ஜி.எஸ்.எஸ்.
கோவிட் 19-யைப் போலவே சில ஆண்டுகளுக்கு முன்பு உலகச் செய்திகளில் பரபரப்பாக இடம்பெற்ற கொள்ளை நோய் எபோலா. எபோலாவும் வைரஸால் பரவிய நோய். வைரஸ் தாக்கிய இரு நாட்களில் காய்ச்சல், தொண்டை பாதிப்பு, தலைவலி, தசைவலி போன்றவை உண்டாகும்.
வாந்தி, பேதி, உடலில் ஆங்காங்கே தடிப்புகள் போன்றவற்றைத் தொடர்ந்து, குடல் - சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். எபோலா நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை பிப்ரவரி 2014-ல் பெருமளவு தாக்கியது. இதில் சுமார் 11,000 பேர் பலியானார்கள். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் இறந்தனர் என்பதுதான் பேரதிர்ச்சித் தகவல். எபோலாவை எதிர்கொண்டவர்களின் சில அனுபவங்கள் கரோனா விஷயத்தில் நம்மை மறுபரிசீலனை செய்துகொள்ள உதவக்கூடும்:
விழிப்புணர்வுதான் பெரும் சவால்
மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள சியெரா லியோனில் (Sierra Leone) எபோலா வைரஸ் பரவல் தொடங்கியிருந்தது. டாக்டர் ஓலு ஒலுஷயோ என்பவர் அங்கு சென்றிருந்தார். உலக சுகாதார நிறுவனத்தின் குழுவுடன் இணைந்து பணிபுரிந்தார். அவருடைய அனுபவம்:
‘சியெரா லியோனின் தலைநகரான ஃப்ரீடவுனில் ஒரு மழை நாளில் சென்றிருந்தேன். அங்கு செல்ல மிகக் குறுகிய அவகாசம்தான் அளிக்கப்பட்டது என்பதால் போதிய உடைகளைக்கூட எடுத்துச்செல்ல முடியவில்லை. இதைப் பற்றி கவலைப்பட முடியாத அளவுக்கு உடனடியாக எபோலா தடுப்பு மையத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டேன். தெருக்களின் சில பகுதிகளில் சடலங்கள் கிடந்தன. நகரெங்கும் எபோலா மரண பயம் பரவியிருந்தது. நான் நினைத்ததைவிட நிலைமை மிக மோசமாக இருந்தது. இதுபோன்ற ஒரு வைரஸ் கொள்ளை நோயை சியெரா லியோன் முதல்முறையாகச் சந்தித்திருக்கிறது. எனவே, இது குறித்த புரிதல் அவர்களுக்கு இல்லை.
அதற்குமுன் உகாண்டா சென்றிருந்தேன். அங்குள்ள மக்களுக்கு எபோலா குறித்த விழிப்புணர்வு இருந்தது. ஆனால், இந்த விழிப்புணர்வை சியெரா லியோன் மக்களுக்கு ஏற்படுத்துவதே பெரும் சவாலாக இருந்தது. உலக அமைப்புகளின் மூலம் போதிய நிதி கிடைத்துவிட்டது. ஆனாலும் தேவைப்படும் அளவுக்கு செவிலியர்களோ, மருத்துவமனைப் படுக்கைகளோ அங்கு இல்லை. உடன் பணி புரியும் ஊழியர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு களைச் செய்வதே பெரும்பாடாக இருந்தது.
தொடக்கத்தில் எங்களிடம் சிகிச்சைக்கு வந்தவர்கள் உடலெல்லாம் நடுங்க பேயறைந்தது போல் காணப்பட்டார்கள். விஷயத்தின் வீரியத்தைக் கூறும்போதே, அவர்கள் மனம் தளர்ந்துபோகாமல் இருப்பதற்கான ஆலோசனைகளையும் சேர்த்தே கூற வேண்டியிருந்தது. அங்கு சென்ற இரண்டு வாரங்களில் மிகச் சிறப்பாகப் பணிபுரிந்த ஓர் இளம் டாக்டர் எனக்கு நண்பர் ஆனார். ஆனால், அவரும் எபோலாவால் பாதிக்கப்பட்டார். இது என்னை மிகவும் பாதித்தது.
