கரோனா தொற்றுப்பரவல் காரணமாக, கடந்த ஐந்து மாதங்களாக கடுமையான பொது முடக்கம் நடைமுறையில் இருந்தது. தற்போது பொதுமுடக்கத்தில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களும் தனியார் அலுவலகங்களும் 100 சதவீதப் பணியாளர்களுடன் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இ-பாஸ் நடைமுறை முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட்டது.
பேருந்துகளும் மெட்ரோ ரயிலும் இனி இயங்கும். மக்கள் பெருமளவு கூடுவதற்குச் சாத்தியமுள்ள மதவழிபாட்டுத் தலங்கள், பெரும் வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், பூங்காக்கள், கடற்கரைகள் திறக்கப்பட்டுவிட்டன. சாலைகளும் பொதுவெளியும் மக்களால் நிரம்பிவழிகின்றன. இயல்புநிலை திரும்பிவிட்டது போன்ற தோற்றத்தை இது ஏற்படுத்துகிறது. நிற்க.
பேரழிவுக்கு வித்திடும் தளர்வு
உலக அளவில் கரோனாவால் தினமும் புதிதாகப் பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை இந்தியாவில்தான் தற்போது அதிகம். இதுவரை வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு, இந்தியாவில் நாள்தோறும் 80,000க்கும் மேற்பட்டோர் புதிதாக கரோனா பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்தச் சூழ்நிலையில் பொதுமுடக்கத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் தளர்வுகள் பேரழிவுக்கு வழிவகுக்கக் கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
பொருளாதார காரணங்கள்
தளர்வுகளால் ஏற்படச் சாத்தியமுள்ள ஆபத்தின் வீரியம் அரசுக்குத் தெரியும். இருந்தாலும், மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் கேள்விக்கு உள்ளாகியிருப்பதாலும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் இந்தத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்தத் தளர்வுகள் முழுக்க முழுக்க பொருளாதார காரணங்களுக்காக அறிவிக்கப்பட்டவை.
அலட்சியம் வேண்டாம்
கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்தையும் முயன்று பார்த்துவிட்டது. இனி கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவருவதும், அந்தத் தொற்றி லிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வதும் மக்களின் கடமை. அரசாங்கமே தளர்வு அறிவித்துவிட்டதே என்று அலட்சியமாக இருந்தால், அது பேராபத்தில் முடியும்.
காக்கும் கவசங்கள்
கரோனாவைப் பொறுத்தவரை, பாதிப்புக்குள்ளான மனிதரிடமிருந்து வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலமாக மட்டுமே மற்றவர்களுக்குப் பரவும். சமூக இடைவெளி, முகக்கவசம், அடிக்கடி கைகளை சோப்பால் கழுவுதல் போன்ற முன்னெச்சரிக்கை வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், கரோனா தொற்றுக்கு ஆளாவதை 100 சதவீதம் தவிர்த்துக்கொள்ள முடியும். தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்த்து, அத்திவாசியத் தேவைகளுக்காக மட்டும் வெளியே செல்வது அனைவருக்கும் நல்லது. நம்முடைய எச்சரிக்கை உணர்வும் பொறுப்புணர்வும் நம்மை மட்டுமல்ல; பிறரையும் காக்கும் கவசமாக இருக்கும்.