நலம் வாழ

நல வாழ்வு கேப்ஸ்யூல்: கேரளம் கரோனா

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் நோயின் தலைநகரமான வுஹானில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நிறைய மாணவர்கள் மருத்துவம் படிப்பதால் கரோனா வைரஸ் பாதிப்பைப் பெறும் வாய்ப்பு அதிகமாக அந்த மாநிலத்துக்கு இருந்தது. இந்தப் பின்னணியில் நிபா வைரஸ் காய்ச்சலை வெற்றிகரமாகச் சமாளித்த கேரளம் கரோனா வைரஸ் காய்ச்சலையும் சமாளிக்க வெற்றிகரமாகத் தயாராகியுள்ளது. கோவிட் - 19 ஆல் பாதிக்கப்பட்ட மூன்று பேர்களில் தற்போது இரண்டு பேருக்குப் பாதிப்பு இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

நோய் பாதித்தவரை தனிமைப்படுத்தல், பரிசோதனைகள், மருத்துவமனையில் அனுமதித்தல் ஆகிய எல்லா நடவடிக்கைகளையும் கேரள அரசு தினசரி செய்திகளாக வெளியிடவும் செய்கிறது. இந்தியாவின் 34 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 11 ஆயிரத்து 500 பேர் கரோனா வைரஸ் நோய்க்காக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் மூன்றில் ஒருபகுதியினர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

எக்ஸ்ரே கருவியோடு வந்த புதிய கிருமிநாசினி

முதல் உலகப்போர் தான் மருத்துவத் துறையில் பல முன்னேற்றங்களுக்கு வழிவகுத்தது. ஒரு கோடி பேரை மரணத்தில் இழந்த இந்தப் போரில் தான் காயம்பட்ட வீரர்களின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் அதிகபட்சமான முயற்சிகளை எடுக்கக் கற்றுக்கொண்டனர்.

உறுப்புகளை அகற்றாமலேயே காயங்களில் உள்ள நோய்க் கிருமிகளை அகற்றி சிகிச்சை செய்வதற்கான வாய்ப்புகளையும் ஆராய்ந்து வெற்றிபெற்றனர். ஆம்புலன்ஸ், மயக்கமருந்து, ஆண்டிசெப்டிக் ஆகியவற்றின் உச்சபட்ச பலன்கள் முதல் உலகப் போர் கொடுத்த துயரங்களிலிருந்தே உலகத்துக்கு அறிமுகமாகின. பிரெஞ்ச் மருத்துவர் அலெக்சிஸ் கேரல், ராக்பெல்லர் ஆய்வு நிறுவனத்தில் வேலை பார்த்தவர்.

முதல் உலகப் போரில் மருத்துவ சேவையாற்றும் போது, அவருக்கு எக்ஸ்ரே எந்திரம் தேவைப்பட்டது. பிரெஞ்சு அரசு அதை மறுத்தபோது அவர் ராக்பெல்லர் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார். எக்ஸ்ரே எந்திரத்தோடு பிரிட்டிஷ் உயிர்வேதியியலாளரான ஹென்றி டாகின் அனுப்பப்பட்டார்.

அவர்தான் காயமுற்ற சதை எரிந்துபோகாமல், அதில் இருக்கக்கூடிய அபாயகரமான பாக்டீரியாவைக் கொல்லும் சோடியம் ஹைப்போக்ளோரைடைத் தீர்வாகக் கண்டுபிடித்தவர். காரல் கொண்டுவந்த சோடியம் ஹைப்போக்ளோரைட் எத்தனையோ வீரர்களின் காயங்களை ஆற்றியது. ஐரோப்பா முழுவதும் முதல் உலகப் போரின்போது பரவிய இந்த முறை ‘காரல்-டாகின் மெத்தட்’ என்றழைக்கப்பட்டது.

கரோனா வைரஸ் ஓவியங்கள்

உலகெங்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கரோனாவைரஸ் பாதிப்புக்கு எதிர்வினையாக ஹாங்காங்கைச் சேர்ந்த டாமி பங்க் ஓவியத் தொடர் ஒன்றை வரைந்துள்ளார். நகைச்சுவையும் மிகையும் உள்ள படைப்புகள் என்று தனது ஓவியங்களைப் பற்றிக் கூறும் இவர், தனது படைப்புகளை விட கரோனா வைரஸ் தொடர்பான மக்களின் நடத்தைகள் கூடுதல் விசித்திரமாக உள்ளதாக கூறியிருக்கிறார். வயோதிகர்களும் ஏழை மக்களும் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் அவர், உள்ளூர் அரசிடமிருந்து ஒரு முகமூடி கூட இதுவரை தரப்படவில்லை என்கிறார்.

தொகுப்பு : ஷங்கர்

SCROLL FOR NEXT