அவரை விமானத்தில் ஏற்றி அனுப்பிய பிறகும், இதை நினைத்து சில நாட்களுக்குத் தூங்காமல் இருந்தேன். இடையே சடலங்களைப் புதைக்கும் பணியிலும் ஈடுபடவேண்டியிருந்தது. வேனில் பல சடலங்களை எடுத்துக்கொண்டு இடுகாட்டுக்குச் செல்ல வேண்டும். ஒரு வேளை நாற்பது சடலங்களை ஒருசேரப் பார்த்தபோது உண்டான மனஉளைச்சலை, விவரிக்கவே முடியாது. பதின்பருவச் சிறுமிகள், கருவுற்ற தாய், இருபது வயது இளைஞன், மூதாட்டி என்று பலரது சடலங்களும் அங்கே இருந்தன.
இப்போது யோசித்துப் பார்க்கும்போது இப்படி ஒன்று நடைபெறவே விட்டிருக்கக் கூடாது. இது வெறும் மனச்சுமை மட்டுமல்ல, நம் அனைவருடைய கூட்டுப் பொறுப்பும்கூட. இப்போது கற்றுக்கொண்ட பாடங்களை எதிர்காலத்தில் மனதில் கொள்வோம் என்று நம்புகிறேன்.’’
புரியாத விபரீதமும் கண்மூடித்தன எதிர்ப்பும்
உலக சுகாதார நிறுவனத்தின் சார்பாகச் செயல்பட்ட லெடிகா லின் என்பவருடைய அனுபவம்:
2014 ஜூலை 13 அன்று லிபேரியா நாட்டிலுள்ள மொன்ரோவியா நகரை அடைந்தபோது, அங்கு எபோலா பரவியுள்ளது என்பதைப் பலரும் அறிந்திருக்கவில்லை. 140 பேர் எபோலாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 80 பேர் பலியாகியிருந்தனர். என்றாலும் அது லிபேரியா மக்களின் அன்றாட வாழ்க்கையை மாற்றியமைத்ததாகத் தெரியவில்லை. கடைத்தெருக்களிலும், தேவாலயங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. டாக்ஸிகள் தொடர்ந்து சாலைகளில் சென்றுகொண்டிருந்தன.
ஐ.நா.வின் வானொலி நிலையத்தைத் தவிர, பிற ஊடகங்கள் எபோலா குறித்துக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. நாளிதழ்கள் அரசியல் விவாதங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருந்தன. எபோலாவின் விபரீதத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை. ஊடகப் பிரதிநிதிகள்கூட இது தொடர்பான கேள்விகளை விளையாட்டுத்தனமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். நிலைமை பின்னர் மாறியது.
உரிய நேரத்தில் செயல்பட்டால், உயிரைக் காத்துக்கொள்ள முடியும் என்பது குறித்து விளக்க வேண்டியிருந்தது. கிராமத்து முக்கியஸ்தர்கள் இதையெல்லாம் வியப்புடன் கேட்டுக்கொண்டனர். ஆனால், தங்கள் கிராம மக்களிடம் இதை எப்படிச் சரியான விதத்தில் விளக்கிச் சொல்ல முடியும் என்பதில், அவர்களுக்குச் சந்தேகம் இருந்தது. அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய கேள்விகளுக்கு விடையளித்தோம்.
அந்தப் பகுதியில் பிரபலமாக இருந்த ஒரு மருத்துவர் எபோலாவால் இறந்த பிறகுதான் நிலைமையின் தீவிரத்தை மக்கள் தெரிந்துகொண்டார்கள். ஜூலை 26 அன்று நடைபெறவிருந்த சுதந்திர நாள் கொண்டாட்டத்தை அரசு ரத்துசெய்தது. பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைக்கப்பட்டது. அந்த நாடு முழுவதும் எபோலாவைப் பற்றியே பதற்றத்துடன் பேசப்பட்டது. விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. பொது இடங்களில் பெரிய தொட்டிகளில் குளோரின் அடங்கிய நீர் வைக்கப்பட்டது - கைகளைக் கழுவிக்கொள்வதற்காக.
