நலம் வாழ

மக்களைக் காக்க உயிர் ஈந்த மருத்துவர்கள்

செய்திப்பிரிவு

முகமது ஹுசைன்

2004-ல் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரான ஆழிப் பேரலைக்குப் பிந்தைய ஓர் நாளில், மெரினா கடற்கரையை ஒட்டி வாழும் குடிசைப்பகுதி மக்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்ணிடம், “நீங்கள் எப்படிக் குழந்தைகளைக் காப்பாற்றினீர்கள்?” என்று கேட்டேன். “நான் எங்கே காப்பாற்றினேன்? அதற்கெல்லாம் எங்கே நேரம் இருந்தது.

எல்லாம் ஒரு நொடியில் நடந்து விட்டது. எங்கெங்கும் கடல்நீர் சூழ்ந்திருந்தது. எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் யோசிக்காமல், உயிர் பயத்தில் அலறியடித்துக்கொண்டு ஓடினேன். என் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடினேன்” என்று அழுதபடியே கூறினார். அவர் என்றில்லை, அந்த இடத்தில் நாம் இருந்திருந்தாலும் அப்படித்தான் செய்திருக்க முடியும்.

உயிருக்கு ஆபத்து என்றால் எதைப் பற்றியும் நினைக்காமல், அனிச்சையாகத் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முற்படுவதே மனிதர்களின் / உயிரினத்தின் இயல்பு. இன்றைய கோவிட்-19 தாக்குதல், ஆழிப்பேரலையைவிடப் பெரிது; ஆபத்தானது; வீரியமிக்கது. இருந்தாலும் ஆபத்தைப் பற்றிக் கவலைப்படாமல், மனித இனத்தைக் காக்கும் ஒற்றை நோக்கத்துடன், உலகம் முழுவதும் மருத்துவர்களும் செவிலியர்களும் அயராமல் போராடிவருகிறார்கள். இந்தப் போராட்டத்தில், மருத்துவர்கள் சிலரும் பாதிக்கப்பட்டு, தங்கள் உயிரை இழந்துள்ளனர். அப்படி உயிரிழந்த குறிப்பிடத்தக்க மருத்துவர்களைப் பற்றிப் பார்ப்போம்:

லீ வென்லியாங், சீனா

கடந்த டிசம்பர் இறுதியில், சீனாவின் பிரபல சமூக வலைத்தளத்தில், “அனைவருக்கும் வணக்கம், நான் கண் மருத்துவர் லீ, வூகான் மத்திய மருத்துவமனையில் பணியாற்றுகிறேன்” எனத் தொடங்கும் பதிவை லீ வென்லியாங் பகிர்ந்துகொண்டிருந்தார். அந்தப் பதிவில், வைரஸால் தாக்கப்பட்ட பல நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள் என்றும், இது சார்ஸ் வைரஸாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் அவர் கூறியிருந்தார். சக மருத்துவர்களை எச்சரித்து, முகக் கவசம் அணியும்படி அறிவுறுத்தியிருக்கிறார்.

இதற்கு பதிலடியாக, சமூக ஒழுங்குக்கு ஊறுவிளைவிக்கும் பொய்த் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதை நிறுத்தும்படி அறிவுறுத்தி, அவரிடமிருந்து ஒரு கடிதத்தை சீனாவின் பொதுச் சுகாதாரத் துறை பெற்றது. வதந்திகளைப் பரப்புவதை நிறுத்தும்படி காவல்துறையும் அவரை எச்சரித்தது. ஒரே வாரத்திலேயே அவருடைய எச்சரிக்கை உண்மையானது.

ஜனவரி 10-ல், அவரும் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்தது. அதையும் மீறி, தன்னுடைய மருத்துவக் கடமையை நிறுத்தாமல் அவர் தொடர்ந்தார். பிப்ரவரி 6-ல் தன்னுடைய 33 வயதில், அந்த வைரஸ் தொற்றுக்கு அவரே பலியாகிவிட்டார். தற்போது சீன அரசும் காவல் அதிகாரிகளும் லீயிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். இன்று லீ நம்முடன் இல்லை. ஆனால், அவரால் உயிர் பிழைத்த பலர் நம்மிடையே வாழ்கிறார்கள்.

பெங் யின்ஹுயே, சீனா

29 வயதே நிறைந்த பெங், வூகானில் மருத்துவராகப் பணியாற்றினார். கடந்த பிப்ரவரி 1-ல் அவருக்குத் திருமணம் நடப்பதாக இருந்தது. கரோனா வைரஸ் தாக்குதலின் பரவல் வூகானில் தீவிரமடைந்ததால், தன்னுடைய திருமணத்தை ஒத்தி வைத்தார். கரோனா வால் பாதிக்கப்பட்ட நோயாளி களுக்கு இரவு பகல் பாராமல் சிகிச்சையும் அளித்தார்.

