நலம் வாழ

ஆரோக்கிய டைரி: எச்சரிக்கை முக்கியம் மக்களே!

செய்திப்பிரிவு

‘கரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளது. கோவிட் வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. அடுத்த 4 வாரங்கள் மிகவும் நெருக்கடியானதாக இருக்கும்’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண், நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் ஆகியோர் இது குறித்துத் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டைவிட இந்த முறை கரோனா வேகமாகப் பரவி வருகிறது. நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்துவருகிறது. கரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், பரிசோதனைகள், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல், தடுப்பூசி திட்டம் ஆகியவற்றைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தொற்றுப் பரவலின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்துவதில் மக்களின் பங்களிப்பு மிக முக்கியம். முகக் கவசம் அணிவதும் கூட்டங்களிலிருந்து விலகி இருத்தலும் அவசியம்.

இலவசத் தடுப்பூசி?

தேசிய அளவில் கரோனா தொற்றால் புதிதாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையானது 1 லட்சத்தைத் தாண்டிவிட்டது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு அனுமதித்துள்ளது. இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கம் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனப் பிரதமருக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாகப் பிரதமருக்கு ஐ.எம்.ஏ. சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், தடுப்பூசியை அனைவருக்கும் இலவசமாகவும், அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதுபோல, சிறிய மருத்துவமனைகளிலும் கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. திரையரங்கம், விளையாட்டு, கலாச்சார, வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பதுடன், சிறிது காலம் தொடர் ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்றும் மருத்துவ சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

தடுப்பூசி: பங்கை இழக்கும் தமிழகம்

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக, தினசரித் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, 400க்கும் மேற்பட்ட மையங்களில் சுகாதார பணியாளர்கள் காத்திருந்தபோதும், தடுப்பூசி போட்டுக்கொள்ள 15,000 பேர் மட்டுமே வந்துள்ளனர். தடுப்பூசி பெறுபவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதால், தமிழகத்துக்கான மத்திய அரசின் கரோனா தடுப்பூசி ஒதுக்கீடு குறையும் நிலை ஏற்பட்டு உள்ளது என்று தமிழகத்தின் சுகாதார செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மாநிலத்துக்கு வழங்கப்படும் தடுப்பூசியின் எண்ணிக்கை, அந்தந்த மாநிலத்தின் மூன்று நாள் சராசரி பயன்பாட்டைப் பொறுத்தே அமையும். "குறைந்த பயன்பாடு குறைந்த ஒதுக்கீட்டிற்கு வழிவகுக்கும். அதிகத் தடுப்பூசிகளைப் பயன்படுத்தும் மாநிலங்களுக்கு அதிக பங்கு கிடைக்கும். எனவே, 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கண்டிப்பாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT