சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம் கரோனா நோயாளிகளைக் காப்பாற்றலாம் என்பதைத் தென்னாப்பிரிக்காவில் இந்திய வம்சாவளி மருத்துவர் ஒருவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். இந்த சிகிச்சையில் அவர் கடைப்பிடிக்கும் ஒரே அம்சம், சரியான நேரத்தில் எளிமையான சிகிச்சையை நோயாளிகளுக்கு அளிப்பதுதான். நோய் அறிகுறிகள் தோன்றிய முதல் நாளில் தொடங்கி, சரியாக எட்டாவது நாளில் மாற்றங்களைக் கணித்து சிகிச்சை அளிப்பதே இதன் முக்கிய அம்சம்.
இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி இணைப் பேராசிரியர் டாக்டர் ஜி.ராமானுஜம் பகிர்ந்துகொண்டது:
''கரோனாவை எளிதாகச் சமாளிக்கலாம். நாம் தவறான நேரத்தில், தவறான இடத்தில் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறோம். மருத்துவமனைகளுக்குச் செல்லும் நிலை வருவதற்கு முன்பே சரியாகக் கண்காணித்து ஸ்டீராய்டு மருந்துகளைக் கொடுத்தால் பெரும்பாலானவர்களைக் காப்பாற்றி விடலாம்.
டாக்டர் சங்கரா செட்டி என்னும் தென்னாப்பிரிக்க மருத்துவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இந்தியாவில் மருத்துவம் படித்தவர். அவர் 4,000 கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார். யாரும் உயிரிழக்கவில்லை. யாருக்கும் ஆக்சிஜன் கொடுக்கும் அவசியம் நேரிடவில்லை. அவர் கிராமப்புறப் பகுதியில் இருக்கிறார். அவர் நடத்திவரும் சின்ன கிளினிக்கில் இரண்டு நர்ஸ்கள் வேலை பார்க்கிறார்கள்.
அவரது கருத்துப்படி முதல் ஏழு நாட்கள் மிகச் சாதாரணமான வைரஸ் காய்ச்சல் போல்தான் நாவல் கரோனா வைரஸ் உடலில் வினையாற்றுகிறது. சிலருக்கு மட்டும் அறிகுறிகள் ஆரம்பித்த எட்டாவது நாள் மூச்சுத்திணறல், காய்ச்சல், இருமல் போன்றவை வருகின்றன. இவை வைரஸால் ஏற்படுவதில்லை. வைரஸுடன் நம் உடல் மேற்கொள்ளும் மோதலில் வெளியேறும் ரசாயனங்கள் நுரையீரலைப் பாதிப்பதால் வருகின்றன. மிகச் சரியாக எட்டாவது நாள் ஸ்டீராய்டு, அலர்ஜிக்கான மருந்துகளை அவர்களுக்குக் கொடுத்தால் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கிறது என்கிறார்.
கரோனாவை மிக எளிய வகையில் இவர் கையாள்கிறார். அறிகுறிகள் தோன்றிய உடன் ஐவர்மெக்டின் மருந்தையோ HCQS-யையோ பயன்படுத்துகிறார். பின் 7 நாள் காய்ச்சலுக்கும் சளிக்கும் சாதாரண பாரசிட்டமால் மருந்துகளைப் பயன்படுத்துகிறார். எல்லா நோயாளிகளுக்கும் எட்டாவது நாளின் முக்கியத்துவத்தைச் சொல்கிறார்.
மருத்துவமனை சிகிச்சை இன்றி, எளிதாக வெளிநோயாளியாக எந்த மருத்துவரும் சிகிச்சை அளிக்கக்கூடிய நோயாகக் கரோனாவைக் கருத வேண்டும். அறிகுறிகள் லேசாக அரம்பித்த முதல் நாளே மருத்துவரை அணுகினால், மருத்துவமனையில் அட்மிட் ஆகும் நிலையோ ஆக்சிஜன் வைக்கும் தேவையோ ஏற்படாது.
உலக அளவில் அரசாங்கங்கள் ஆக்சிஜன், வென்டிலேட்டர், படுக்கைகள் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கின்றன. இவை எல்லாம் நோயாளியின் உடல்நிலை மோசமான பின் அளிக்கப்படும் சிகிச்சைகள். ஆரம்பக் கட்டத்திலேயே கண்காணித்தால் மருத்துவரோ பயிற்சி பெற்ற செவிலியரோகூட எளிதாகக் கண்காணித்து சிகிச்சை அளிக்கலாம்''.
இவ்வாறு மருத்துவர் ராமானுஜம் தெரிவித்தார்.
சங்கரா செட்டியின் சிகிச்சை முறை குறித்து விளக்கும் காணொலி: https://youtu.be/VTqmXOAU2mQ