எனக்குத் தெரிந்து, டோலோ (பாரா சிட்டமால்) மாத்திரைக்கு அடுத்து மக்கள் அதிகமாக அதிகமாகப் பயன்படுத்தும் மருந்து அது!
பலரது வீட்டிலும் குடும்ப அட்டை இருக்கிறதோ இல்லையோ, ‘ரோஸ்’ கலரில் ஒரு மருந்து பாட்டில் வைத்திருப்பார்கள். கேட்டால் ‘எனக்கு வாயுப் பிரச்சினை இருக்கிறது’ என்பார்கள். மக்கள் தாங்களே கண்டுபிடித்துக் கொள்ளும் நோய்தான் ‘வாயு' பிரச்சினை.
உடலில் எங்கே வலித்தாலும், அது வயிற்றுப் பகுதியாக இருக்கலாம், நெஞ்சுப் பகுதியாக இருக்கலாம், முதுகுப் பகுதியாக இருக்கலாம், கை, கால், ஏன் விரல் பகுதியாகக்கூட இருக்கலாம். ஆனால், அனைத்துக்கும் வாயுதான் காரணம் என்பார்கள்.
‘கை வலி, விரல் வலி எல்லாம் வாயுவால் வராதே’, என்று சொன்னாலும், இல்லை, இல்லை வாயுதான் காரணமெனச் சத்தியம் செய்வார்கள்! குடலிலிருந்து வாயுவை உடல் முழுக்க அனுப்புவதற்குக் குழாய் போட்டிருப்பது போலவே பேசுவார்கள்.
குறுகிய காலத்துக்கு மருந்துகளைப் பயன்படுத்திக் குணமாக்க வேண்டிய இரைப்பை, குடல் அழற்சி, புண் பாதிப்பிற்கு வாழ்க்கை முழுவதுமே மருந்து சாப்பிடுவது சரியா? இந்த மருந்துகளைத் தேவைக்கு ஏற்ப, தேவை யான அளவு, தேவையான காலம்வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஆனால், நம் ஊரில் உருளைக்கிழங்கு, வாழைக்காய் சாப்பிட்டால் போதும். ‘அய்யோ வாயு வந்திடப் போகிறது’ என்று எந்தவொரு தொந்தரவும் இல்லாமலேயே ‘பான் மருந்துகளை’ப் போட்டுக்கொள்வார்கள். வாரத்தில் ஒரு நாளாவது இந்த மருந்துகளை உட்கொண்டுவிடுவார்கள்.
குடல் அழற்சி/புண்கள்
முறையான உணவுப் பழக்கம் இல்லாதது, காய் கனிகளை எதிரிபோல பார்ப்பது, துரித உணவுக்குத் துதிபாடுவது, அநியாயத்துக்குக் காபி (காஃபின்) அருந்துவது, மதுவுக்கு மண்டியிடுவது, புகைபிடிப்பது, உறக்கத்தைத் தொலைப்பது, பயம், பீதியுடனே வாழ்வது, ஆஸ்பிரின் - ஸ்டீராய்டு மருந்துகள், கர்ப்பத் தடை மருந்துகளை அதிகமாகப் பயன்படுத்துவது எனப் பல்வேறு காரணங்களால் இரைப்பை, குடல் பகுதி பாதிக்கப்பட்டு குடல் புண் உண்டாகலாம் (Acid peptic disease).
தொந்தி, தொப்பை இருப்பது, சாப்பிட்டவுடன் படுப்பது ஆகியவை இரைப்பை அமிலத்தை மேல் குடலுக்குக் கொண்டுவந்து தொந்தரவு ஏற்படுத்தும். வறட்டு இருமலையும் உருவாக்கும்.
இவையெல்லாம்தாம், இரைப்பையில் அதிக அமிலத்தன்மையை ஏற்படுத்து கின்றன. இது இரைப்பையையும் பாதிக்கும். முன் குடலையும், சிறுகுடலின் ஆரம்பப் பகுதியையும் பாதிக்கும். அழற்சியை ஏற்படுத்தும். இதற்கு ஹெச்-பைலோரி ( Helicobacter pylori - H. pylori) என்கிற ஒரு கிருமியும் உதவுகிறது. இதற்கு முறையாக, முழுமையாகச் சிகிச்சை செய்யாவிட்டால் இது நாளடைவில் குடல் புண்களை ஏற்படுத்தலாம். புற்றுநோய் வருவதற்குக்கூட வழி வகுக்கலாம்.
கட்டுரையாளர், மருத்துவப் பேராசிரியர்
தொடர்புக்கு: muthuchellakumar@gmail.com