ஆசாத்
ராஜனுக்கு 19 வயது. முதலாம் ஆண்டு பொறியியல் மாணவன். கலகலப்பான இயல்புடையவன். எப்போதும் சுறுசுறுப்பாக ஏதாவது ஒரு வேலையைச் செய்தபடியே இருப்பான். சமீபமாய் ராஜனின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம். படிக்கும்போது படபடப்பாகக் காணப்படுகிறான்.
பிறரிடம் பேசுவதைக் குறைத்துக்கொண்டான். தனிமையையே விரும்புகிறான். அவனின் பொருட்களை யாராவது கேட்காமல் பயன்படுத்தினால் கூச்சல், சண்டை என வீட்டையே ரணகளமாக்குகிறான். தனது பொருட்கள் தான் வைத்த இடத்தில்தான் உள்ளதா எனத் திரும்பத் திரும்பச் சோதனையிட்டுக்கொண்டே இருக்கிறான்.
ராஜனின் விநோதமான நடவடிக்கைகளைக் கண்டு வருந்திய பெற்றோர், அவனை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள். மருத்துவர், ராஜனுடன் 20 நிமிடங்கள் பேசியதன் மூலமாக ராஜனுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினை ‘அப்ஸசிவ் கம்பல்சிவ் டிஸார்டர்’ (Obsessive compulsive disorder – OCD) எனப்படும் எண்ணச் சுழற்சி நோய் எனப் புரிந்துகொண்டார். ஓ.சி.டி என்பது என்ன? இதன் அறிகுறிகள் என்னென்ன? தீர்வு என்ன? ஆகியவற்றைக் குறித்து அறிந்துகொள்ள ஸ்டான்லி மனநல மருத்துவத்துறை வெளியிட்டுள்ள குறிப்பு உதவும்.
எண்ணச் சுழற்சி நோய் என்பது என்ன?
நம் எல்லோரையும் சில தருணங்களில், தொல்லை தரும் சிந்தனைகள் ஆட்கொள்வதுண்டு. ஆனால், எண்ணச் சுழற்சி (ஓ.சி.டி.) எனப்படும் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணங்கள் / செயல்பாடுகளின் தன்மை வேறுபட்டிருக்கும். எண்ணச் சுழற்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்த்தமற்ற / காரணம் இல்லாமல் வேதனைப்படுத்தும் / வதைக்கும் எண்ணங்கள் / பிம்பங்கள் அவர்களுக்குப் பெருத்த பதற்றத்தை / பயத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.
தீங்கு, ஆபத்து, அசுத்தம் தொடர்பான தவறான / எதிர்மறையான எண்ணங்கள் வந்து பதற்றத்தை விளைவிக்கும். இவ்வித எண்ணங்களைச் சமாளிக்கவோ எவ்வளவு முயன்றாலும் எளிதில் அதை விட்டு மீளவோ முடியாது. இந்த வகை எண்ணங்களை ஏற்படுத்தும் பதற்றம், இவர்களைக் கட்டாயமாக அதிக நடவடிக்கைகளில் / செயல்பாடுகளில் ஈடுபடத்தூண்டும்.
இதன்மூலம் தொடர் எண்ணங்களிலிருந்து விடுபடலாம் என இவர்களும் இத்தகைய அர்த்தமற்ற / முட்டாள்தனமான செயல்பாடுகள் எனத் தெரிந்தும் அதில் ஈடுபடத் தொடங்கிவிடுவார்கள். இதன் மூலம் கெட்டது நடப்பதைக் கட்டுப்படுத்தி விட்டதாகவும், தன்னைச் சுற்றி எல்லாம் சரியாகவும் பாதுகாப்பாகவும் உள்ளதாக உணர்வார்கள். அப்படி ஈடுபடும்போது எண்ணங்கள் தரும் பதற்றத்திலிருந்து சற்றே விடுதலை கிடைத்தது போல உணர்வார்கள், அது தற்காலிகமான ஒன்றே.
