அதிகமான நீர்ச்சத்தைக் கொண்டுள்ள கோடைக் காலப் பழங்களில் ஒன்று தர்ப்பூசணி. இந்தப் பழத்தில் 91.5 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. ஒரு கப் தர்ப்பூசணிப் பழத் துண்டுகளில், 46.2 கலோரிகள் உள்ளன. மாவுச்சத்து, நார்ச்சத்து, இனிப்பு, கொழுப்பு, புரதம், வைட்டமின்- ‘சி’, வைட்டமின் -‘ஏ’, பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் - ‘பி5’ ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
இந்தப் பழத்தில் இருக்கும் ‘லைக்கோபின்’ ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான், இதன் சிவப்பு நிறத்துக்குக் காரணமாக இருக்கிறது. தக்காளியில் இருக்கும் ‘லைக்கோபின்’ அளவைவிட இந்தப் பழத்தில் அதிகமான ‘லைக்கோபின்’ இருக்கிறது. புற்றுநோய், நீரிழிவு நோய் ஆகியவற்றைத் தடுப்பதற்கு இந்தப் பழம் உதவுகிறது. தர்ப்பூசணிப் பழம் தரும் நன்மைகள்…
ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்
தர்ப்பூசணிப் பழம் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்துடன், தர்ப்பூசணியிலிருக்கும் ‘எல்-சிட்ருலைன்’ (L-citrulline), ‘எல்-அர்கினைன் (L-arginine) ஆகிய இரண்டு ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்களும் ரத்தக் குழாய்களின் செயல்பாடுகளை மேம்படுத்துகின்றன. இந்தப் பழத்தில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பானான லைக்கோபின் இதய நோய்கள் ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கிறது.
நார்ச்சத்து அதிகம்
தர்ப்பூசணியில் நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் இருக்கின்றன. இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுப்பதுடன், ஜீரணத்துக்கும் உதவுகின்றன.
நீர்ச்சத்தின் நன்மை
தர்ப்பூசணியில் 90 சதவீதத்துக்கு மேல் நீர்ச்சத்து இருப்பதால், கோடைக் காலத்தில் உண்பதற்கு ஏற்ற பழம் இது. நீர்ச்சத்துடன் எலக்ட்ரோலைட்டான பொட்டாசியம் போன்றவற்றையும் உள்ளடக்கியது இந்தப் பழம்.
மூளை, நரம்பு மண்டலத்துக்கு நல்லது
தர்ப்பூசணியில் கோலைன் (Choline) என்ற ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான் இருக்கிறது. இந்த ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான், தசை இயக்கம், கற்றல் திறன், நினைவுத் திறன், எளிமையான மூளை இயக்கம் ஆகியவற்றுக்கு உதவுகிறது. ஞாபக மறதி நோயான ‘அல்சைமர்’ போன்ற நோய்களைத் தடுக்கவும் தர்ப்பூசணி உதவுகிறது.
தசை வலிக்கு மருந்து
தர்ப்பூசணிப் பழம், சாறு ஆகிய இரண்டும் தசை வலியிலிருந்து விடுபடுவதற்குத் தீர்வாக இருக்கின்றன. 2017-ல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், தர்ப்பூசணிப் பழச்சாற்றைக் குடித்த விளையாட்டு வீரர்கள், மாரத்தான் முடிந்து 24-72 மணி நேரத்துக்குப் பிறகு குறைவான தசை வலி இருந்ததை உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
தோல், கூந்தல் நலன்
தர்ப்பூசணியில் வைட்டமின்-‘சி’, வைட்டமின் –‘ஏ’ ஆகிய ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. இந்த வைட்டமின் –‘சி’ ஊட்டச்சத்து உடலில் ‘கொலஜென்’ (Collagen) உற்பத்திக்குத் தேவையாக இருக்கிறது. செல் கட்டமைப்பு, எதிர்ப்பு ஆற்றல் செயல்படுவதற்கு கொலஜென் பங்களிப்புச் செய்கிறது. அத்துடன், கூந்தல் வளர்ச்சிக்கும், காயங்கள் ஆறுவதற்கும் வைட்டமின்-‘சி’ ஊட்டச்சத்து அவசியம். ஆரோக்கியமான தோலுக்கு வைட்டமின்- ‘சி’ பெரிதும் உதவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், வயதின் காரணமாகத் தோலில் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கும் இந்த ஊட்டச்சத்து உதவுகிறது.
மூட்டுகளைப் பாதுகாக்கும்
தர்ப்பூசணியில் இருக்கும் இயற்கை நிறமியான ‘பீட்டா-க்ரிப்டோஸான்தின் (Beta-Cryptoxanthin) மூட்டுகளை வீக்கத்திலிருந்து பாதுகாக்கிறது. தர்ப்பூசணியைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு முடக்கு வாதம் ஏற்படும் வாய்ப்புக் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பார்வைக்கு நல்லது
கண்களில் இருக்கும் லைக்கோபின், கண்களை வீக்கத்திலிருந்தும், ஆக்ஸிஜனேற்றப் பாதிப்பிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது. தர்ப்பூசணியில் நிறைந்திருக்கும் லைக்கோபின், விழிப்புள்ளிச் சிதைவிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது. வயது காரணமாக ஏற்படும் பார்வைக் கோளாறுகளைத் தடுக்கவும் லைக்கோபின் உதவுகிறது. n கனி n