நலம் வாழ

அரசு மருத்துவமனைகளில் தனியார்: யாருக்கு லாபம்?

செய்திப்பிரிவு

முகமது ஹுசைன்

2020-21 நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பிப்ரவரி 1 அன்று தாக்கல்செய்தார். அந்த உரையில் சுகாதாரத் துறைத் திட்டங்களுக்காக ரூ. 69,000 கோடியும் தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.12,300 கோடியும் ஒதுக்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் தனியார் பங்களிப்புடன் மருத்துவமனைகள் கட்டப்படும், 2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் காச நோயை முற்றிலும் ஒழிக்கப்படும், சிறு நகரங்களுக்கும் மருத்துவ வசதியை கொண்டு செல்வதற்கான விரிவான திட்டங்கள் வகுக்கப்படும் என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே அறிவித்தார். இவை வரவேற்கத்தக்கவையே.

இதற்கு அடுத்து அவர் அறிவித்த திட்டத்தைத்தான் வரவேற்க முடியுமா என்று தெரியவில்லை. நாடு முழுவதும் மருத்துவர்களுக்கும் மருத்துவ சேவைப்பணிகளுக்கும் பற்றாக்குறை இருப்பதால், மாவட்ட அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து தனியார் பங்களிப்புடன் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு.

நாட்டில் உள்ள மருத்துவர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், மருத்துவக் கல்லூரிகளைப் பொது-தனியார் கூட்டாண்மை (பிபிபி) முறையில் அரசு மருத்துவமனைகளுடன் இணைப்பதே மத்திய அரசின் திட்டம். இந்தத் திட்டத்தின் பாதகத்தையும் இதனால் விளையக்கூடிய பிரச்சினைகளின் தீவிரத்தையும் மத்திய அரசு முழுமையாக உணர்ந்திருக்கிறதா என்று தெரியவில்லை..

நிதி ஆயோக்கின் வாதம்

தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அரசு மருத்துவமனையின் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்தும் அனுமதி, சலுகை விலையில் நிலம் ஆகியவற்றை வழங்க முன்வரும் மாநிலங்களுக்கு, வயபிலிட்டி கேப் ஃபண்டிங் (சாத்தியத்தன்மை இடைவெளி நிதி) வழங்கப்படும் என்று மத்திய நிதிநிலை உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இந்தத் திட்டத்தை முன்மொழிந்தது நிதி ஆயோக் அமைப்புதான். நிதி ஆயோக்கின் திட்டம் குறித்த தகவல்கள் பொதுத் தளத்தில் கிடைக்கின்றன.

‘மத்திய அரசும் மாநில அரசுகளும் வளப் பற்றாக்குறையாலும் நிதிப் பற்றாக்குறையாலும் திண்டாடிவருகின்றன. இந்த நிலையில், மருத்துவக் கல்வியில் உள்ள இடைவெளியை முழுமையாக அரசே நிரப்புவது என்பது சாத்தியமற்றது. எனவே, மருத்துவத் துறையிலும் பொது-தனியார் கூட்டாண்மையை (பிபிபி) உருவாக்கி, இரு துறைகளின் பலங்களையும் இணைப்பது காலத்தின் கட்டாயம்’ என்பதே நிதி ஆயோக்கின் வாதம். தனியார் மருத்துவக் கல்லூரிகளை அரசு மருத்துவமனைகளுடன் இணைப்பதன் மூலம் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். முக்கியமாக மருத்துவக் கல்வியின் செலவு குறையும் என்று சொல்லி தன் வாதத்துக்கு நிதி ஆயோக் வலுசேர்க்க முயல்கிறது.

பாதிப்புகள்

ஒவ்வொரு மாநிலத்திலும் அனைவருக்குமான ஆரம்ப சுகாதார சேவையில் மாவட்ட மருத்துவமனைகள் இன்றியமையாத பங்களிப்பை ஆற்றுகின்றன. இப்படிப்பட்ட மாவட்ட மருத்துவமனைகளின் வளர்ச்சிக்கு நிதி ஆயோக் முக்கியத்துவம் அளித்ததில்லை என்று துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுடன் மாவட்ட மருத்துவமனைகளை இணைப்பதன் மூலம் மருத்துவமனைகளை இயக்கிப் பராமரிக்கவும் சுகாதார சேவைகளை வழங்கவும் தனியார் நிறுவனங்களை அனுமதிப்பது பொதுச் சுகாதார சேவைகளைத் தீவிரமாகப் பாதிக்கக்கூடும். இந்தச் சந்தேகம் அடிப்படையற்றதல்ல.

