நலம் வாழ

குணப்படுத்தும் கைகள்

செய்திப்பிரிவு

மருத்துவ சேவைக்குத் தன்னுடைய 40 ஆண்டு காலத்தை அர்ப்பணித்தவர் டாக்டர். ஆர். வெங்கடசுவாமி, அப்போலோ மருத்துவமனையில் கை அறுவை சிகிச்சைக்குப் (Hand Surgeon) புகழ்பெற்ற நிபுணரான இவர், அதே துறையில் ஸ்டேன்லி மருத்துவமனையில் பேராசிரியராக பணியாற்றியவர். இவருடைய வாழ்க்கைப் பயணமும் அனுபவங்களும் ‘ஹீலிங் ஹேண்ட்ஸ்’ என்ற பெயரில் ஒரு புத்தகமாகக் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு துறைகளிலிருந்து மருத்துவர்கள் பங்கு பெற்றனர். மேலும், ஜெய்ப்பூர், சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர்களும் கலந்துகொண்டனர்.

அவருடைய வாழ்க்கைப் பயணத்தில் அவர் சந்தித்த எல்லாவற்றையும் பற்றிப் பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, தன்னுடைய இளமைப் பருவத்தில் தான் கற்றுக்கொண்ட பாடங்கள் பற்றியும் விவரித்துச் சொன்னார். நாம் செய்யும் வேலையைச் சரியான முறையில் செய்தாலே அது சாதனைதான் என்று குறிப்பிட்டார்.

தனது பட்டப் படிப்பை லண்டனில் படித்தார். பின்னர் MBBS, MS, MCh, FRCS போன்ற பட்டப் படிப்புகளையும் படித்துள்ளார். ‘இண்டர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் ஹேண்ட் சொசைடிஸ்’ அமைப்பில் அறுவை சிகிச்சையின் முன்னோடி விருதைப் பெற்ற முதல் இந்திய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் இவர். 1998-ல் லண்டனின் ‘ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ்’ உரையாளராக அழைக்கப்பட்ட முதல் இந்தியரும் இவரே.

அவருடைய வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்தப் புத்தக வெளியீட்டு விழா முதன்மை மருத்துவர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. ‘ரைட்’ மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ஸ்டேன்லி, அப்போலோ, ரைட் மருத்துவமனைகளிலிருந்து பல மருத்துவர்கள் பங்கேற்றனர்.

- வி. சாமுவேல்

SCROLL FOR NEXT