நலம் வாழ

நலம்தானா 05 - காமாலை: ஏன் கூடுதல் கவனம் தேவை?

டாக்டர் சு.முத்துச் செல்லக் குமார்

என் நண்பர் ராஜன், தேவகோட்டையில் இருந்து சென்னை வந்திருந்தார். என்னைப் பார்க்க வேண்டுமென்றார். மாலையில் சந்தித்தோம். கூடவே மற்றொருவரும் வந்திருந்தார். “இவருக்காகத் தான் திடீரென கிளம்பி வந்தேன். இவருக்கு மஞ்சள் காமாலை சில மாதங்களாக இருக்கிறது. பல இடங்களிலும் பார்த்துவிட்டார். மஞ்சள் காமாலை மட்டும் குறையவே இல்லை” என்றார்.

மஞ்சள் காமாலை என்று தெரிந்ததும் நாட்டு மருத்துவம், மூலிகை மருத்துவம், கீழாநெல்லியை அரைத்துக் குடித்தது, பத்தியம் இருந்தது என எல்லாவற்றையும் சம்பந்தப்பட்டவர் சொன்னார். அவரின் தொந்தரவுகளைக் கேட்டறிந்த பிறகு, பரிசோதனைகளை மேற்கொண்டேன். அவரது கண் விழி வெண்படலமும் (sclera), நாவின் அடி சவ்வுப்பகுதியும் (sublingual mucosa) மஞ்சள் நிறம் பூசியிருந்தன.

ரத்தத்தில் பித்த நிறமியின் அளவு, சிறுநீரில் சில பரிசோதனைகளை மட்டும் அவர் செய்திருந்தார். “இன்னும் சில பரிசோதனைகளை நாளை செய்துவிட்டுச் சிகிச்சையைத் தொடங்கலாம்” என்றேன். அதன்பிறகு நோயாளியை ஹோட்டலில் விட்டுவிட்டு, வீட்டுக்கு வந்து கூடுதல் விவரம் கேட்டறிந்தார் ராஜன்.

தீவிர அறிகுறிகள்

வந்திருந்த நோயாளிக்கு, மஞ்சள் காமாலையுடன் உடலெங்கும் தாங்க முடியாத அரிப்பு இருந்தது. சொறிந்து சொறிந்து உடலெங்கும் தோல் புண்ணாகி இருந்தது. சிறுநீர் அடர்த்தியான மஞ்சள் நிறத்துடன் (Dark Urine) இருந்ததுடன், மலம் களிமண் நிறத்தில் சென்றது. பசியின்மை, உடல் சோர்வு, எடை குறைவு போன்ற பிரச்சினைகளும் இருந்தன.

பித்த நீர், குடல் வழியாகச் செல்ல முடியாமல் தடை ஏற்பட்டவர்களுக்குத்தான் இதுபோன்ற அரிப்பு, சிறுநீர் அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் இருப்பது, மலம் களிமண் போலச் செல்வது போன்ற அறிகுறிகள் தென்படும்.

அடுத்த நாள் பொதுவான சில பரிசோதனை களுடன் கல்லீரல் செயல்பாடு குறித்த பல்வேறு பரிசோதனைகள், ரத்தம், சிறுநீர்ப் பரிசோதனைகள், ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கணையத்தின் தலைப்பகுதியில் ஏற்பட்டிருந்த கட்டி அழுத்தி, பித்த நீர் குடலுக்குள் வர முடியாமல் தடுக்கப்பட்டு, மஞ்சள் காமாலையைத் தூண்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தக் கட்டி புற்றுநோய்க் கட்டி என்பதும் (Pancreatic Adenocarcinoma) திசுப் பரிசோதனை யில் உறுதியானது. ஆக, கணையப் புற்றுநோய்தான் அவரது மஞ்சள் காமாலைக்குக் காரணம். அது பரவவும் ஆரம்பித்துவிட்ட நிலையில், நெடிய ஆலோசனைக்குப் பிறகு அறுவை சிகிச்சை (Whipple Procedure surgery) மேற்கொள்ளப்பட்டது. என்றாலும், நீண்ட காலம் அவரது ஆயுளை நீட்டிக்க முடியவில்லை – தாமதமாக நோய் கண்டறியப்பட்டதால்!

சுய சிகிச்சை

மஞ்சள் காமாலை ஒரு அறிகுறி. ஆனால், பலரும் மஞ்சள் காமாலையையே ஒரு நோயாக நினைக்கிறார்கள். நவீன மருத்துவர்களோ, மஞ்சள் காமாலையை ஏதோ ஒரு கல்லீரல் நோயின் தொடர்புடைய அறிகுறியாகவே பார்க்கிறார்கள். நோயாளிகள் பொதுவாகக் கண்கள் மஞ்சளாகத் தெரிந்தாலும், சிறுநீர் மஞ்சளாகப் போனாலும், சோற்றில் சிறுநீரை விட்டு மஞ்சளாக மாறுகிறதா எனப் பார்த்துக் கண்டறிய முயலுவார்கள்.

சிலர் நவீன மருத்துவரிடமும் வருவார்கள். அதுவும் மஞ்சள் காமாலைதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள மட்டுமே! மஞ்சள் காமாலைதான் என்று சொல்லிவிட்டால் போதும், அவர்களே வேறு சிகிச்சைக்குச் சென்றுவிடுவார்கள். மஞ்சள் காமாலை வந்த பலரும் நவீன மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு வருவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை, உடலில் பித்தம் அதிகரித்ததால், மஞ்சள் காமாலை ஏற்பட்டுவிட்டது. அதைச் சரிசெய்ய வேறு சிகிச்சைகளையோ, உடலில் சூடு போடுவது போன்ற சிகிச்சைகளையோ மேற்கொள்ளத் தொடங்கிவிடுகிறார்கள்.

கட்டுரையாளர், மருத்துவப் பேராசிரியர்

தொடர்புக்கு: muthuchellakumar@gmail.com

SCROLL FOR NEXT