ஏனெனில், மறுபடியும் அப்படிப்பட்ட எண்ணங்கள் அவர்களைத் தாக்கும். அதனால் திரும்பத் திரும்ப கட்டாயத்தின் பெயரில் சில செயல்களில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பார்கள். இவ்வகை எண்ணங்களையும் செயல்பாடுகளையும் நிறுத்த நினைத்தாலும் ஏதோ பெரிய கெட்டது நடந்துவிடக்கூடும் என்ற பயம் / பதற்றத்தால், அதிலேயே ஆழ்ந்திருப்பார்கள்.
இவர்கள் எப்போதுமே விழிப்பு நிலையில் இருப்பது போல இருக்கும், தளர்வாகவோ ஓய்வாகவோ உணர முடியாது. இது தீவிரமாகும்போது தினசரி வாழ்க்கையையும் நேரத்தையும் சந்தோஷத்தையும் வெகுவாகப் பாதிக்கிறது. இவர்கள் முடிந்தவரை பிறருக்குத் தெரியாமல்தான் இத்தகைய கட்டாய செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள்.
விளைவுகள்
எளிதில் முடிக்கக்கூடிய விஷயங்களுக்கு இவர்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்வதால், வேறு எதற்குமே நேரமிருக்காது. இதனாலேயே, எளிதில் சோர்வடையக்கூடும். எண்ணங்களின் கோரத்தன்மையால், தங்களைப் பற்றியே தவறாக நினைத்து அவமானமாகக் கருதுவதும் உண்டு. தொடர்ந்துவரும் எண்ணங்களால் இவர்களால் சரியாக ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தவும் முடியாது.
காரணிகள்
எண்ணச் சுழற்சிக்கான சரியான காரணி இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும், சில காரணங்கள், வல்லுநர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மூளைக்குச் செய்தியை எடுத்துச்செல்லும் வேதியியல் பொருளான செரடோனின் ஓட்டம் தடைப்படுவதால் இது ஏற்படலாம், மரபணுவும் எண்ணச் சுழற்சிக்கு மற்றொரு காரணமாகக் கூறப்படுகிறது.
அறிகுறிகள்
* திரும்பத் திரும்பக் கைகள் கழுவுவதால், வெடிப்பற்று இருக்கும் கைகள்.
* மிகவும் அதிகமாகத் தண்ணீர் / சோப்பு / டாய்லெட்பேப்பரை பயன்படுத்துதல்.
* திடீரெனப் பரீட்சையில் மதிப்பெண் குறைதல்.
* வீட்டுப்பாடம் முடிக்க வெகுநேரம் எடுத்துக்கொள்ளுதல்.
* குடும்பத்தில் உள்ளவர்களை ஒரே கேள்விக்குத் திரும்பத் திரும்பப் பதில் சொல்லச் சொல்வது.
* ஏதேனும் நோய் தொற்றிவிடுமோ என்ற விடாத அச்சம்.
*மிக அதிகமாகத் துணிகளைத் துவைப்பது.
* அதிகமாகச் சுத்தம் பார்ப்பது.
* யாருக்கோ ஏதோ மோசமான சம்பவம் நடக்கப்போகிறதென்று தொடர் பயம். அந்த ஐயத்தைப் போக்கிக்கொள்ள அளவுக்கு அதிகமாகக் கேள்வி கேட்பது.
சிகிச்சைகள்
* அறிவாற்றல் நடத்தை
சிகிச்சை (சிபிடி)
* மன அழுத்த மேம்பாட்டு சிகிச்சை.
* தேர்ந்தெடுக்கப்பட்ட செரடோனின் மறு உபயோகத் தடுப்பான்களை எடுத்துக்கொள்வது.
* க்லோமிபிரமைன்.
நன்றி: மனநல மருத்துவத்துறை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை