நலம் வாழ

வீட்டு மருத்துவம்

மாலதி பத்மநாபன்

வீசிங்

வீசிங்குக்கு சுண்டைக்காய் வற்றலோ, உப்பு போட்ட வற்றலோ மருந்தாக உதவும். நன்றாக வறுத்துப் பொடி செய்த வற்றலில் உப்பு இல்லாவிட்டால், உப்பைச் சேர்க்கவும். சூடான சாதத்தில் பிசைந்து 3 உருண்டை சாப்பிட்டால், வீசிங்கிற்கு மட்டுமல்ல வயிறு சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நல்லது. அதேநேரம் உப்பைக் குறைவாகச் சேர்க்கவும்.

முகப் பளபளப்பு

ஆரஞ்சுத் தோலை எடுத்துக் கழுவி, பொடிப் பொடியாக நறுக்கி நன்றாகக் காய வைக்கவும். பிறகு அதை நைஸாக அரைத்து வைத்துக்கொள்ளவும். வைட்டமின் சி இருப்பதால், இந்தப் பொடி தோலுக்கு மிகவும் நல்லது. இதை ரோஸ் வாட்டர் அல்லது பாலில் குழைத்து முகத்தில் ஃபேஸ் பேக்காகப் போட்டுக்கொண்டால், முகம் பொலிவாக இருக்கும். சருமத்தில் பூசினாலும் பளபளப்பாக இருக்கும்.

கண் கட்டி

சிலருக்குக் கண்ணில் அடிக்கடி கட்டி வரும். சிலருக்கு நீண்ட நாள் உதிராமல், அது உபத்திரவம் கொடுக்கும். இந்தக் கட்டி உடல் சூட்டினால் வரும், அலர்ஜியாலும் வரும். கற்றாழையை எடுத்துத் தோலைச் சீவி, உள்ளே இருக்கும் சோற்றுப்பத்தையை எடுத்து நன்றாகக் கழுவி சின்னதாக்கி, ஒரு மெல்லிய துணியில் சுற்றிக் கண் மேல் வைத்துக்கொள்ளவும். பிறகு கடுக்காயை உரைத்து, கண்ணில் படாமல் கட்டி மேலே தடவினால், பழுத்து உடைந்துவிடும்.

தலைமுடி உதிர்தல்

பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை ஆகியவற்றை 1 கைப்பிடி எடுத்து, வழுவழுப்பாக அரைத்து அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில் போடவும். அதனுடன் நெல்லிமுள்ளி பொடியைச் சேர்த்து நன்றாகக் காய்ச்சவும். நெய் வாசனை வரும். பிறகு கொதிக்கும் சத்தம் அடங்கியதும் எடுத்து வைக்கவும். இரண்டு நாள் கழித்து வடிகட்டி, தேய்த்துக் குளிக்கவும்.

SCROLL FOR NEXT