இந்தியாவில் 39 சதவீதம் பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் மிகவும் பாதிப்படைந்தி ருப்பதாகத் தேசிய குடும்ப நலம், சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் 28 சதவீதம் பேர் ஊட்டச்சத்துப் பற்றாக்குறைபாட்டுடன் இருக்கின்றனர். இந்தியாவில் 27 சதவீத குழந்தைகள் குறைந்த உடல் எடையுடன் பிறக்கின்றனர்.
6 மாதம் முதல் இரண்டு வயதுவரை உள்ள குழந்தைகளில் வெறும் 10 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே ஊட்டமான சத்துணவு கிடைக்கின்றது. சிறு வயதில் ஊட்டச்சத்து இல்லாமல் வளரும் குழந்தைகள் உடல், மூளை வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிப்படைகிறார்கள். கல்வியில் தொடங்கி பிற்காலத்தில் எல்லாவிதமான செயல்பாடுகளிலும் அந்தக் குழந்தைகள் பின்தங்கிவிடுகிறார்கள்.
கர்ப்பிணிகளுக்கான உணவு
கர்ப்பிணிகள் குழந்தை வயிற்றில் வளரும் போதும் சரி, பிறந்த பின்னும் சரி முறையான ஊட்டச்சத்து நிறைந்த உணவினை சாப்பிட்டால்தான் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்று வளர்க்க முடியும். மீன், மூட்டை, பாதாம் பருப்பு, வாதுமைக் கொட்டை, முருங்கைக்கீரை, பேரீச்சை, வெள்ளை சர்க்கரையைத் தவிர்த்து நாட்டுச் சர்க்கரை, சிறுதானிய உணவுகள், வாழைப்பழம் ஆகியவற்றைத் தினசரி உணவு வகைகளில் இடம்பெறுமாறு அவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மிகையும் குறையே
ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏழை மக்களும், அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்தினால் வசதிமிக்க மக்களும் பாதிப்படைவது இன்று வாடிக்கையாகிவிட்டது. ஊட்டச்சத்துக் குறைபாட்டால் சிறுவர் - சிறுமிகள், ரத்த சோகை, அடிக்கடி சளிபிடித்தல். தேவையில்லாமல் காய்ச்சல் போன்றவற்றால் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அளவுக்கதிகமான ஊட்டச்சத்துணவு உண்ணும் குழந்தைகள் சிறுவயதிலேயே உடல் பருமன், சிறுவயது சர்க்கரை நோய், எளிதில் பூப்பெய்வது போன்ற பிரச்சினைகளை எதிர் கொள்கிறார்கள். இந்த இரண்டு பிரச்சினைகளுமே கவனிக்கப்பட வேண்டியவை.
பெண்களுக்குப் பாதிப்பு அதிகம்
ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். ஏழ்மை, வறுமை, இளவயது திருமணம், கல்வியின்மை, சுகாதாரமின்மை, அவரவர் உடல் ஆரோக்கியத்திற்கு என்ன சத்துக்கள் தேவை என்ற சரியான விழிப்புணர்வு இல்லாமை என இதற்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அதிகரித்து வரும் துரித உணவு மோகம் காரணமாக, விழிப்புணர்வு உள்ளவர்களிடமும் இந்த ஊட்டச்சத்து பற்றாக்குறை நிலவுகிறது. பதின்ம வயதுப் பெண்களில் 60 சதவீதம் பேர் ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
சத்தான உணவு
இன்று உடல் உழைப்பு குறைந்துவிட்டதால், மாவுச் சத்து அதிகம் உள்ள அரிசி, கோதுமை போன்றவற்றைக் குறைத்து புரதம் அதிகம் உள்ள பொருட்களைச் சாப்பிடலாம். அரிசிக்குப் பதிலாக நார்ச்சத்தும் நுண்ணூட்டச்சத்துகளும் அதிகம் உள்ள தினை அரிசி, வரகு அரிசி, சாமை, குதிரைவாலி, பனிவரகு, மூங்கில் அரிசி போன்ற சிறுதானியங்களில் சமைக்கப்பட்ட உணவை இருவேளை சாப்பிடலாம். கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு போன்றவற்றை முளைக்கட்டிய பிறகு சாப்பிட்டால் வைட்டமின் சி அதிகரித்து இளமையைப் பாதுகாக்கும். வாழைத்தண்டு, வாழைப்பூ, கீரை வகைகள், அவரை, பழங்கள் ஆகியன கொழுப்பைக் குறைக்கும், புற்றுநோயிலிருந்தும் இதய நோயிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.
எது சரியான உணவு?
கார்போஹைட்ரேட் என்று சொல்லப்படும் மாவுச்சத்து, புரோட்டீன் எனப்படும் புரதம், கொழுப்பு ஆகிய இந்த மூன்றும் சரிவிகிதத்தில் கலந்திருக்கும் உணவே நமக்கு ஏற்ற சிறந்த உணவு. இவற்றைத் தவிர நுண்ணூட்டச்சத்துக்களான வைட்டமின்கள், மினரல்கள் உடலுக்குச் சிறிய அளவில் தேவை.
