கரோனா வைரஸ் நோயைக் குணப்படுத்தும் பேவிலாவிருக்கு சீனாவின் தேசிய மருந்துப் பொருட்கள் நிர்வாக அமைப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்திய கரோனா வைரஸ் தாக்குதலைச் சமாளிக்கும் முதல் மருந்து என்ற பெயரையும் பேவிலாவிர் (Favilavir) பெற்றுள்ளது. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து பேவிலாவிரின் உற்பத்தியும் அரசு அனுமதியுடன் தொடங்கப்பட்டுள்ளது.
வம்பிழுக்கப்படுவதால் பாதிக்கப்படும் ஏழைக் குழந்தைகள்
குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 3,10,000 பள்ளிக் குழந்தைகளிடம் ஆராய்ச்சி நடத்தியதில் பள்ளியில் வம்பிழுக்கப்படுவதால் ஆரோக்கியக் குறைபாடு ஏற்படுவதைக் கண்டறிந்துள்ளனர். 12 முதல் 17 வயதுப் பிரிவில் முன்னேறிய, வளரும், ஏழை நாடுகளில் உள்ள குழந்தைகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டனர். வசதி குறைவான பின்னணியிலிருக்கும் குழந்தைகள் அனைத்து வருவாய்ப் பிரிவு சார்ந்த நாடுகளிலும் வம்பிழுக்கப்படுவதால் பாதிக்கப்படுவதாக அந்த ஆராய்ச்சி கூறுகிறது. இதனால் சிறுவயதில் மனரீதியான பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அந்த ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.
போரில் மருத்துவ உதவி
போரில் படுகாயம் பட்ட வீரர்களுக்கு உடனடியாக மருத்துவம் செய்யும் வசதி பதினெட்டாம் நூற்றாண்டுவரை உலக அளவில் இல்லை. நெப்போலியன் காலத்தில் அவரது தலைமை அறுவை சிகிச்சை நிபுணரான டொமினிக் லாரி, காயம்பட்ட வீரர்களைக் கொண்டு செல்லும் படைப்பிரிவை முதலில் நிறுவினார். ஸ்ட்ரெச்சரைத் தூக்கிச் செல்லும் வீரர்கள் ப்ரன்கார்டியர்ஸ் என்று அழைக்கப்பட்டனர். ஒரு மருத்துவர், மருத்துவக் கருவிகள், நோயாளிப் படுக்கை ஆகியவற்றைக் கொண்ட ஆம்புலஸ் குதிரை வண்டியையும் டொமினிக் லாரியே வடிவமைத்தவர்.
அழகுசார் சிகிச்சை சந்தையில் ஏற்றம்
உலகளாவிய அழகுசார் சிகிச்சை தொடர்பான மருத்துவச் சந்தையின் மதிப்பு 2026-ம் ஆண்டுக்குள் ரூபாய் 7,149 கோடியைத் தொடும். முதுமையடைந்துவரும் மக்களின் தொகை அதிகரிப்பு, வருவாய் அதிகரிப்பு, அழகுசார் சிகிச்சை சார்ந்த தகவல் அறிவு ஆகியவை இதற்குக் காரணம்.