எபோலா நோயாளிகளுக்காக புதிய மருத்துவ மையங்கள் உருவாக்கப்பட்டபோது, தங்கள் பகுதியில் அவற்றை நிறுவக் கூடாது என்று கொந்தளிப்புகள் உருவாகின. எபோலா தங்களுக்கும் பரவிவிடுமோ என்ற அச்சமே காரணம். சில இடங்களில் தெருவை அடைத்துக்கொண்டு எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். 2014 ஆகஸ்ட் மாதத்தில் நான் புறப்படும்போது எபோலாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 470. அவர்களில் 220 பேர் பலியாகியிருந்தனர். 2015 மே, 9 அன்று லிபேரியாவில் எபோலா வைரஸ் நோய் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது’’.
உயிர் பிழைத்த மருத்துவர்
காங்கோவில் வசித்த ஒரு பெண்ணுக்கு உடல்நலம் குன்றியது. முதலில் மலேரியாவாக இருக்குமோ என்று சந்தேகம் எழுந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தலைவலி, வயிற்றுவலியைத் தொடர்ந்து அவர் மூக்கிலிருந்து ரத்தம் வடியத் தொடங்கியது. எபோலாவுக்கு அவர் பலியானார். அவருக்குச் சிகிச்சை அளித்தவர் மெளரிஸ் ககுலே என்ற மருத்துவர். அவருக்கும் அதே அறிகுறிகள் தோன்றின. எபோலா தொற்றியும் உயிர் தப்பிய சிலரில் அவரும் ஒருவர். காங்கோவில் பாதிக்கப்பட்ட 2,200 எபோலா நோயாளிகளில், 620 பேர்தான் உயிர் பிழைத்தனர்.
பிழைத்தவர்களுக்கு மீண்டும் அந்த நோய் தாக்காது என்பதால் நோயாளிகளை மருத்துவமனைக்கு அனுப்புவது, தொற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கவனித்துக்கொள்வது போன்ற பணிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. முக்கியமாகத் தங்கள் அனுபவங்களை அவர்கள் பகிர்ந்துகொள்ளும்போது, நோயுற்றவர்களுக்கு அது நம்பிக்கை அளித்தது.
ககுலே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது எபோலா குறித்த விவரங்கள் பரவலாகியிருக்கவில்லை. அவர் குணமடைந்து வீடு திரும்பிய மூன்று நாட்களுக்குப் பிறகுதான் காங்கோ அரசு, தங்கள் நாட்டில் எபோலா பரவியதையே அதிகாரபூர்வமாக அறிவித்தது. தங்களைக் கொல்வதற்காகவே எபோலா சிகிச்சை மையங்களை அரசு அமைத்திருக்கிறது என்ற வதந்திகள் பரவி, அச்சம் அதிகரித்தது.
போலிச் செய்திளைத் தடுக்கும் பணியில் ககுலே ஈடுபட்டார். நோயுற்ற குழந்தைகளுக்கு நம்பிக்கை ஊட்டினார். வைரஸ் நோய் அறிகுறி காணப்பட்ட பலரும் சிகிச்சைபெற மறுக்கிறார்கள் என்ற தகவல் பரவியது. ஆம்புலன்ஸ் அருகே சென்றாலே நோயாளர்களுடைய உறவினர்கள், நண்பர்கள் அவர்களைத் தீண்டத்தகாதவர்களாகக் கருதத் தொடங்கினார்கள். ஒருமுறை தன் மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமரவைத்து எபோலாவால் பாதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணியை மருத்துவமனைக்கு ககுலே அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. ‘’நானும் எபோலா தாக்கி உயிர் பிழைத்தவன்தான். நீங்களும் குணமாகி விடுவீர்கள்’’ என்று கூறியது, அப்பெண்ணுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்தது.
கட்டுரையாளர், தொடர்புக்கு: aruncharanya@gmail.com