நோயாளிகளிடமிருந்து மருத்துவமனைக் கட்டணங்களைத் தனியார் நிறுவனங்கள் உரிமையுடன் கோரலாம், சேகரிக்கலாம் என்று இந்தத் திட்டத்துக்கான பிபிபி ஒப்பந்தத்தின் வரைவில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அப்படியே ஏழைகளுக்கான இலவச மருத்துவ சேவை பாதிக்கப்படாது என்று ஒரு வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும் ‘கட்டணமற்ற நோயாளிகள்’, ‘மற்றவர்கள்’ என்ற இருமை நிலை உருவாக்கப்படும். இரண்டு பிரிவினருக்குமான சேவைகள் ஒரே தரத்தில் இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இதுபோன்ற மாற்றங்கள் பொது மருத்துவக் கட்டமைப்பின் அடிப்படையையே சிதைக்கக்கூடும்.

எதிர்க்கும் மாநிலங்கள்

இந்தத் திட்டத்துக்குத் தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்களிலிருந்து வலுவான எதிர்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த மாநிலங்களின் அடிப்படைக் கட்டமைப்பு மட்டுமல்லாமல்; பொதுச் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பும் வலுவானது; மேம்பட்டது; அது மட்டுமன்றி, கிட்டத்தட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி உள்ளது.

பொது நலனைப் முதன்மையாகக்கொண்டு, நியாயமான முறையில் தரமான மருத்துவ சேவையை இலவசமாக வழங்கிவரும் இந்த மாநிலங்கள், லாபத்தை முதன்மை நோக்கமாகக்கொண்டு மருத்துவ சேவையை அளிக்கவரும் தனியார் நிறுவனங்களுக்குத் தமது மருத்துவமனைகளைத் தாரைவார்க்க மறுப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

யாருக்கு லாபம்?

தனியார் நிறுவனங்கள் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க வேண்டுமென்றால், அவை தங்கள் கல்லூரி வளாகத்துக்குள் ஒரு பொது மருத்துவமனையைக் கொண்டிருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. மருத்துவமனையைக் கட்டுவதும் அதை நிர்வகிப்பதும் எளிதான காரியம் அல்ல; அதிகப் பொருளாதார சுமை அதனால் ஏற்படும்.

முறையான / தரமான மருத்துவமனை இல்லை என்ற காரணத்துக்காகப் பல மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிகழ்வுகள் ஏராளமாக உள்ளன.

இந்த நிலையில், அரசு மருத்துவமனைகள் தங்களுக்கு எளிதாகக் கிடைக்கும் என்றால், அது கண்டிப்பாகத் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு லாபம் அளிப்பதாகவே அமையும். அத்துடன் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்படும் சாத்தியம் இருப்பதையும் மறுத்துவிட முடியாது.

அரசைப் பொறுத்தவரை, மருத்துவமனைகளை நிர்வகிக்கும் செலவுகளிலிருந்து மட்டு மல்லாமல்; தரமான மருத்துவர்களை நியமிக்கும் பொறுப்பிலிருந்தும் அது தன்னை விடுவித்துக்கொள்ளும். அரசு பொறுப்புடைமையிலிருந்து விலகுவதற்கும் தனியாருக்கு நன்மை பயக்கவும்கூடிய, இந்தத் திட்டத்தின் பாதகங்கள் அனைத்தையும் பயனாளிகளான மக்களே சுமக்க வேண்டிய நிலை ஏற்படும்.

மாற்று என்ன?

தரமான மருத்துவ சேவையை அனை வருக்கும் வழங்குவதற்கான வளங்களையும் மருத்துவர்கள் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்பதை மத்திய அரசு உணர்ந்திருப்பது வரவேற்புக்குரியதே. ஆனால் இந்த நோக்கத்தை நிறைவேற்ற தனியார் நிறுவனங்களை நாடுவதற்கு பதிலாக மாறாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் சுகாதார செலவினத்தை மத்திய அரசு உயர்த்த வேண்டும்,

ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது அந்த நாட்டு மக்களுடைய கல்வி வளத்தையும் உடல்நலத்தின் தரத்தையும் சார்ந்தது. தரமான கல்வியையும் மேம்பட்ட மருத்துவ சேவைவையும் இலவசமாக தருவதை உறுதிசெய்வது அரசின் அடிப்படைக் கடமை. இதை அரசு ஒருபோதும் மறக்கக் கூடாது.

SCROLL FOR NEXT