தவிதப் பாதுகாப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் சென்று வந்ததால் நோய்த்தொற்று ஏற்பட்டு ஏழு நாட்கள் கோவிட் தனிமை முகாமிலிருந்து வந்ததாகவும், தற்போது கருவுற்றிருக்கும் தன் மனைவிக்கும் தொற்று ஏற்பட்டிருப்பதால் கிராமத்தில் உள்ள சுகாதார நிலையத்தில் தன் மனைவியை அனுமதித்து கவனித்து வருவதாகவும் சொல்லித் தேம்பினார். கருவுற்றிருக்கும் மனைவிக்குத் தேவையில்லாமல் அதிக துன்பத்தைத் தந்துவிட்டோமே என்பது அவர் வருத்தம்.
மீள்வது நம் கையில்
கரோனா என்கிற ஒன்று இல்லவே இல்லை, ஏமாற்று வேலை என்று சொல்லித்திரியும் ஒரு சிலரது தரமில்லாத செயல்களாலும் முகக்கவசம் போன்ற கட்டுப்பாடுகளைச் சரியாகப் பின்பற்றாதவர்களாலும் சமுதாயத்தில் பலரும் பாதிப்புக்குள்ளாக வேண்டி இருக்கிறது. மீண்டும் மீண்டும் தொடர்ந்து அரசு வலியுறுத்திச் சொல்லி வருகிறது. எத்தனை பேர் கேட்கிறார்கள்?
எல்லோரும் கேட்டால்தானே கரோனா பெருந்தொற்றினைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். இயல்பு வாழ்க்கைக்கு எப்போது திரும்புவது? கடைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் எப்போது முழுமையாகத் திறக்கப்படும்? பேருந்து ஓடுவது எப்போது? இதுபோன்ற பல ‘எப்போது’ கேள்விகள் ஒவ்வொருவரிடமும் இருக்கின்றன. எல்லோருக்குமே இதற்கு பதில் தெரியாவிட்டாலும் இதிலிருந்து முழுமையாக மீள்வது நம் கையில்தானே இருக்கிறது.
அவசரத் தேவைக்கே தளர்வுகள்
‘லீவு விட்டாச்சு டோய்’ என்று சிறுவர்கள் மகிழ்ச்சி அடைவதுபோல் ஊரடங்கில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் பலருக்கு மகிழ்ச்சியைத் தருவதாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. மீண்டும் சாலைகளில் கூட்டம். இப்போது நமக்குத் தேவையெல்லாம் சுய கட்டுப்பாடு. அவசரத் தேவைக்காக மட்டுமே தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆக்சிஜன் படுக்கை வசதி கிடைக்காமலும், மருந்து கிடைக்காமலும் துயரப்பட்டதை நினைவில் வைத்துக்கொண்டு சுய கட்டுப்பாடுடன் இருந்தால் மட்டுமே இரண்டாம் அலை வரைபடக்கோடு மீண்டும் மேலே ஏறாமல் பார்த்துக்கொள்ள முடியும். மூன்றாம் அலை வந்தாலும் அதிகத் துயரமின்றிச் சமாளிக்கவும் முடியும்.
விலகியிருப்பதே நன்று
பக்கத்தில் இருப்பவர்கள் எல்லோரும் நலமாகத்தான் இருப்பார்கள் என்பது பலரது நினைப்பு. உடல்நலக் குறைவாக இருப்பவர்கள் வீட்டைவிட்டு வெளியே வந்திருக்க மாட்டார்களே என்பது அவர்களின் தப்புக் கணக்கு. கரோனா தொற்றாளர்கள் என்றால் காய்ச்சலும் கடுமையான இருமலும் இருக்க வேண்டும் என்பதில்லை. அறிகுறிகள் இல்லாத தொற்றாளர்களாகவும் இருந்து, அவர்கள் மூலமும் நோய் பரவலாம். கடைகளுக்குச் சென்றால் தள்ளி நின்று பொருட்களை வாங்கிச் செல்லுங்கள்.
எத்தகைய இறப்பாக இருந்தாலும் நாம் விலகியே இருப்பது நல்லது. இறந்தவரின் இழப்பு ஈடு செய்ய முடியாததுதான். ஆனால், தற்போதைய நிலை அசாதாரணமானது. இனி, இருப்பவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். அவர்களை இழந்துவிடக் கூடாது என்பதில் கவனமாகச் செயல்பட வேண்டும். இறப்பு நிகழ்ந்துள்ள வீட்டில் இருப்போரே, உறவினர், நண்பர் யாரும் வர வேண்டாம் என்று சொல்லிவிடுவது நல்லது.
பரவல் சங்கிலியை உடைப்போம்
இது ஒரு உலகளாவிய பெருந்தொற்று என்பதை நினைவில் வைத்துக்கொண்டு மேற்கொண்டு மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்துவோம். முகக்கவசத்தைத் தொடர்ந்து அணிவதற்குச் சோர்வடையக் கூடாது. தடுப்பூசி போட்டிருந்தாலும் அரசு சொல்கிற வரை கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
கரோனாவைக் கட்டுப்படுத்தி இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்ப வேண்டுமானால் முகக்கவசம், தனிநபர் இடைவெளி போன்றவற்றை அரசு சொல்கிற வரையிலும் நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள், காவல் துறையினர் அனைவரும் கடுமையான மன அழுத்தப் பணிச்சூழலில் இருக்கிறார்கள். விரைவில் அவர்கள் இயல்பான பணிச்சூழலுக்கு வர வேண்டாமா?
கட்டுரையாளர்: மு.வீராசாமி,
மதுரை அரசு கண் மருத்துவ உதவியாளர்,
தொடர்புக்கு: veera.opt@gmail.com