நலம் வாழ

தடுப்பூசி: சமோவா தீவு சொல்லும் பாடம்!

செய்திப்பிரிவு

சமோவா - பசிபிக் பெருங்கடலில் நியூசிலாந்துக்கும் ஹவாய் தீவுகளுக்கும் இடையிலிருக்கும் குட்டித்தீவு. இரண்டு லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட இந்தத் தீவில் 2019-ம் ஆண்டு ஆரம்பத்தில், குழந்தைகள் தொடர்ச்சியாக இறந்தனர்.

காரணம் தட்டம்மை! காய்ச்சல் சளியுடன், தோலில் தவிடு தடவியது போலப் பரவும் ஒரு வைரஸ் நோயான மீசில்ஸ் என்கிற தட்டம்மை, ஐந்து வயதுக் குழந்தைகளிடையே வெகு வேகமாகப் பரவக்கூடியது. அத்துடன் மூளைக்காய்ச்சல், நிமோனியா, வயிற்றுப் போக்கு என்று மரணம்வரைகூட இட்டுச் செல்லக்கூடியது. ஆனால், இந்தத் தட்டம்மைக்கான தடுப்பூசி 1963-ம் ஆண்டிலிருந்தே உலகெங்கிலும் பல நாடுகளில் தட்டம்மையை அழிக்க உதவியுள்ளது. இந்தத் தடுப்பூசிக்கான பலன் நீண்டகாலம் இருக்குமென்பதால் சமோவா தீவிலும் உடனடியாகத் தடுப்பூசித் திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டன.

அப்போதுதான் அதில் ஒரு குழப்பம் நிகழ்ந்தது. நாடெங்கிலும் நடந்து கொண்டிருந்த தடுப்பூசி முகாம்களில் ஓரிடத்தில் செவிலியர் இருவர் தவறுதலாகத் தட்டம்மைத் தடுப்பூசிக்குப் பதிலாக மயக்க மருந்தினைச் செலுத்தி, இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டன. உடனே, ‘தடுப்பூசியால் குழந்தைகள் பலி’ என்கிற செய்தி காட்டுத்தீ போல பரவி, மக்களிடையே அச்சம் தீவிரமடைய, திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையில், விசாரணைகள் மூலம் உண்மையைக் கண்டறிந்த சமோவா அரசு, தவறுசெய்த இரு செவிலியருக்கும் சிறைத்தண்டனை விதித்ததோடு, ஒன்பது மாதங்கள் கழித்து மீண்டும் தட்டம்மைத் தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்க, அடுத்த பிரச்சினை தடுப்பூசி எதிர்ப்பாளர்களால் வந்தது.

தடுப்பூசி எதிர்ப்பாளர்கள்

இடைப்பட்ட ஒன்பது மாதங்களில் தடுப்பூசி எதிர்ப்பாளர்களான எட்வின் தாமசேசி, டெய்லர் வின்டர்ஸ்டீன் போன்றவர்களின் பேச்சு மக்களிடையே தடுப்பூசியின் மீது சந்தேகத்தை விதைத்தது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடியின் மருமகனான ராபர்ட் எஃப். கென்னடியின் சமோவா தடுப்பூசி எதிர்ப்புப் பயணம் மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்தியது.

இவர்களது விடாத தடுப்பூசி எதிர்ப்புப் பரப்புரையால் அச்சமடைந்த சமோவா தீவு மக்கள், தடுப்பூசியை ஏற்க மறுத்ததால், திட்டத்தை நிறுத்தி வைக்கவேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டதுடன் குழந்தைகளிடையே நோயெதிர்ப்பு காணாமல் போக ஆரம்பித்தது.

தாயின் கதறல்

சோதனைகள் எப்போதும் தனியாக வருவதில்லை என்பதற்கேற்ப அந்த வருட இறுதியில், தீவுக்குள் வந்த வெளிநாட்டுப் பயணி ஒருவரால் மீண்டும் தட்டம்மை பரவியது. இம்முறை ஆயிரக்கணக்கில் குழந்தைகள் பாதிக்கப்பட்டதுடன், குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கையும் கூடியது.

நெருக்கடிநிலை, ஊரடங்கு, விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் என அரசு முயன்றுகொண்டிருக்க, தனது ஒரு வயதுக் குழந்தையைத் தட்டம்மைக்கு இழந்த ஓர் இளம்தாய், “என் மகன்போல இன்னொரு பீட்டர் இந்த மண்ணில் செத்துவிழ வேண்டாம். தயவுசெய்து, உங்கள் குழந்தைகளுக்குத் தடுப்பூசியைப் போடுங்கள்” என்று கதறியது ஊடகங்களில் பரவலானது. எதிர்ப்பாளர்களை உடனடியாகக் கைதுசெய்த அரசு, அடுத்ததாக ‘வீட்டுக்கு வீடு தடுப்பூசித் திட்ட’த்தைக் கொண்டுவர, அது மிகப்பெரிய பலனைக் கொடுத்தது.

இப்போது சமோவா தீவு தட்டம்மை நோயை 100 சதவீதம் கட்டுப்படுத்த முடிந்துள்ளது. சமோவா தீவைக் காட்டிலும் பல மடங்கு பரப்பளவிலும், மக்கள்தொகையிலும் அதிகமிருக்கும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்றுதான்.

நம் நாட்டில் இதுவரை 15 கோடிப் பேர் மட்டுமே முதல் தடுப்பூசியையும், மூன்று கோடிப் பேர் முழுமையாக கோவிட் தடுப்பூசியும் பெற்றுள்ள நிலையில், சமூக நோய்த்தடுப்பாற்றலுக்குத் தேவையான 60-70 சதவீத நிலையை அடைய நாம் செல்ல வேண்டிய தொலைவு மிக மிக அதிகம். ஆனால், நூற்றுக்கணக்கான எட்வின்களும் டெய்லர்களும் நிறைந்துள்ள நமது நாட்டில் தடுப்பூசி எதிர்ப்பு பொய்ப் பிரச்சாரங்களையும் தாண்டித்தான் நோய்த்தடுப்பாற்றலை அடைய வேண்டியிருக்கிறது என்பதை அரசும் மருத்துவர்களும் உணர்ந்தே இருக்கிறார்கள்.

கரோனாவின் பாதிப்பைக் கண்கூடாகப் பார்த்துவரும் நிலையில் நாமும் சமோவா தீவு மக்களைப் போல் ஆதாரமற்ற தடுப்பூசி எதிர்ப்புப் பேச்சுகளை நம்பாமல், அறிவியல் உண்மையை உணர்ந்து கோவிட் தடுப்பூசியை ஏற்போம். மனித சமுதாயத்தை கோவிட் பெருந்தொற்றிலிருந்து காப்போம்!

கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்

தொடர்புக்கு: sasithra71@gmail.com

SCROLL FOR NEXT