உலகில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பழங்களில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது வாழைப்பழம்தான். எல்லாக் காலங்களிலும் கிடைக்ககூடிய பழமான இது, ஆண்டு முழுவதும் அறுவடை செய்யப்படுகிறது. மதிய உணவு இடைவேளைக்கு முன்னும், பின்னும் சாப்பிடக்கூடிய சிறந்த பழமாக இது இருக்கிறது.
ஒரு நடுத்தர அளவு வாழைப்பழத்தில் 105 கலோரிகள் இருக்கின்றன. இயற்கையான சர்க்கரையை அதிகமாகக் கொண்டிருக்கும் வாழைப்பழம், எளிமையாகச் செரிக்கக்கூடிய பழமாகவும் இருக்கிறது. அன்றாடம் வாழைப்பழம் சாப்பிடுவதற்கான சில காரணங்கள்…
சிறந்த கதிரியக்க உணவு
வாழைப்பழத்தில் அதிக அளவில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தம், மாரடைப்பு உருவாவதைத் தடுக்க உதவுகிறது. ஒரு நாளில் 1540 மில்லிகிராம் பொட்டாசியம் எடுத்துக்கொண்டால், பக்கவாதம் ஏற்படுவதை 21 சதவீதம் குறைக்க முடியும். அன்றாடம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுவந்தால், மாரடைப்பு, பக்கவாதம் வராமல் தடுக்க முடியும். அத்துடன், வாழைப்பழத்தில் அதிக அளவில் கதிரியக்கத் தன்மை உள்ளது. 600 வாழைப்பழங்களில் ஒரு மார்பக ‘எக்ஸ்-ரே’ எடுக்கும் அளவுக்கான கதிரியக்க வெளிப்பாடு உள்ளது.
வித்தியாசமான வண்ணங்கள்
வாழைப்பழங்களில் 500-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. மஞ்சள் வாழைப்பழத்தைப் போலவே செவ்வாழையிலும் அதிகமான ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. எதிர்ப்புச் சக்தி, இதய ஆரோக்கியம், ஜீரணத்துக்குத் தேவையான அடிப்படையான ஊட்டச்சத்துகள் செவ்வாழையில் நிறைந்திருக்கின்றன. பொட்டாசியம், வைட்டமின்-சி, வைட்டமின்-பி6, நார்ச்சத்து ஆகியவை செவ்வாழையில் அதிகமாக இருக்கின்றன. அத்துடன், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், துல்லியமான கண் பார்வைக்கும் செவ்வாழை உதவுகிறது.
எலும்புகளுக்கு நல்லது
கால்சியத்தை உடல் ஏற்றுக்கொள்ள வாழைப்பழங்கள் பெரிதும் உதவுகின்றன. எலும்புகளில் வலிமையை அதிகரிப்பதில் வாழைப்பழத்துக்கு அதிகப் பங்கு இருக்கிறது. வாழைப்பழத்தில் இருக்கும் குளுடாதியோன் (Glutathione) என்ற ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான் எலும்பு செல்களை ஆக்ஸிஜனேற்ற பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது. அத்துடன், வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம், காப்பர், வைட்டமின்-சி உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் எலும்புகளின் கனிம அடர்த்தியைப் பாதுகாக்க உதவுகின்றன.
எளிமையான ஜீரணம்
வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து உணவுச் செரிமானத்துக்கு உதவுகிறது. வாழைப்பழத்தில் இனிப்பு அதிகமாக இருந்தாலும் (14 கிராம் சர்க்கரை), அதில் குறைவான குளுகோஸ் இருக்கிறது. அதனால், ரத்தச் சர்க்கரை அளவுகளில் அதிகப் பாதிப்பை வாழைப்பழம் ஏற்படுத்துவதில்லை.
இதய நலம்
பொதுவாக, நார்ச்சத்து அதிகமாக இருக்கும் உணவுப் பொருட்கள் இதயத்துக்கு நல்லது. பிரிட்டனின் லீட்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில், நார்ச்சத்து அதிகமாக இருக்கும் வாழைப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவரும்போது இதய நோய்கள் ஏற்படுவது குறைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தப் பழத்தில் இருக்கும் பொட்டாசியம் 27 சதவீதம் இதய நோய்களைக் குறைக்கிறது.
சிறுநீரகச் செயல்பாடு
வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கவும், ஆரோக்கியமான சிறுநீரகச் செயல்பாடுகளுக்கும் உதவுகிறது. ஒரு வாரத்தில், இரண்டு அல்லது மூன்று முறை வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு 33 சதவீதம் சிறுநீரக நோய்கள் ஏற்படுவது குறைகிறது. அதுவே, ஒரு வாரத்தில் நான்கு முதல் ஆறு முறை வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்குச் சிறுநீரக நோய்கள் ஏற்படுவது 50 சதவீதம் குறைகிறது.
உடற்பயிற்சிக்குச் சிறந்தது
வாழைப்பழத்தில் அதிகமாக இருக்கும் கனிமங்களால், இது விளையாட்டு வீரர்களுக்கான சிறந்த பழமாக விளங்குகிறது. உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் தசைப் பிடிப்புகளைக் குறைக்க வாழைப்பழம் உதவுகிறது. உடற்பயிற்சி செய்வதற்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளை வாழைப்பழம் அளிக்கிறது.
எளிமையாகச் சாப்பிடலாம்
ஆரோக்கியம் மட்டுமல்லாமல் பழங்களிலேயே எளிமையாக எப்போதும் கிடைக்கும் பழமாக வாழைப்பழம் விளங்குகிறது. நொறுக்குத் தீனியாக ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடுவதற்குப் பதிலாக எப்போதும் வாழைப்பழத்தைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. தயிர், மில்க் ஷேக் போன்றவற்றிலும் வாழைப்பழத்தைச் சேர்த்துச் சாப்பிடலாம். சர்க்கரைக்குப் பதிலாக கேக் செய்யும்போது வாழைப்பழத்தைப் பயன்படுத்தலாம்.