எனக்கு ஆட்டிசப் பிரச்சினை இருக்கிறது. என்னால் மற்றவர்கள் பேசுவதைக் கவனிக்க முடியவில்லை. என்னுடைய கருத்தைச் சொல்ல முடியவில்லை. மனக்கவலையாகவும் உடல் சோர்வாகவும் உள்ளது. இதற்குத் தீர்வு கிடைக்குமா?
மேகின் மல்கியாஸ், மின்னஞ்சல்
இந்தக் கேள்விக்கு திருநெல்வேலியைச் சேர்ந்த மனநல மருத்துவர் ராமானுஜம் பதிலளிக்கிறார்:
உங்களுக்கு ஆட்டிசம் இருப்பதாக தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். ஆட்டிசம் என்பது சிறுவயதிலிருந்தே பாதிக்கக்கூடிய ஒன்று. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேச்சு மற்றும் மொழித்திறன் குறிப்பிட்ட சில வகைகளில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும். பலருக்கு ஒரு சில வார்த்தைகளுக்கு மேல் பேச வராது. மற்றவர்களுடன் தொடர்புகொள்வதில், தகவல் பரிமாற்றம் செய்வதில், சமூக உறவு கொள்வதில் பாதிப்புகள் இருக்கும். தனிமையிலேயே இருப்பார்கள். மூளை வளர்ச்சிக் குறைபாட்டால் அறிவுத் திறன் குறைபாடும் சிலருக்கு இருக்கும்.
காரணம் என்ன?
உங்களுக்கு இருப்பது மனப்பதற்றம் அல்லது ஏ.டி.ஹெச்.டி (A.D.H.D.) எனப்படும் கவனக் குறைவு / மிகைபரபரப்புக் கோளாறாக இருக்கலாம். லேசான பாதிப்பாக இருந்தால் உளவியல் பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றால் சரிப்படுத்த முடியும். தீவிர பாதிப்பாக இருக்கும்பட்சத்தில், மருந்துகள் தேவைப்படலாம்.
என்ன செய்ய வேண்டும்?
தன்னம்பிக்கையுடன் இருங்கள். மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்று நினைத்துக் கவலைப்படுவதை நிறுத்தினாலே பாதிப் பதற்றம் குறைந்து, கவனிக்கும் திறன் அதிகரிக்கும். மனநல மருத்துவரை அணுகிக் கூடுதல் ஆலோசனை பெறுங்கள்.
நிபுணர்கள் பதில் அளிக்கிறார்கள்
‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதி தொடர்ந்து வெளிவரும். பல்வேறு மருத்துவ முறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பதில் அளிப்பார்கள். வாசகர்கள் முக்கியமான மருத் துவ சந்தேகங்களை தொடர்ந்து அனுப்பலாம்.
மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in
முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002