நலம் வாழ

தேர்தல் வாக்குறுதிகள் 2021 - மருத்துவம்: ஆரோக்கியம் காக்கப்படுமா?

முகமது ஹுசைன்

மனித இனத்தின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் அடித்தளமாக இருப்பவை சுகாதாரம், வேளாண்மை, சுற்றுச்சூழல் அம்சங்களே. 16ஆவது சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் முன்னணிக் கட்சிகள் மேற்கண்ட துறைகள் சார்ந்து அளித்துள்ள வாக்குறுதிகள் என்னென்ன, அவற்றின் சாத்தியப்பாடுகள் என்ன, கவனம் பெறாத வாக்குறுதிகள் எவை என்பது குறித்தான பார்வை.

திராவிட முன்னேற்றக் கழகம் அளித்துள்ள முக்கிய வாக்குறுதிகள்:

# மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு சி.டி. ஸ்கேன் வசதி உள்ளிட்ட நவீன பரிசோதனைக் கூடங்கள், புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு, குழந்தையின்மை சிகிச்சைக்கான தனிப்பிரிவு, உயிர் காக்கும் உயர் சிகிச்சைப் பிரிவு ஆகியவை தொடங்கப்படுவதுடன், சிறுநீரகப் பாதிப்பிற்குள்ளான நோயாளிகளுக்கு ரத்தத்தைச் சுத்திகரிக்கவும் (Dialysis Centre) குறைந்த வருமானம் உள்ளவர்களுக்குக் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

# ‘காப்பீட்டுத் திட்டம்’, ‘வருமுன் காப்போம் திட்டம்’ ஆகியவை முறைப்படுத்தப்பட்டு உயிர்க்கொல்லி நோய்களான மாரடைப்பு, புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு போன்ற நோய்களுக்கு இலவச சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

# மாவட்ட நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 50 கி.மீ. தொலைவுக்கு ஒன்று வீதம் அவசர சிகிச்சை மருத்துவமனை அமைக்கப்படும்.

# கிராம மக்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சை அளிக்க அதிக அளவில் நடமாடும் மருத்துவமனைகள் தொடங்கப்படும். 108 ஆம்புலன்ஸ திட்டத்தின் கீழ் ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கையை முதல் கட்டமாக 2000 அளவிற்கு அதிகரித்து, ஓர் ஒன்றியத்துக்குக் குறைந்தது 6 என்ற எண்ணிக்கையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

# பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் கொடுமையான நோய்களான மூளைக் காய்ச்சல், வயிற்றுப் போக்கு, மஞ்சள் காமாலை, கோவிட் 19 போன்றவற்றைத் தடுக்க தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும். தடுப்பூசி 100 சதவிகிதக் குழந்தைகளுக்கும் கிடைக்கத்தக்க வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

# மாவட்டங்கள் தோறும் மறுவாழ்வு மையங்கள் (De-Addiction Centres) அமைக்கப்பட்டு மதுப் பழக்கத்துக்கு ஆளானவர்களுக்கு உரிய மனநலச் சிகிச்சைகளும் பயிற்சியும் வழங்கப் படும்.

# கரோனா நோய்த்தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் பணியிலிருந்தபோது கரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், நகராட்சி - அரசு அலுவலர்கள், காவலர்கள் போன்ற முன்களப் பணியாளர்களின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.

# கோவை, நெல்லை, திருச்சி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் மாநில அரசின் நிதியிலிருந்து புதிய உயர் சிறப்பு மருத்துவமனைகள் கட்டப்பட்டு மூன்றாண்டுகளுக்குள் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அளித்துள்ள முக்கிய வாக்குறுதிகள்:

# மினி கிளினிக்குகளுக்கு நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடங்கள் கட்டித்தரப்படும்.

# அனைத்து மாவட்ட மருத்துவ மனைகளுக்கும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கும் முழு உடல் பரிசோதனை, புற்று நோய் சிகிச்சை வசதிகள் விரிவுபடுத்தப்படும்

# அனைத்து மாவட்டங்களிலும் ‘மதிப்புமிகு முதியோர் - குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள்’ அமைக்கப்படும்.

# புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடங்கப்படும்.

# அரசு - தனியார் கூட்டுப் பங்களிப்புடன் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு, ரேடியேஷன், கீமோதெரபி சிகிச்சைகள் வழங்கப்படும்.

# ஏழை - எளியோர் பயன்பெறும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் கருத்தரிப்பு சிகிச்சை மையம் உருவாக்கப்படும்.

மருத்துவம்: விடுபட்ட முக்கிய அம்சங்கள்

தேர்தல் வாக்குறுதிகளில் கட்சிகள் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டிய அம்சங்கள்:

# கரோனா பெருந்தொற்று போன்ற தீவிரத் நோய்த்தொற்றுகள் ஏற்படுத்தும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு பொதுச் சுகாதாரக் கட்டமைப்பே பெருமளவு கைகொடுத்திருக்கிறது. இந்த நிலையில் பொதுச் சுகாதாரத்துக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எத்தனை சதவீதம் ஒதுக்கப்படுகிறது, அது ஆண்டுதோறும் உறுதிப்படுத்தப்படுகிறதா, முறைப்படி பயன்படுத்தப்படுகிறதா என்பதில் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்

# மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ முன்களப் பணியாளர்களின் முக்கியத்துவம் கரோனா காலத்தில் உணரப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கான சம்பளம், நிரந்தரப்படுத்துதல் போன்றவை குறித்து திட்டவட்ட அறிவிப்புகள் எதுவுமில்லை.

# அலோபதி மருத்துவத்துக்கு ஊக்கமளிக்க நடவடிக்கைகள் எடுக்கப் படுவதுபோல் சித்தா, ஆயுர்வேதம் போன்ற உள்நாட்டு மருத்துவ முறைகள், அவற்றைச் சார்ந்த ஆராய்ச்சிகள், கூட்டு மருத்துவ முறை போன்றவற்றை ஊக்குவிப்பது குறித்த திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை.

# டெங்கு போன்ற மர்மக் காய்ச்சல்கள் ஆண்டுதோறும் தமிழக மக்களை வாட்டியெடுத்துவருகின்றன. இவற்றைச் சமாளிப்பதற்குத் தெளிவான திட்டம் இல்லை.

SCROLL FOR NEXT