ஆனால், கோவிட்-19 அவரை விட்டுவைக்க வில்லை. கோவிட் 19 தொற்றின் காரணமாக, ஜனவரி 25-ல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நோயின் பாதிப்பு அதிகமானதால், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். உயர்தர சிகிச்சையும் மருத்துவர்களின் போராட்டமும் கரோனாவிடம் தோற்றுப்போயின. தன்னுடைய மருத்துவ சேவை, வருங்கால மனைவி என அனைத்தையும் துறந்து பிப்ரவரி 21 அன்று அவர் மரணத்தைத் தழுவினார்.

மார்செல்லோ நடாலி, இத்தாலி

இத்தாலியைச் சேர்ந்த மருத்துவர் மார்செல்லோ நடாலி (57). இத்தாலியில் நிறைய மருத்துவர்கள், கோவிட்-19 தாக்குத லுக்கு உள்ளாகியிருப்பதாக எச்சரிக்கை மணியடித்தவர் இவரே. கையுறைகள் பற்றாக்குறை காரணமாக, கையுறை இன்றியே கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தன்னுடைய அவலநிலையை, கோபத்துடனும் இயலாமையுடனும் ஒரு இதழுக்கான நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

ஆன்ட்டி பயாடிக் கண்டுபிடிப்புக்குப் பிந்தைய காலகட்டத்தில், மாத்திரையே எந்த நோய்க்கும் தீர்வு என்ற மனநிலையில் இருக்கும் தம்மைப் போன்ற இத்தாலிய மருத்துவர்கள், கோவிட்-19 தாக்குதலை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இல்லையென்றும் அதில் பதிவுசெய்தார். இருந்தபோதும் குறைகளை மட்டும் சொல்லிக் கொண்டிருக்காமல், தன்னால் இயன்றவரை நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தார். பாதுகாப்புக் கவசங்கள் பற்றாக்குறை காரணமாக, அவரும் கரோனா தொற்றுக்கு உள்ளானார். தீவிர சிகிச்சைக்காக மிலனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருந்தாலும் சிகிச்சை பலனின்றி, மார்ச் 24-ல் உயிரிழந்தார். கரோனாவுக்குப் பலியான 13 இத்தாலிய மருத்துவர்களில் இவரும் ஒருவர்.

ஷீரின் ரூஹானி, ஈரான்

கரோனாவின் பாதிப்பு ஈரானில் வெகு தீவிரமாகப் பரவியதாலும், உயிர்ப் பலி தொடர்ந்து அதிகரித்ததாலும், அங்கே மருத்துவர்கள் ஓய்வின்றிப் பணியாற்றி னார்கள். ஷோஹாதா மருத்துவமனையின் மருத்துவரான ஷீரின் ரூஹானி அவர்களில் ஒருவர். விரைவில் அவரும் கரோனா பாதிப்புக்கு உள்ளானார். மருத்துவர்களின் பற்றாக்குறை ஈரானில் நிலவியதால், சிகிச்சையில் இருந்த போதும் நோயாளிகளுக்குத் தொடர்ந்து அவர் சிகிச்சையளித்துவந்தார்.

நரம்புவழியே மருந்தும், மூக்கு வழியே திரவமும் செலுத்தப்பட்ட போதும், கரோனா நோயாளிகளுக்குத் தொடர்ந்து சிகிச்சை யளித்தார். உடல்நலம் மோசமடைந்ததால், பல மருத்துவமனைகளுக்கு ஷீரின் மாற்றப்பட்டார். கடந்த மார்ச் 18-ல் உடல்நிலை பெரிதும் நலிந்து, அவர் உயிரிழந்தார். கடைசி நிமிடம்வரை மருத்துவ சேவையாற்றிய ஷீரினை, ஒட்டுமொத்த ஈரானும் கண்ணீருடன் வழியனுப்பிவைத்தது.

உசாமா ரியாஸ், பாகிஸ்தான்

ஈரான் நாட்டின் எல்லையை ஒட்டியிருக்கும் பாகிஸ்தானின் டஃப்தான் நகரில் கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. அங்குள்ள நோயாளிகளைத் தொடர்ந்து கண்காணித்து, சிகிச்சையளித்து வந்தார் உசாமா ரியாஸ். அவருடைய தன்னலமற்ற மருத்துவ சேவை, மக்களாலும் அரசாலும் பாராட்டப்பட்டது. 'பாகிஸ்தானின் ஹீரோ' என்று அந்நாட்டு ஊடகங்கள் அவரைப் பாராட்டின.

பாதுகாப்புக் கவசங்களின் பற்றாக்குறை காரணமாக, சாதாரண முகக்கவசத்தை மட்டும் அணிந்தபடி நோயாளிகளுக்கு அவர் சிகிச்சையளித்துவந்தார். இதன் காரணமாக விரைவில் அவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. படுக்கையில் வீழ்ந்தார். மூன்று நாள் போராட்டத்துக்குப் பின்னர் அவருடைய வாழ்க்கை முடிந்துபோனது. இன்று உலக நாடுகள் அவரைப் போற்றுகின்றன. ஆனால், மரணப் படுக்கையிலிருந்தபோது, ஸ்கேன் எடுப்பதற்கான வசதிகூட அவருக்குக் கிடைக்கவில்லை.

இந்திய மருத்துவர்கள்

இந்தியாவில் நான்கு மருத்துவர்கள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் மூவர், தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும்போது ஏற்பட்ட தொற்றின் காரணமாகப் பாதிப்புக்கு உள்ளான வர்கள். மும்பையின் சைஃபி மருத்துவமனையில் பணிபுரியும் மற்றொருவருக்கு, இங்கிலாந்திலிருந்து வந்த உறவினரால் தொற்று ஏற்பட்டது. 85 வயதான அந்த மருத்துவர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பேஸ்மேக்கர் கருவியும் அவருக்குப் பொருத்தப்பட்டிருந்தது.

வயது முதிர்வு, ஏற்கெனவே இருந்த உடல் உபாதைகள் காரணமாக, கரோனாவின் பாதிப்பு அவருக்குத் தீவிரமாக இருந்தது. இந்துஜா மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பயனின்றி அவர் உயிரிழந்தார். இந்தியாவில் கரோனா பாதிப்புக்குப் பலியான முதல் மருத்துவர் அவர். டெல்லியின் மொஹல்லா மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவருடைய மருத்துவமனைக்கு வந்த அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மருத்துவரை மதிப்போம்

மரணப் படுக்கையில் இருப்பவர்களுக்கு சிகிச்சையளிப்பது, மரணத்தைவிடக் கொடியது. மரணவாசலில் நிற்பவர்களுக்கு நம்பிக்கை யளிப்பதற்கும் அவர்களைக் காப்பாற்ற இறுதிவரை போராடுவதற்கும் அசாத்திய மனஉறுதி தேவை. ஒவ்வொரு மரணமும் அந்த மனஉறுதியை சற்றே அசைத்து, மனத்தைப் பலவீனப்படுத்தும். இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்த நோயாளிகளின் முகத்தைத் தன்னால் மறக்க முடியவில்லை என்கிறார். நோயாளிகளின் வேதனை ஓலம் தம்முடைய செவியில் இன்னும் ஒலித்துக்கொண்டிருப்பதாக மற்றொரு மருத்துவர் கூறுகிறார்.

இதையெல்லாம் மீறி, மக்களுடைய நலனுக்காக உலகெங்கும் மருத்துவர்கள் போராடிவருகின்றனர். சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் தன்னுடைய 9 வயது மகளை வீட்டில் தனியே விட்டுவிட்டு, மருத்துவமனையிலேயே தங்கி நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், நோயாளிகளின் கடைசி விருப்பங்களைக் குறித்துவைத்துள்ளார். உலகம் கரோனா தொற்றிதிலிருந்து மீண்டபின், அந்த விருப்பங்களை நிறைவேறுவேன் என்று அவர் உறுதிகூறுகிறார்.

இத்தனைக்குப் பிறகும் உலகெங்கும் மருத்துவர்கள் இன்றைக்குத் தாக்கப்பட்டுவருகிறார்கள். நம் நாட்டிலோ கரோனா பரவிவிடும் என்ற வீண் அச்சத்தின் காரணமாக, மருத்துவர்களை வாடகை வீட்டைவிட்டு வெளியேற்றும் அவலமும் நடக்கிறது. மருத்துவர்களும் நம்மைப் போன்று மனிதர்கள்தாம். ஆனால், நம்மைப் போன்று அவர்கள் தமக்காக மட்டும் வாழவில்லை, நமக்காகவும் வாழ்கிறார்கள்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in

SCROLL FOR NEXT