என் வயது 29, எனக்கு ஹைபோதைராய்டிசம் இருக்கிறது. ஆங்கில மருந்துகளைச் சாப்பிட்டால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் குறித்துப் பயமாக இருக்கிறது. என்னுடைய பிலிருபின் அளவு 2.25. என்னுடைய டி.எஸ்.எச். அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், ஹைபோதைராய்டிசத்தை நிரந்தரமாகக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் எப்படிப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்? வழிகாட்டுங்கள்.
- ஏ. வேல்முருகன், மின்னஞ்சல்
இந்தக் கேள்விக்குத் திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் சிறப்புநிலை சித்த மருத்துவர் எஸ். காமராஜ் பதிலளிக்கிறார்:
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் நோய்களில் தைராய்டு நோயும் ஒன்று. தாயின் வயிற்றிலிருந்து பிறப்பதற்கு முன்பே, தைராய்டு சுரப்பி தன் வேலையைத் தொடங்கிவிடுகிறது. உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கும், உடலின் சத்துக்களைச் சீராக வைத்திருப்பதற்கும், மனித உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, உறுப்புகளின் செயல்பாடுகளுக்குத் தைராய்டு சுரப்பி உதவி செய்கிறது.
ஏன் வருகிறது?
அயோடின் சத்து குறைபாடு, தைராய்டு சுரப்பியின் தாடிதம், தொற்றுநோய்க் கிருமி, வைரஸ் கிருமி தாக்குதல், பலவித இதய நோய்கள், மன நோய், வலிப்பு நோய், புற்றுநோய்க்காக உட்கொள்ளப்படும் மருந்துகளின் பக்கவிளைவு, கர்ப்பக் காலத்தில் ஏற்படும் தைராய்டு சுரப்பி பாதிப்பு, பிறவி தைராய்டு சுரப்பி குறைபாடு, பிட்யூட்டரி சுரப்பி பாதிக்கப்பட்டிருப்பது, மூளையில் உள்ள ஹைபோதலாமஸ் ஹார்மோன் உற்பத்தி குறைபாடு, உணவு முறை மாற்றம், ரசாயனக் கலப்படம், தீராத மன உளைச்சல் போன்றவற்றால் ஹைபோதைராய்டிசம் ஏற்படலாம்.
சிகிச்சை
சித்த மருத்துவத்தின் மூலம் தைராய்டு நோய்களை, குறை பாட்டைப் பக்கவிளைவுகள் இல்லாமல், உடலின் மற்ற உறுப்புகள் பாதிக்கப்படாமல் குணப்படுத்த முடியும். அமுக்கரா கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சிறுநாகப்பூ, கிராம்பு, சர்க்கரை சேர்ந்த அமுக்கரா சூரண மாத்திரையைக் காலை இரண்டு, இரவு இரண்டு உணவுக்குப் பிறகு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஹைபர்தைராய்டிசம், ஹைபோதைராய்டிசம் இரண்டும் சீராகும்.
இன்னும் சில...
# Ferrul Sulphate எனப்படும் சுத்தி செய்த அன்னபேதி, Corallium rub rum எனப்படும் நற்பவழம், எலுமிச்சை ரசம் சேர்ந்த (அன்னப் பவளச் செந்தூரம்) மருந்தைக் காலையிலும் இரவிலும் 100 மி.கி. எடுத்துத் தேனில் குழைத்து உணவுக்குப் பின்பு உட்கொண்டால் தைராய்டு மிகை, குறை சுரப்புத்தன்மை சமனப்படும்.
# கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த திரிபலா சூரண மாத்திரையும் தைராய்டு மிகை, குறை சுரப்பு தன்மையைச் சமனப்படுத்தும். உணவுக்கு முன் காலை இரண்டு மாத்திரை, இரவு இரண்டு மாத்திரை சாப்பிட வேண்டும்.
அனுபவம் நிறைந்த சித்த மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று, தக்க மருந்துகளுடன் உணவு, உடற்பயிற்சி, மனமகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்தால் இந்த நோய் மட்டுமல்ல, எந்த நோயும் அண்டாது.