கரோனா நோய்த்தொற்று சார்ந்த சிகிச்சையில் பல்வேறு துறையினர் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். அவர்களில் பிசியோதெரபிஸ்டுகளின் பங்கும் குறிப்பிடத்தக்கது. கரோனா சிகிச்சையின்போதும், சிகிச்சை பெற்றுத் திரும்பி பிறகு இயல்பான வாழ்க்கையை மீட்டெடுப்பதிலும் பிசியோதெரபி முக்கியப் பங்கை வகித்துவருகிறது.
பிசியோதெரபி என்பது மருந்தில்லா மல் உடற்பயிற்சி, வெப்பம் அல்லது குளிர் ஒத்தடம், மின்னாற்றல் கருவிகள் (எடுத்துக்காட்டுக்கு டென்ஸ் - லேசர்), நோயாளிகளுக்கு விளக்கக் கல்வி (Patient education) போன்ற பல்வேறு சிகிச்சை முறைகளைக் கொண்டது.
பயன்கள் என்ன?
திடீரென்று ஏற்பட்ட (acute) அல்லது நாள்பட்ட (chronic) உடல் பிரச்சினைகளிலிருந்து குணமடைந்து, இயக்கத் திறன் (Mobility), உடல் செயல்பாடு (Physical function), அன்றாட வாழ்க்கைக்கு ஒருவரை மீட்டெடுப்பது ஆகியவையே பிசியோதெரபி சிகிச்சையின் முதன்மை நோக்கம். இதன்மூலம் ஒருவரின் உடல், மனம், வேலை, பொழுதுபோக்கு, சமூகம் சார்ந்த ஒட்டுமொத்த நலனையும் வாழ்க்கைத் தரத்தையும் காக்க பிசியோதெரபி உதவுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 8 அன்று உலக பிசியோதெரபி நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, கரோனா தொற்றிலிருந்து மீள்வதில் பிசியோதெரபியின் பங்கை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதை ‘உலக பிசியோதெரபி அமைப்பு’ (World Physiotherapy) நோக்கமாக அறிவித்துள்ளது.
கரோனா சிகிச்சையில் பிசியோதெரபி
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலருக்கு உடல் செயல்பாடு சார்ந்தும், இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதிலும் சிரமங்கள் ஏற்படக்கூடும். இந்த நோயாளிகளுக்கு நோய்த்தொற்றின் தொடக்க, இடைப்பட்ட, நீண்ட காலகட்டத்தில் புனர் வாழ்வுக்கான சிகிச்சைகள் தேவைப்படுகின்றன என்று தற்போது நடைபெற்றுவரும் கரோனா சார்ந்த ஆய்வுகள் காட்டுகின்றன.
கரோனா தொற்றுநோயின் அனைத்துக் காலகட்டங்களிலும், நோயாளிகளுக்குப் புனர் வாழ்வளிப்ப தில், ஒருங்கிணைந்த பல துறை மருத்துவக்குழுவின் அங்கமாக, பிசியோதெரபிஸ்டுகள் முன்கள சிகிச்சை வல்லுநர்களாக விளங்குகின்றனர்.
நோயாளிகள் தங்களைச் சுய தனிமைப்படுத்திக்கொள்ளும் தொடக்கக் காலத்தில், பொதுவான உடல்நலனைப் பராமரிப்பது குறித்து நோயாளிகளுக்கு அறிவுறுத்துவதில் பிசியோதெரபிஸ்டுகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. மேலும், கரோனா தொற்று பரவுவதைத் தடுப்பது குறித்து நோயாளிகள், அவர்களுடைய குடும்பங்கள், பராமரிப்பாளர்களுக்குத் தகுந்த விளக்கக் கல்வியுடன் ஆலோசனை அளிக்கும் பொறுப்பும் பிசியோதெரபிஸ்டுகளுக்கு உண்டு.
தீவிர கரோனா அறிகுறிகளைக் கொண்ட சில நோயாளிகளுக்கு நிமோனியா போன்ற கடுமையான சுவாசப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இந்த நோயாளிகளுக்கு, சுவாசம் சார்ந்த பிசியோதெரபி சிகிச்சை முறைகள் மூலம் பிசியோதெரபிஸ்டுகள் மிகுந்த கவனத்துடன் சிகிச்சையளிப்பார்கள்.
என்ன மாதிரி பயிற்சிகள்?
கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஐ.சி.யு.விலிருந்து மருத்துவமனை வார்டுகளுக்கு மாற்றப்படும் போதும் வார்டுகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்பும் பிசியோதெரபி முக்கியப் பங்கு வகிக்கிறது. குணமடைந்துவரும் நோயாளிகள் எவ்வாறு அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்குப் படிப்படியாகத் திரும்ப வேண்டும், இழந்த உடற்திறனைத் தகுந்த முறையில் எவ்வாறு மீட்டெடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும் பிசியோதெரபிஸ்டுகள் கற்றுக்கொடுக்கிறார்கள்.
இக்கால கட்டத்தில், ஒரு நோயாளி மீட்சி பெற்றுத் திரும்புவதில் உடற்பயிற்சி முக்கிய அங்கம் வகிக்கிறது. பிசியோதெரபிஸ்டுகள், நோயாளியின் உடல்நிலை, சோர்வு/அயர்ச்சி, உடற்பயிற்சி செய்யத் தகுந்த திறன் அளவை மதிப்பிட்டு, அதற்கேற்றாற்போல் ஒவ்வொரு நோயாளிக்கும் தகுந்தவாறு தனிப்பட்ட உடற்பயிற்சித் திட்டத்தைத் திட்டமிடுகின்றனர்.
குதிகாலை உயர்த்துதல், உட்கார்ந்து எழுவது, நடைப்பயிற்சி போன்ற எளிய பயிற்சிகளைக்கொண்டு உடல்திறன், தசைவலிமை, உடல் சமநிலையை மேம்படுத்த உடற்பயிற்சித் திட்டத்தை வகுத்து அளிக்கிறார்கள். இவை தவிர, உடற்பயிற்சிகள் மூலம் ஒருவரின் மனநிலையை மேம்படுத்துவது, நம்பிக்கை, நலவாழ்வு உணர்வளிப்பது போன்ற கூடுதல் பலன்களையும் பிசியோதெரபி தருகிறது.
கரோனா தொற்றின்போதோ குணமடைந்த பிறகோ தொடரும் அயர்ச்சி, வலிமையின்மை, இயக்கத் திறன் (Mobility) குறைவு, அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சிரமங்கள் போன்றவை இருந்தால், ஒரு பிசியோதெரபிஸ்டிடம் தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம்.
கட்டுரையாளர், பிரிட்டனைச் சேர்ந்த பிசியோதெரபி ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: csrikesavan@gmail.com
உலக பிசியோதெரபி நாள்: செப். 8