தொகுப்பு: ஷங்கர்
காற்றில் சிறிது ஈரத்தை உணர்ந்தாலே மோர் அருந்துவதை நிறையப் பேர் நிறுத்திவிடுகின்றனர். வெண்ணெய் நீக்கப்பட்ட கலோரிகள் குறைவாகக் கொண்ட மோரை ஆண்டு முழுவதும் அருந்துவது உடலுக்குத் தேவையான வைட்டமின்களையும் தாதுச்சத்தையும் தருகிறது.
இந்தியாவில் மோரில் சேர்க்கப்படும் சீரகம், மிளகு, இஞ்சி, மிளகாய், கொத்துமல்லித் தழை போன்றவை மருந்துத் தன்மையைத் தருகின்றன. செரிமானத்தை எளிதாக்கி எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பவை இவை. மோரில் உள்ள கால்சியமும் புரதமும் உடலுக்குத் தேவையானவை. எல்லாவற்றையும்விட வயிற்றை நிஜமாகவே குளிர்விக்கும் திரவம் மோர்.
வயிற்றுப்போக்கால் இறக்கும் ஒரு லட்சம் குழந்தைகள்
ரோட்டா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் வயிற்றுப் போக்கால் இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் குழந்தைகள் இறக்கிறார்கள். பிரசவம் சார்ந்த பிரச்சினைகள், நிமோனியாவை அடுத்து பச்சிளம் குழந்தைகளைக் கொல்வதில் வயிற்றுப்போக்கு மூன்றாம் இடம் வகிக்கிறது.
ரோட்டா வைரஸ் பாதித்த வயிற்றுப்போக்கைத் தடுப்பதற்கான தடுப்பூசி மருந்தை 2016-ம் ஆண்டு அரசே தயாரித்து மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தியது. அதன் பெயர் ரோட்டா சில். குழந்தை பிறந்து ஆறு, பத்து, 14 வாரங்களில் மூன்று முறை போடப்பட வேண்டும். தடுப்பூசிகளை அறிமுகப்படுத்திய பின்னரும், இந்தியாவில் வயிற்றுப் போக்கால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளதற்குக் காரணம் உணவூட்டக் குறைபாடும் வளர்ச்சிக் குறைபாடுமே.
அம்மாவின் வயிற்றுக்குள்ளிருந்து பார்க்க முடியும்
காட்சிகளைப் பிரித்தறிவற்கு முன்பாகவே கருப்பையில் இருக்கும் சிசுவின் விழித்திரையில் உள்ள ஒளித் திசுக்கள் இயங்கத் தொடங்கி விடுகின்றனவாம். ஒளியால் நுட்பமாகத் தூண்டப்படும் விழித்திரை செல்களின் துடிப்பாலேயே விழித்திரைக்கு ரத்தம் வருவதாகவும் கலிபோர்னியா பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.
இந்தத் துடிப்புகளே சிசு வளரும் நிலையில் இமைத்துடிப்பாக மாறுகிறது. இரவு-பகல் மாற்றங்களையும் உணர்வதற்கு இந்த செல்களே காரணமாக உள்ளன.