2020இல் வெளியான மருத்துவம் சார்ந்த குறிப்பிடத்தக்க நூல்கள்:
இந்து தமிழ் வெளியீடு
மருந்தும் மகத்துவமும்
டாக்டர் கு. கணேசன்
உணவுப் பழக்கத்தில் மாற்றம் ஏற்படுத்துவதன் மூலம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள் தருகின்றன. ‘ஒரு கதை சொல்லட்டுமா சார்’ என்பதுபோல், இந்தக் கட்டுரைகள் வாசகர்களிடம் நேரடியாக உரையாடுகின்றன. கதையைச் சொல்லிக்கொண்டே நறுக்கென்று நமக்கு அவசியமான ஒரு ஊசியையும் போட்டுவிடுகிறார் டாக்டர் கு.கணேசன். அலட்சியத்தின் காரணமாக எவ்வளவு தொற்றுநோய்களுக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்பதையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
இந்து தமிழ் திசை, தொடர்புக்கு: 74012 96562
குழந்தைகளை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள்,
எஸ்.குருபாதம்
குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் எளிதில் கைகூடுவது இல்லை. அந்தக் கலையை நமக்குத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது இந்தப் புத்தகம். குழந்தைகள் வளர்ப்பில், அனுபவ அறிவின் போதாமைகளையும், அறிவியல் அறிவின் தேவையையும் உணர்த்தி, இன்றைய தலைமுறை குழந்தைகளைக் கையாளுவதற்குத் தேவைப்படும் உத்திகளை இந்தப் புத்தகம் கடத்துகிறது. குழந்தைகளின் இயல்பறிந்து பெற்றோர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும்? அவர்களின் பிரச்சினைகளை எப்படி அணுக வேண்டும்? குழந்தைகளைச் சிந்திக்க எப்படித் தூண்ட வேண்டும் என்பதை எளிய நடையில் ஆசிரியர் விளக்கியிருக்கிறார்.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்; தொடர்புக்கு: 044 - 2625 1968.
மருந்துகள் பிறந்த கதை
டாக்டர் கு. கணேசன்
நாம் உட்கொள்ளும் ஒவ்வொரு மருந்துக்கும் ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. விஞ்ஞானிகள் இந்த மருந்துகளைக் கண்டு பிடிக்காமல் போயிருந்தால் நாம் இன்றைக்கு இருந்திருக்க மாட்டோம். மருத்துவ உலகம் இன்று அதிசயிக்கத்தக்க முறையில் நவீனமடைந்திருப்பதற்குப் பின்னால் முகம் அறியாத பல விஞ்ஞானிகள் இருக்கின்றனர். இதுவரை நாம் அறிந்திராத மாபெரும் சாதனையாளர்களை இந்நூல் எளிமையாகவும் சுவைப்படவும் அறிமுகப்படுத்துகிறது. முக்கியமான மருந்துகள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டன, எத்தகைய மனித ஆற்றலும் அசாத்திய உழைப்பும் அதற்குத் தேவைப்பட்டன என்பதை டாக்டர் கணேசன் விவரிக்கும்போது வியப்பும் மரியாதையும் பல மடங்கு அதிகரிக்கின்றன.
கிழக்கு பதிப்பகம், தொடர்புக்கு: 044 4200 9603
உணவு மொழி
டாக்டர் வி. விக்ரம்குமார்
நமது மண் உணவையும் மருந்தையும் ஒருபோதும் பிரித்துப் பார்த்ததில்லை. இயற்கையின் அங்கமாக வாழ்ந்த நம் மூதாதைகள், இயற்கையுடன் இணக்கமாக வாழும் முறையை நமக்கு மரபுச் சொத்தாகத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அந்த மரபுச் சொத்தில் / மருத்துவத்தில் நல்லவை எவை என்று தேர்வுசெய்து கவனப்படுத்துகிறது டாக்டர் விக்ரம்குமார் எழுத்தில் உருவாகியுள்ள இந்த நூல். எப்படி அமர்ந்து சாப்பிடுவது என்பதில் தொடங்கி, எவற்றைச் சாப்பிட வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதுவரை மிக விரிவாக ஈர்க்கும் மொழியில் எழுதப்பட்டுள்ளது.
கருப்பு பதிப்பகம், தொடர்புக்கு: 9840644916
சிக்மண்ட் ஃபிராய்டு: ஓர் அறிமுகம்
டாக்டர் எம்.எஸ். தம்பிராஜா
இருபாதாம் நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளரான சிக்மண்ட் ஃபிராய்டு: உளவியலுக்கு முகம் கொடுத்தவர், நம்மைப் பற்றி நம்மையே எண்ணிப் பார்க்கவைத்தவர். தமிழில் ஃபிராய்டிய உளவியல் பற்றிக் குறிப்பிடத்தக்க நூல்கள் இல்லையென்ற குறையை இந்தப் புத்தகம் நீக்கியுள்ளது. ஃபிராய்டு முன்வைத்த கோட்பாடுகளை அவர் பார்வையின்படி விளக்கியுள்ளதுடன், இன்றைய ஆராய்ச்சிகளின் வெளிச்சத்தில் அவரது கோட்பாடுகளைச் சீர்தூக்கிப் பார்த்து ஒரு நடுநிலையான கண்ணோட்டத்தையும் வழங்குகிறது இந்த நூல். ஃபிராய்டு கூறும் கோட்பாடுகள் எளிமை யானவை அல்ல. அவற்றை விளங்கிக்கொள்வதும் விளக்குவதும் கடினம். அந்தத் தடைகளை இந்த நூலில் டாக்டர் தம்பிராஜா கடந்துள்ளார்.
காலச்சுவடு பதிப்பகம், தொடர்புக்கு: 04652-278525