சக்கை உணவு வேண்டாமே
சிக்கனை மொறுமொறுப்பாகவும் மெது மெதுவென்றும் செய்து கொடுக்கும் சிவப்பு நிறத்தில் கடைகளில் கூட்டம் கூட்டமாகச் சென்று சாப்பிடுகிறார்கள். இந்த மாதிரியான கோழி வறுவல்களைச் சாப்பிடுவது இதயநோயை விரைவிலேயே வரவைத்துவிடும். பீட்சா, பர்கர், சிப்ஸ், பிஸ்கட், கேக், பேக்கரி பண்டங்கள் என்று சாப்பிடுவதும் கெடுதலே. தீங்கு விளைவிக்கும் கூட்டத்தில் சேர்ந்ததுதான் இந்த ஐஸ்கிரீம்.
நோயின் விளைவிடம்
சாலையோரங்களில் விற்கும் திறந்தவெளி உணவகங்களும் தள்ளுவண்டி துரித உணவகங்களும் தற்போது பெருகிவிட்டன. இந்த உண வகங்களின் கலக்கப்படும் சாயங்கள், அனைத்தும் ரசாயனம். பெட்ரோலியம், தார்கெசோலின் போன்ற மூலப் பொருட்களால் ஆனவை. இவை சிறுநீரகத்தைப் பாதிக்கக் கூடியவை.
புற்றுநோயை வரவேற்பவை. இந்த துரித உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் ‘மோனோ சோடியம் குளுட்டமேட், சோடா உப்பு போன்றவை, இளம் வயதிலேயே ரத்தக் கொதிப்பைப் பரிசாக அளிக்கும். இங்கே பயன்படுத்தப்படும் சுவையூட்டிகள், மணமூட்டிகள், நிறமூட்டிகள் நமது ஆரோக்கியத்திற்கு வேட்டுதான் என்பதை உணர்ந்து அவற்றைத் தூரவிலக்குவதே சிறந்தது.
ஊறு விளைவிக்கும் பரோட்டா
தற்போது ’பரோட்டா’ - சிறுவர்முதல் பெரியவர்வரை மிகவும் விரும்பிச் சாப்பிடும் உணவாகிவிட்டது. இதற்குரிய மைதா மாவை மிருதுவாக்குவதற்காக அலெக்சான் என்ற வேதிப்பொருள் கலக்கிறார்கள். இந்த அலெக்சான் கணையத்தில் உள்ள பீட்டா செல்களைப் பாதித்து நீரிழிவு நோய்க்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது. திரும்பத் திரும்ப மீண்டும் மீண்டும் பொரித்துப் பயன்படுத்தப்படும் எண்ணெய், வனஸ்பதி, மிகைக் கொழுப்பு போன்றவற்றால், 10 வயதிலேயே 20 வயதுபோல் அதிகமான உடல்பருமனுக்குச் சிறுவர்கள் ஆளாவதைக் கண்கூடாக இன்று காணமுடிகிறது.
ஆரோக்கியத்தின் ஆணிவேர்
ஊட்டச்சத்து என்பது சிறுவர் - சிறுமியர் - குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல்; பெரியவர்களுக்கும் அவசியமானது. மருத்துவர்கள் கொடுக்கும் சத்து மாத்திரைகளில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் நமது உடல் கிரகித்துக்கொள்ளும் என்று உறுதியாகக் கூற முடியாது. உணவுகளின் மூலமாகப் பெறப்படும் சத்துக்களை நமது உடல் முழுமையாக ஏற்றுக்கொள்ளும். நாம் தினந்தோறும் உண்ணும் உணவுகள், பச்சைக்காய்கறிகள் பழங்கள், முழு தானியங்கள், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், கொட்டைகள் போன்றவற்றில் சத்துகள் நிறைந்துள்ளன. நாம் உண்ணும் உணவுதான் ஆரோக்கியத்தின் அடிப்படை ஆணிவேர்.
ஆரோக்கியம் வளர்ப்போம்
நம் பிள்ளை களைப் பெரிய கல்லூரிகளில் படிக்கவைத்து நிறையப் பணம் சம்பாதிப்பவர்களாக மட்டும் உருவாக்க நினைக்காமல்; ஆரோக்கியம் உள்ளவர்களாக உருவாக்க முனைய வேண்டும். ஆரோக்கியம் கொண்டவர்களால் மட்டுமே அனைத்தையும் சாதிக்க முடியும். கொஞ்சம் முயன்றால், போதிய விழிப்புணர்வைப் பெற்றால், நம் முன்னோரைப் போன்று, நாமும் உணவையே மருந்தாக்கிக் கொள்ள முடியும். முயற்சிக்கு ஏது தோல்வி?
- ராஜேஸ்வரி ரவிக்குமார், சிறுதானிய ஊட்டச்சத்து உணவு நிபுணர்,
தொடர்புக்கு: sugadietnaturalfoods@gmail.com