மூளையில் உள்ள காமா- அமினோ அமிலச் சுரப்பை யோகா பயிற்சி அதிகப்படுத்தி மன அழுத்த அறிகுறிகளைக் குறைப்பதாக மாற்று மருத்துவத்துக்கான ஆய்விதழான ஜர்னல் ஆப் ஆல்டர்நேட்டிவ் அண்ட் காம்ப்ளிமெண்டரி மெடிசின் தெரிவித்துள்ளது. ஒரு வாரத்தில் ஒரு யோகா வகுப்புக்குச் சென்றால் கூட மன அழுத்தத்தில் இருப்பவர்களால் அதன் பலன்களை உணர முடியும். உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுப்படி அமெரிக்காவில் ஆண்டுதோறும் 1,6 கோடி பேரை மன அழுத்தம் தாக்குகிறது. உலகெங்கும் மக்களை அதிகம் பாதிக்கும் குறைபாடுகளில் ஒன்றாக மன அழுத்தம் உள்ளது.
கூந்தல் நலத்துக்குத் தேவை
கூந்தல் நலத்தைப் பாதுகாக்கப் பெரிய பெரிய அழகு நிலையங்களுக்குப் போக வேண்டியதில்லை. வாழ்க்கை முறை, சக்கை உணவை அதிகம் உட்கொள்வது, சூழலியல் மாசுபாடு போன்றவற்றால்தான் கூந்தல் உலர்ந்தும் உயிர்த்தன்மை குறைந்தும் போகிறது. நெல்லிக்காயை அதிகம் சாப்பிட்டால் கூந்தலின் உறுதியும் பொலிவும் அதிகரிக்கும். வைட்டமின் சி அதிகம் கொண்ட பழங்களை எடுத்துக்கொண்டால் நரையைத் தள்ளிவைக்கலாம். இரும்புச் சத்து கொண்ட உணவுவை உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தைப் பெருக்கி முடிவளர்ச்சியை அதிகப்படுத்தும். பொடுகையும் தவிர்க்கலாம். சிகைக்காயும் கூந்தல் பாதுகாப்புக்குக் கைகண்ட மருந்து.
புற்றுநோய் விடுக்கும் எச்சரிக்கை
வளரும் நாடுகளும் ஏழை நாடுகளும் புற்றுநோய் சேவையில் கூடுதல் வசதிகளைப் பெருக்க வேண்டுமென்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. புற்றுநோய் சிகிச்சை, நோயறியும் வசதிகள், மருத்துவ வசதி ஆகியவற்றை மேம்படுத்தாவிட்டால் அடுத்த இருபது ஆண்டுகளில் உலகம் முழுவதும் புற்றுநோயாளிகள் சதவீதம் அறுபதாக அதிகரிக்கும் என்று அதன் அறிக்கை தெரிவிக்கிறது.
வளரும் நாடுகளும் ஏழை நாடுகளும் தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் குழந்தைப் பேறு தொடர்பான வசதிகளிலுமே கவனம் செலுத்துவதால், புற்றுநோய் தொடர்பான முதலீடுகளைக் குறைவாகவே செய்கின்றன என்பதே இதற்குக் காரணம். புற்றுநோய் சார்ந்து முழுமையான சிகிச்சை வசதிகளுடன் அமெரிக்கா போன்ற முதல் உலக நாடுகளில் 90 சதவீதம் இருக்கிறது என்றால், அதற்கு இணையான புற்றுநோய் மருத்துவ வசதிகளை அளிக்கும் மூன்றாம் உலக நாடுகள் வெறும் 15 சதவீதமே.
வலிப்பு நோய் நாள்
ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் 2-வது திங்கட்கிழமை சர்வதேச வலிப்பு நோய் நாளாக அனுசரிக்கப்படுகிறது. அந்த நாளில், வலிப்பு நோயாளிகளின் வாழ்க்கை, அவர்களுடைய குடும்பங்கள், அவர்களுடைய எதிர்காலம் ஆகியவற்றை வலிப்பு நோய் எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. உலகமெங்கும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து கோடி பேர்.
80 சதவீத வலிப்பு நோயாளிகள் வளரும் நாடுகளிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் வசிக்கின்றனர். சரியான நேரத்தில் நோயைக் கண்டு முறையான சிகிச்சையைப் பெற்றால் வலிப்பில்லாத வாழ்க்கை வாழமுடியும். ஏழை நாடுகளில் வசிக்கும் வலிப்பு நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் சரியான சிகிச்சை கிடைக்காமலேயே வாழ்கின்றனர்.